30 வருடங்களுக்கு மேலாக யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லிம் மக்களுக்கு கிடைத்த நன்மைகள் என்ன? புதிய அரசாங்கத்தின் வெற்றிக்கு கரம்கொடுத்த மலையக தமிழ் மக்களுக்கு கிடைத்த நன்மைகள் என்ன? என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகின்றது

342

 

 

இலங்கையில் ஜனவரி 8ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன (6,217,162 – 51.28%) தன்னை எதிர்த்து போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷவை (5,768,090 – 47.58%) தோற்கடித்து இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியேற்றார்.

தேர்தல் காலத்தில் அறிவித்தபடி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்தார். அதன்பின்னர் புதிய அமைச்சரவை பதவியேற்றது. ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை உள்ளிட்ட அரசாங்கத்தை நல்லாட்சி அரசாங்கம் என்று அ​ழைக்கின்றனர்.

புதிய நல்லாட்சி அரசாங்கம் நாட்டு மக்கள் மத்தியில் 100 நாள் வேலைத் திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளது. அதில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இரத்து செய்தல், சுயாதீன ஆணைக்குழுக்களை ஏற்படுத்தல், தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வருதல், அத்தியாவசிய பொருட்களின் விலை குறைத்தல், தகவல் அறியும் சட்டமூலத்தை நிறைவேற்றுதல் உள்ளிட்ட பல பிரதான அம்சங்கள் காணப்பட்டன.

‘நீதியான நிர்வாகம் – ஸ்தீரமான நாடு’ எனும் தொனிப்பொருளில் மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் பின்வரும் அம்சங்கள் காணப்படுகிறது.
* ஜனவரி 10 – புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன சத்தியப்பிரமாணம் செய்து கொள்வார்.
* ஜனவரி 11 – ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டு அனைத்து பாராளுமன்ற கட்சிகளும் உள்ளடங்கிய 25இற்கு மேற்படாத அமைச்சரவையொன்று அமைக்கப்படும்.
* ஜனவரி 12 – தேசிய ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக அனைத்துக் கட்சிகளையும் பொது அமைப்புக்களையும் இணைத்து தேசிய ஆலோசனை சபை அமைக்கப்படும்.
* ஜனவரி 19 – பாராளுமன்றம் கூட்டப்படும்.
* ஜனவரி 20 – அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் அங்கம் வகிக்கும் வகையில், கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும் வகையில் நிலையியல் கட்டளை சட்டம் திருத்தப்படும்.
* ஜனவரி 21 – நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கும் நடவடிக்கைகள் மற்றும் 18ஆவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்.
* ஜனவரி 25 – சுயாதீன ஆணைக்குழுக்களை அமைத்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்.
* ஜனவரி 28 – நடைமுறையிலுள்ள விருப்புத் தெரிவு வாக்களிப்புதுறை இரத்துச் செய்யப்படுவதற்கான யோசனை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.
* ஜனவரி 29 – பொதுமக்களுக்கான நிவாரணம் மற்றும் வாழ்க்கைச் செலவை குறைத்தல் தொடர்பில் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு முறை அறிமுகப்படுத்தப்படும்.
* ஜனவரி 30 – சம்பள அதிகரிப்பு, நேரடி மறைமுக வரிகள் நீக்கப்படும்.
* பெப்ரவரி 2 – பொதுமக்களின் பிரதிநிதிகளுக்கு ஒழுக்கக்கோவை அறிமுகப்படுத்தப்படும். * பெப்ரவரி 4 – நல்லாட்சி மற்றும் பொதுமக்களின் இறைமையை மீண்டும் கட்டியெழுப்பும் வகையில் சுதந்திர தினம் கொண்டாடப்படும்.
* பெப்ரவரி 5 – ஊழல்கள் மோசடிகள் தொடர்பாக விசாரிக்க ஆணைக்குழுக்கள் அமைக்கப்படும்.
* பெப்ரவரி 6 – தேசிய ஒளஷத கொள்கை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.
* பெப்ரவரி 18 – சுயாதீனக் குழுக்கள் நிறுவப்படும்.
* பெப்ரவரி 19 – தேசிய கணக்காய்வு சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டு, அது 3 வாரங்களில் நிறைவேற்றப்படும்.
* பெப்ரவரி 20 – தகவல்களை தெரிந்து கொள்ளும் சட்டமூலம் அறிமுகப்படுத்தப்படும்.
* மார்ச் 2 – புதிய தேர்தல் சட்டங்கள் தயாரிக்கப்பட்டு, அது அனைத்துக் கட்சிகளுக்கும் வழங்கப்படும்.
* மார்ச் 17 – தேர்தல் முறைகளில் திருத்தங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.
* மார்ச் 18 – தேசிய ஒளஷத கொள்கை நிறைவேற்றப்படும்.
* மார்ச் 19 – தேசிய கணக்காய்வு கொள்கை நிறைவேற்றப்படும்.
* மார்ச் 20 – தகவல்களை தெரிந்து கொள்ளும் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்.
* மார்ச் 23 – நியமனங்களுக்கான அரசியல் சபை அமைக்கப்பட்டு சுயாதீனக் குழுக்களின் நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்படும்.
* ஏப்ரல் 20 – நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைக்காக பாராளுமன்ற முறை நிறுவப்படும்.
* ஏப்ரல் 23 – பாராளுமன்றம் கலைக்கப்படும். இதனையடுத்து காபந்து அரசாங்கத்தின் கீழ் தேர்தல்கள் நடத்தப்படும். இதனடிப்படையில் அதிக ஆசனங்களை பெற்ற கட்சியின் சார்பில் பிரதமர் நியமிக்கப்படுவார். அதற்கு அடுத்தப்படியாக அதிக வாக்குகளை பெற்றவர் பிரதி பிரதமராக நியமிக்கப்படுவார். இந்த பதவிகளின் கீழ், 2 வருடங்களுக்கு தேசிய அரசாங்கம் ஒன்று நிறுவப்படும். இதன்கீழ் தேசிய கொள்கைகள் மற்றும் சவால்கள் வெற்றி கொள்ளப்பட்டு அரசியல் கலாசாரம் நிறுவப்படும்.
புதிய நல்லாட்சி அரசாங்கத்தின் 100 நாள் திட்டம் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில் 100 நாள் திட்டம் குறித்து மதிப்பீடு செய்து புள்ளி வழங்கினால் நூற்றுக்கு 40% புள்ளிகளையே வழங்க முடியும். காரணம் முக்கியமானதும் கட்டாயமானதுமான கேள்விகளுக்கு புதிய நல்லாட்சி அரசாங்கம் சரியாக பதில் அளிக்கத் தவறியுள்ளது.
வாக்குறுதி அளித்தது போன்று மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும் ரணில் விக்ரமசிங்க பிரதமராகவும் பதவியேற்றனர். ஆனால் 25ஆக மட்டுப்படுத்தப்படும் என்று கூறிய அமைச்சரவையில் முதலில் 27 பேர் அங்கம் வகித்தனர். பின்னர் அமைச்சரவை 28ஆக உயர்ந்து இறுதியில் 39ஆக விஸ்வரூபம் எடுத்தது. ஆனால் அமைச்சரவையில் அனைத்துக் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சரவை அமையவில்லை. இடைநடுவில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைச்சரவையில் அங்கம் பெற்றது.
தேசிய ஆலோசனை சபை நிறுவப்படும் என்று புதிய அரசாங்கம் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. ஆனால் தேசிய நிறைவேற்று சபை என்று ஸ்தாபிக்கப்பட்டது. எனினும் சிவில் சமூகங்கள் இதில் உள்ளடக்கப்படவில்லை.
ஜனவரி 19ம் திகதி பாராளுமன்றம் கூடும் என அறிவித்த போதும் 20ம் திகதியே பாராளுமன்றம் கூடியது. நிலையியற் கட்டளை திருத்தம் பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டு இன்னும் செயற்பாட்டில் உள்ளதே தவிர பூர்த்தி செய்யப்படவில்லை.
அடுத்ததாக 100 நாள் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட மிக முக்கியமான வேலைத் திட்டமே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழித்து அதிகாரத்துடன் கூடிய பாராளுமன்றம் முறையை ஏற்படுத்தல் ஆகும். அதன் கீழ் 18வது திருத்தச் சட்டத்தை இல்லாது செய்யும் வகையில் அரசியல் அமைப்பில் 19வது திருத்தச் சட்டத்தை செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி 19வது திருத்தச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டு கடந்த மார்ச் 15ம் திகதி பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டது. பின்னர் வர்த்தமானியிலும் வெளியிடப்பட்டது. இதனை அடுத்து அரசாங்கத்தின் தலைவர் ஜனாதிபதியா பிரதமரா என்ற குழப்பம் ஏற்பட்டது. இதனால் புதிய அரசாங்கத்தில் கூட்டு சேர்ந்துள்ள ஜாதிக ஹெல உறுமய எதிர்ப்பு வெளியிட்டது. இந்த எதிர்ப்பை எதிர்கட்சிகள் சிலவும் முன்வைத்தன.
இந்த நிலையில் ஏப்ரல் 19ம் திகதி 19வது திருத்தச் சட்டம் பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டு விவாதத்தின் பின் வாக்கெடுப்பு நடைபெறும் என்று கூறப்பட்டது. எனினும் அது நடைபெறவில்லை. தற்போது இறுதியாக 27ம் திகதி 19வது திருத்தம் பாராளுமன்றில் சமர்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்றுடன் நூறு நாள் திட்டம் நிறைவு பெறுவதால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கும் புதிய அரசின் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றே கருத வேண்டியுள்ளது.
மக்கள் பிரதிநிதிகளுக்கான ஒழுக்கக் கோவை மார்ச் 22ம் திகதி பாராளுமன்றில் சமர்பிக்கப்படும் என்று கூறப்பட்ட போதும் அந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.
நூறு நாள் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட மற்றுமொரு முக்கிய அம்சமாக தேர்தல் முறை மாற்றம் காணப்படுகிறது. விகிதாசார முறை மற்றும் தொகுதிவாரி முறை என்பன கலந்த தேர்தல் முறை ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என்று அளிக்கப்பட்ட வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. தேர்தல் திருத்தச் சட்டம் இன்னும் பாராளுமன்றில் சமர்பிக்கப்படவில்லை. ஆனால் நூறாவது நாளான இன்று வந்துள்ள செய்தியின்படி புதிய தேர்தல் முறை அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டு அதற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் விரைவில் அது பாராளுமன்றில் சமர்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய நல்லாட்சி அரசாங்கத்தின் குறிப்பிடத்தக்க வெற்றியாக அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பை கருத முடியும். புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் 10ற்கும் மேற்பட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் எரிபொருள் விலையும் குறைக்கப்பட்டது. இது மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆனால் வரவு செலவுத்திட்டத்தில் கூறப்பட்ட சில நிவாரணங்கள் இன்னும் பயனாளிகளை சென்றடையவில்லை. குறிப்பாக முதியோர் வங்கி கணக்கு வட்டி உயர்வு, தங்க நகை அடகு வட்டி குறைப்பு உள்ளிட்ட சில திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளதாக தெளிவான தகவல் கிடைக்கப்பெறவில்லை.
மேலும் 100 நாள் திட்டத்தில் அறிவிக்கப்பட்டது போன்று அரச ஊழியர்களுக்கான சம்பளம் 10 ஆயிரம் ரூபாவால் அதிகாரிக்கப்பட்டது. தனியார் ஊழியர்களின் சம்பளத்தை 2500 ரூபாவால் அதிகரிக்க பரிந்துரை செய்யப்பட்டது. கல்விக்காக தேசிய வருமானத்தில் 6% நிதி ஒதுக்கப்பட்டது. சம்பள உயர்வு விடயத்தில் 100 நாள் திட்டத்தின் மூலம் நல்லாட்சி அரசாங்கம் வெற்றி கண்டுள்ளது.
இலங்கையில் ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பெப்ரவரி 4ம் திகதி சுதந்திர தினம் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டவாறே சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டது.
இதேவேளை, ஊழல் மோசடி குறித்து ஆராய ஆணைக்குழு உருவாக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என அளிக்கப்பட்ட வாக்குறுதியும் நிறைவேற்றப்பட்டுள்ளது. முறைப்பாடுகளின் அடிப்படையில் ஊழல் மோசடியுடன் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டும் வருகின்றனர். பிரதமர் தலைமையில் இச்செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
தேசிய ஔசத கொள்ளை சட்டமூலம் பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டதன் மூலம் 100 நாள் திட்டத்தின் மற்றுமொரு வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது. அதேபோன்று இலவச வைபை வலயம் ஏற்படுத்தப்படும் என்ற வாக்குறுதியும் பல இடங்களில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
100 நாள் திட்டத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்டது போன்று சுயாதீன ஆணைக்குழுகள் அமைக்கப்படவில்லை. தேசிய கணக்காய்வு சட்டமூலம் கொண்டுவரப்படவில்லை (அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது). அனைத்து தரப்பாலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட தகவல் அறியும் சட்டமூலம் கொண்டுவரப்படவில்லை (அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது). புதிய தேர்தல் சட்டம் அறிமுகப்படுத்தப்படவில்லை. தேர்தல் முறை மாற்ற சட்டமூலம் பாராளுமன்றில் சமர்பிக்கப்படவில்லை. இந்த விடயங்களில் நல்லாட்சி அரசாங்கம் படுதோல்வி கண்டுள்ளது.
இறுதியாக 23ம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இப்போதுள்ள சூழ்நிலையில் பாராளுமன்றம் கலைக்கப்படுமா என்பது சந்தேகமே! ஆனால் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதியின்படி பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு அதிக ஆசனங்களைப் பெறும் கட்சியில் இருந்து பிரதமரும் அதிக வாக்குகள் பெறும் நபர் பிரதி பிரதமராகவும் நியமிக்கப்படுவார். பின் அனைத்து கட்சிகளையும் கொண்ட தேசிய அரசாங்கம் ஒன்று நிறுவப்படும்.
வெறுமனே 100 நாள் திட்டத்தை மாத்திரம் எடுத்து அதனை ஆய்வுக்கு உட்படுத்தினால் திட்டத்தை செயற்படுத்திய அரசாங்கம் 100க்கு 40 புள்ளிகளைப் பெற்றுள்ளது எனலாம். மிகுதி 60 புள்ளிகளைப் பெற மேலும் கால அவகாசம் கோரலாம். நாட்டில் அரசியல் ஸ்தரத்தன்மை ஏற்படுத்தி விடுபட்ட திட்டங்களை செயற்படுத்த முயற்சித்தால் பூரண ஜனநாயக இலங்கை நாட்டை கட்டியெழுப்பலாம்.
புதிய அரசாங்கம் பதவியேற்றது தொடக்கம் இன்றுவரை கடந்த 30 வருடங்களுக்கு மேலாக யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லிம் மக்களுக்கு கிடைத்த நன்மைகள் என்ன? புதிய அரசாங்கத்தின் வெற்றிக்கு கரம்கொடுத்த மலையக தமிழ் மக்களுக்கு கிடைத்த நன்மைகள் என்ன? என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகின்றது.
வடக்கு கிழக்கை பொறுத்தவரையில் தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் பேச்சுவார்த்தை மட்டத்தை தவிர வேறு எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. காணாமல் போனவர்கள் விடயத்திலும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் திருப்தி அளிக்கக்கூடியதாக இல்லை. தேசிய நல்லிணக்க விடயத்தில் ஓரளவு திருப்தி காணக்கூடிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளது. குறிப்பாக தேசிய நல்லிணக்க சபை, ஜனாதிபதி செயலணி போன்றவை நிறுவப்பட்டமை தமிழில் தேசிய கீதம் பாட அனுமதி அளிக்கப்பட்டமை போன்ற விடயங்களை கூறலாம்.
மேலும் வடக்கில் இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்திருந்த பொது மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளமை வரவேற்கக்கூடிய ஒன்றாகும். 100 நாள் திட்டத்திற்குள் கிட்டத்தட்ட 500ற்கும் மேற்பட்ட ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளமை முன்னைய அரசாங்கத்தின் செயற்பாடுகளோடு ஒப்பிடுகையில் திருப்தி அளிக்கிறது. வடக்கில் ஆளுநர் மாற்றப்பட்டமை வட மாகாண செயலாளர் மாற்றப்பட்டமை எதிர்பார்ப்பை நிறைவேற்றும் செயற்பாடுகளாக கணிக்கப்படுகிறது. ஆனால் தமிழர்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வு விடயத்தில் இன்னும் சூனிய நிலையே காணப்படுகின்றமை கவலை அளிக்கிறது.
மலையகத்தை பொறுத்தவரையில் தேர்தல் காலத்தில் அறிவிக்கப்பட்டது போன்று 7 பேர் காணியுடன் தனி வீடு கட்டித்தரப்படும் என்ற திட்டம் ஆங்காங்கே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் அடிக்கல் நாட்டப்பட்டதோடு நிற்கிறது. ஆனால் ஒட்டுமொத்த மலையக மக்களும் 7 பேர்ச் காணிக்கு உரித்துடையவர்கள் என்ற ஒரு பொது அறிவிப்போ, ஜனாதிபதி பிரகடனமோ, அமைச்சரவை அங்கீகாரமோ வெளியிடப்படாமை மலையக மக்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றமாக்கியுள்ளது. ஆனாலும் மலையக மக்கள் காணிக்கு உரித்துடையவர்கள் என்ற நிலைப்பாட்டை அரசாங்கம் ஏற்றுக் கொண்டு திட்டங்களை செயற்படுத்தியமை வரவேற்கப்படுகிறது. முதல் கட்டமாக பண்டாரவளையில் எதிர்வரும் 25ம் திகதி காணி உரிமை பத்திரம் வழங்கப்படவுள்ளமை புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் மலையகத்திற்கு பல்கலைக்கழக கல்லூரி அமைக்கப்படும், தேசிய பாடசாலைகள் உருவாக்கப்படும், பாடசாலைகள் தரம் உயர்த்தப்படும் என்றெல்லாம் அளித்த வாக்குறுதிகள் இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை.
இருந்தபோதும் ஒட்டுமொத்தமாக 100 நாள் திட்டத்தை கடந்த அரசாங்கத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையில் புது மாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்ள வேண்டும். கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற அநியாய செலவுகள், ஏதேச்சாதிகார போக்கு, அதிகார துஸ்பிரயோகம், சட்டவிரோத செயல்கள், ஊழல் மோசடிகள் உள்ளிட்ட பல அநாவசிய விடயங்களுக்கு புதிய அரசாங்கம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது என்பதை மறுக்க முடியாது.

 

SHARE