30 தமிழ் அரசியல் கைதிகளை இன்று விடுவிக்க நடவடிக்கை!

285

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளில் 30 பேர் இன்று விடுவிக்கப்படவுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீண்ட காலம் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படாத நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கடந்த காலங்களில் சிறைக் கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

எவ்வாறாயினும், கைதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டிருந்தது.

இதன்பிரகாரம், சிறைக்கைதிகள் கடந்த 7ஆம் திகதி விடுதலை செய்யப்படுவார்கள் என உறுதி வழங்கப்பட்டிருந்த போதிலும், அவர்கள் விடுவிக்கப்படாததை தொடர்ந்து நேற்று காலை முதல் மெகஸின் சிறைக் கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில், தற்போது சிறையிலுள்ள கைதிகளை இரண்டு கட்டங்களாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள 29 சிறைக் கைதிகள் இன்று காலை முதல் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

SHARE