மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கான வீட்டுத்திட்டங்கள் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட 50,000 வீடுகளில் 25,000 வீடுகள் தொடர்பான கேள்விகோரல்கள் முடிவடைந்துள்ளதாக வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி விசேட செயலணியின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் UNHABITAT, UNOPS நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டு கட்டுமானப்பணிகளை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி விசேட செயலணியின் செயலாளர் வே.சிவஞானசோதி மேலும் கூறுகையில்,
ஒப்பந்தக்காரர்களை தெரிவு செய்யும் கடினமான செயற்பாடு முடிவுக்கு வந்தமையால் இந்த திட்டத்தை விரைவாக அமுலாக்கும் செயன்முறை எதிர்வரும் 2 அல்லது 3 வாரங்களுக்குள் முன்னெடுக்கப்படும். அத்துடன் இது ஒரு நிரந்தரமான கல்வீட்டு திட்டம்.
இதேவேளை, 1847 கிலோமீற்றர் நீளமான வீதிகளை அமைக்கும் வேலைத்திட்டம் தொடர்பாக கேள்வி கோரல் செயன்முறைகள் முடிவுறுத்தப்பட்டு அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெறுவதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் மன்னார் மாவட்டத்தில் மடு தேவாலய பிரதேசத்தில் யாத்திரிகர்களுக்கான ஓய்வு விடுதிகளை நிர்மாணிப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.