30 வயதை தாண்டியும் மவுசு குறையாத நான்கு பிரபல நடிகைகள்

255
நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா, காஜல் அகர்வால் ஆகியோரின் மவுசு 30 வயதை தாண்டியும் குறையவில்லை. தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிகிறது. இதனால் இளம் கதாநாயகிகள் படங்கள் இல்லாமல் தவிப்பில் உள்ளனர்.

கதாநாயகிகள்

கதாநாயகிகளின் சினிமா வாழ்க்கை 18 மற்றும் 20 வயதுகளில் ஆரம்பமாகிறது. நான்கைந்து ஆண்டுகள் நிலைத்து இருப்பார்கள். 25 வயதில் அவர்களை பட உலகம் ஓரம் கட்டிவிட்டு புதிய நடிகைகளை தேட ஆரம்பித்து விடும். இதுதான் திரையுலகில் சகஜமாக காணப்படும் நிலைமை. 30 வயது வரை நிலைத்து விட்டால், சாதனை. அந்த வயதையும் தாண்டினால் அதிர்ஷ்டம்.

இப்போது நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா, காஜல் அகர்வால் ஆகிய 4 பேரும் அந்த அதிர்ஷ்டக்கார கதாநாயகிகள் பட்டியலில் இருக்கிறார்கள். 30 வயதை தாண்டினால் கதாநாயகியாக நிலைக்க முடியாது என்ற கணிப்பை இவர்கள் உடைத்து விட்டனர். 4 பேரும் கைநிறைய படங்கள் வைத்து ஒரு நிமிடமும் ஓய்வில்லாமல் நடிக்கின்றனர். இளம் கதாநாயகிகள் இவர்களுடன் போட்டியிட முடியாமல் தவிக்கின்றனர்.

நயன்தாரா

நயன்தாரா 30 வயதை தாண்டி இருக்கிறார். ஆனாலும் சினிமாவில் அவரது மார்க்கெட் குறையவில்லை. தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகி இவர்தான். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தொடர்ந்து நம்பர்-1 இடத்தில் இருக்கிறார். கடந்த வருடம் நண்பேன்டா, மாஸ், தனிஒருவன், மாயா, நானும் ரவுடிதான் ஆகிய 5 படங்கள் இவர் நடித்து வந்தன. மலையாளத்திலும் பாஸ்கர் த ராஸ்கல் படம் வெளியானது.

இந்த வருடமும் அவரிடம் கைநிறைய படங்கள் இருக்கிறது. தமிழில் ஜீவாவுடன் திருநாள், சிம்புவுடன் இது நம்ம ஆளு, கார்த்தியுடன் காஷ்மோரா, விக்ரமுடன் இருமுகன் என்று 5 படங்கள் வைத்து இருக்கிறார். தெலுங்கில் சிரஞ்சீவியின் 150-வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

அனுஷ்கா

அனுஷ்கா 34 வயதில் அடியெடுத்து வைத்துள்ளார். இவர் சினிமாவுக்கு வந்து 11 வருடங்கள் ஆகிறது. அனுஷ்காவுக்காகவே புதுபுது கதாபாத்திரங்களை இயக்குனர்கள் உருவாக்குகிறார்கள். 2015 அனுஷ்காவுக்கு மறக்க முடியாத வருடமாக அமைந்தது. பாகுபலி, ருத்ரமாதேவி, இஞ்சி இடுப்பழகி ஆகிய 3 படங்கள் வந்தன. பாகுபலியையும் ருத்ரமாதேவியையும் ரூ.100 கோடி பட்ஜெட்டில் எடுத்து இருந்தனர். இவை சரித்திர படங்கள் என்பதால் ராணி வேடம், வாள் சண்டைகள் என்று கஷ்டப்பட்டார். இஞ்சி இடுப்பழகிக்காக உடம்பை குண்டாக்கினார்.

தற்போது சூர்யாவுடன் சிங்கம்-3 மற்றும் பாகுபலி இரண்டாம் பாகம் படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார். தெலுங்கில் ‘பாக்மதி’ என்ற படத்தின் கதையை எழுதி அனுஷ்கா கால்ஷீட்டுக்காக காத்து இருக்கிறார்கள்.

திரிஷா

திரிஷா சினிமாவுக்கு வந்த புதிதில் எப்படி இருந்தாரோ அப்படியே 32 வயதிலும் இருக்கிறார். முகத்தில் முதிர்ச்சி தெரியவில்லை. முன்னணி கதாநாயகிகள் பட்டியலில் இன்னும் இருக்கிறார். பட வாய்ப்புகளும் குவிகிறது. முதல் முறையாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் ‘நாயகி’ என்ற படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

காஜல் அகர்வாலுக்கு 30 வயது ஆகிறது. தமிழில் 2 படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார். தெலுங்கில் பவன் கல்யாண், மகேஷ்பாபு ஆகியோருடன் நடிக்கிறார். இந்தியில் ஒரு படம் வைத்துள்ளார். முன்னணி கதாநாயகர்களோடு இளம் நாயகிகளை ஜோடிகளாக பார்க்க ரசிகர்கள் விரும்பவில்லை இதனால்தான் இந்த 30 வயதை தாண்டிய 4 நடிகைகள் பக்கம் அதிர்ஷ்ட காற்று வீசுகிறது.

Age-of-30Crossing

top-telugu

SHARE