31 வருட காலமாக தாம் வாழ்ந்த காணியை விட்டு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதிக்குள் வெளியேறுமாறு தெரிவித்து ஒட்டப்பட்டுள்ள துண்டுப்ப் பிரசுரத்தால் தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக யாழ் கடற்கரை பழைய பூங்கா வீதி 5 ஆம் வட்டாரம் குருநகர் பகுதியைச் சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
கடற்கரை பழைய பூங்கா வீதி, 5 வட்டாரம் குருநகர் பகுதியை சேர்ந்த நாம் கடந்த 31 வருட காலமாக அப் பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றோம். தற்போது 68 குடும்பங்களுக்கு மேல் அங்கு வசித்து வருகின்றனர். தாம் இன்றுவரை சோலைவரி கட்டி வருவதாகவும் மின்சார சபையினால் மின் விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வாக்காளர் அட்டையும் தமக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.

எனினும் கடந்த 29.07.2016 அன்று குறித்த பகுதியிலுள்ள வீடொன்றினுள் எதிர்வரும் ஒன்பதாம் மாதம் 6 ஆம் திகதியினுள் அப்பகுதியில் இருந்து வெளியேறுமாறு J/67 திருநகர் கிராம சேவையாளர் சின்னராசா ருகுணாஸ் அவர்களால் துண்டுபிரசுரம் ஒட்டப்பட்டதாகவும் இதனால் தாம் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிவித்தனர். குறித்த காணி நீதிமன்றுக்குரிய காணி என கூறியே இத் துண்டுப்பிரசுரம் ஒட்டப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

1985 ஆம் ஆண்டிலிருந்து தாம் இப் பகுதியில் குடியிருப்பதாகவும் கடந்தகால யுத்தத்தின்போது இடம்பெயர்ந்து மீளவும் 2010 ஆண்டு மீல்குடியமர்விற்கு வந்தபோது தற்காலிக வீடமைப்பிற்காக சிமெந்தும் மீள்குடியேற்ற கொடுப்பனவாக ரூபா 25 ஆயிரமும் தந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இப் பகுதியில் பிறக்கும் பிள்ளைகளுக்கு பிறப்பு சான்றிதழ்கள் இல்லை எனவும், ஒருவர் மரணமடைந்தால் அவரது மரணத்தை உறுதிப்படுத்த கிராம சேவையாளர் மறுப்பதாகவும் இதனால் இறப்பு சான்றிதழைக்கூட பெற முடியாதுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அப் பகுதியில் பலருக்கு தேசிய அடையாள அட்டை எடுப்பதற்கு மற்றும் பிற தேவைகளுக்கும் பிறப்பு அத்தாட்சி பத்திரம் என்கிற அடிப்படை அத்தாட்சி ஒன்றுமே இல்லை எனவும் இதனால் அவர்களின் கல்வி எதிர்காலம் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் கூறினர்.

இதற்கு காரணம் அப் பகுதி மக்கள் தனது பிரிவிற்குள் அடங்கவில்லை எனவும் அதனாலேயே அவர்களின் பதிவுகளை தன்னால் உறுதிப்படுத்த முடியவில்லை எனவும் கிராம சேவையாளர் கூறுகின்றார்.
இது குறித்து J/67 எமது செய்திப்பிரிவு கிராம சேவையாளரை தொடர்புகொண்டு கேட்டபோது அவர் இது தொடர்பாக தகவல் தர மறுத்ததோடு பிரதேச செயலாளரிடம் கேட்டறியும்படி கூறினார். அடுத்து யாழ்ப்பாண பிரதேச செயலரை தொடர்பு கொண்டு வினவியபோது இது தொடர்பாக ஆராய்ந்த பின் கூறுவதாகக் கூறி தொலைபேசி அழைப்பைத் துண்டித்தார.

31 வருடங்களாக இப் பகுதியில் குடியிருக்கும் தம்மை குடிபெயருமாறு தெரிவித்தால் தாம் எங்கே செல்வது எனவும், ஆகவே சம்மந்தப்பட்டவர்கள் இது தொடர்பாக தமக்கு நீதியான தீர்வு ஒன்றினை வழங்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்ததுடன் தவறின் நீதி கிடைக்கும்வரை போராட்டங்களை மேற்கொள்ளப் போவதாகவும், மேலும் தெரிவித்துள்ளனர்