தமிழகத்தை ஆட்சி செய்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சினிமா துறையில் இருந்து அரசியலுக்கு வந்த பிரபலங்களில் ஒருவர் ஆவார். இவர் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் தூண்டுதலின் காரணமாக அரசியலில் நுழைந்தார்.
மேலும் எம்.ஜி.ஆர். அவர்களின் மரணத்திற்கு பிறகு அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராகவும், தமிழகத்தின் முதலமைச்சராகவும் இருந்துள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டு முதல் முதலமைச்சராக இருந்து வரும் ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு நடைப்பெற்ற சட்டமன்ற தேர்தலிலும் வெற்றிபெற்று முதலமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றார். அவர் உடல் நலக் குறைவு காரணமாக கடந்த டிசம்பர் மாதம் 5ஆம் திகதி மரணமடைந்தார்.
இவருடைய வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெலுங்கு பட உலகில் பிரபல இயக்குநர் ஆன தசாரி நாராயணன் ராவ் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக எடுக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்காக கதை எழுதும் பணியில் நாராயண ராவ் ஈடுபட்டு இருப்பதாகவும், அம்மா என்ற பெயரையே படத் தலைப்பாக வைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தலைப்பையே தெலுங்கு சினிமாவின் வணிக சங்கத்தில் பதிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விரைவிலேயே இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
யார் ஜெயலலிதாவாக நடிக்கப் போகிறார் என்பது தெரியவில்லை. ஜெயலலிதாவாக நடிக்க ஆசையாக இருப்பதாக நடிகைகள் ரம்யா கிருஷ்ணன் மற்றும் த்ரிஷா தெரிவித்துள்ளனர்.
ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதா கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் வாட்ஸ்ஆப்பில் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.