பொலிசாரிக்கு நீதிபதி இளஞ்செழியன் அதிரடித் தீர்ப்பு.

281

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கைதியொருவர் பொலிசார் தன்னிடம் சொல்லச் சொல்ல தானே தனது கைப்பட எழுதியதாகக் கூறிய ஒப்புதல் வாக்குமூலத்தை ஒரு சான்றாக ஏற்க முடியாது என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்து, அந்த ஒப்புதல் வாக்குமூலத்தை நிராகரித்துள்ளார்.

கடந்த 1995 ஆம் ஆண்டு அரச விரோத குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டி கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவரை பொலிசார் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.

அப்போது அந்தக் கைதியினால் அளிக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம் எனக் கூறி பொலிசார் வாக்மூலம் ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

இந்த வாக்குமூலம் தொடர்பாக நீதிமன்றத்தில் சாட்சியமளித்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் 16 (1) ஆம் பிரிவின் கீழ் இந்த குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை சம்பந்தப்பட்ட கைதி சுயேச்சையாகவும், சுதந்திரமாகவும், சுயேச்சையாகவும் தன்னிடம் அளித்ததாகத தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, குற்ற ஒப்புதல் வாக்குமூலம் சுதந்திரமாக சுயேச்சையாக தடுப்புக்காவல் கைதியினால் வழங்கப்பட்டதா என்ற உண்மை விளம்பல் விசாரணை நடைபெற்றது.

அப்போது சாட்சியமளித்த தடுப்புக் காவல் கைதி, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம், பொலிசார் சொல்லச் சொல்ல தனது கைப்பட எழுதி தன்னால் கையொப்பமிடப்பட்டது என தெரிவித்தார்.

அத்துடன் தன்னிடம் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெற்றதாகக் கூறிய உதவிப் பொலிஸ் அத்தியட்சகரை, தான் இதற்கு முன்னர் கண்டதில்லை என்றும், அவரிடம் தான் எந்தவொரு ,குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தையும் அளிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் தன்னை விசாரணை செய்த பொலிஸ் குழு தாங்கள் செய்வதை எழுதித் தந்தால், நீதிமன்றில் விரைவாக ஆஜர் செய்வோம் என கூறியபடியால் அவர்கள் சொல்லச் சொல்ல அதனை, நானே எனது கைப்பட எழுதிக் கொடுத்தேன்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச் செயல்களை தான் செய்யவில்லை என தெரிவித்ததோடு, அவர்கள் என்னைத் தாக்கினார்கள் என்றும், அச்சுறுத்தல் காரணமாக அவர்கள் சொன்னதை அப்படியே எனது எழுதிக் கொடுத்தேன் என்றும் தெரிவித்தார்.

இதனையடுத்து நீதிபதி இளஞ்செழியன் தனது தீர்ப்பை வழங்கினார். அந்தத் தீர்ப்பில் அவர் தெரிவித்ததாவது:
பொலிஸ் மா அதிபரிலிருந்து, பொலிஸ் கான்ஸ்டபிள் வரையில் எந்தவொரு பொலிசாரினாலும் பதிவு செய்யப்படுகின்ற குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் சட்டப்படி செல்லுபடியற்றவை என சான்று கட்டளைச் சட்டத்தின் 25 ஆம் பிரிவு கூறுகின்றது.

ஆனால், அதற்கு விதிவிலக்காக, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தரத்திற்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகளினால் பதிவு செய்யப்படும் குற்ற ஒப்பதல் வாக்குமூலத்தை, சட்டப்படி சான்றுப் பொருளாக ஏற்க முடியும் என பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் 16 ஆம் பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டிருக்கின்றது.

இருந்தபோதிலும், ஒருவரை அச்சுறுத்தி, தூண்டிவிட்டு அல்லது வாக்குறுதியளித்து பெறப்படுகின்ற குற்ற ஒப்புதல் வாக்குமூலம் சட்டப்படி செல்லுபடியற்றது என சான்று கட்டளைச் சட்டத்தின் 24 ஆம் பிரிவு கூறுகின்றது.

இந்த வழக்கில், உதவி பொலிஸ் அத்தியட்சகரிடம் எந்தவொரு குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வழங்கவில்லை என தடுப்புக்காவல் கைதி தெரிவிக்கின்றார் எதிரியினால் கையெழுத்தில் எழுதப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலமே மன்றில் முன்வைக்கப்பட்டது.

அதில் எதிரி தானே குற்றங்களைச் செய்ததாக ஒப்புக்கொண்டு அவரே தனது கைப்பட எழுதி ஒப்பமிட்டு தந்துள்ளார் எனக் கூறி, குற்ற ஒப்புதல் நீதிமன்றில் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதனை, கைதி மறுத்துரைத்துள்ளார். அத்துடன், பொலிசார்; சொல்ல சொல்லத்தான், தான் அதை எழுதியதாக மன்றில் தெரிவித்தார்.

அவர் தானே குற்றத்தை ஒப்புக்கொண்டு சுயமாக எழுதிக் கொடுக்கவில்லை.

எனவே சம்பந்தப்பட்ட தடுப்புக்காவல் கைதியிடமிருந்து, குற்ற ஒப்புதல் வாக்குமூலம் சுயேச்சையாக, சுதந்திரமாக பெற்ப்பட்டது என்பதை அரச தரப்பு எண்பிக்கவில்லை.

எனவே தடுப்புக்காவல் கைதியினால் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை இந்த வழக்கில் ஒரு சான்றாக ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்து நீதிபதி இளஞ்செழியன் அதனை நிராகரித்தார்.

இதனையடுத்து, இந்த எதிரிக்கு எதிராக வழக்கைத் தெடர்ந்து நடத்துவதற்கு, ஏதாவது வேறு சான்றுகள் உள்ளனவா அல்லது தடுப்புக்காவல் கைதியை விடுதலை செய்வதா என விரைவில் மன்றுக்கு அறிவிக்குமாறு அரச சட்டத்தரணிக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.

அதற்கென குறுகியா கால தவணையொன்றை நீதிபதி இளஞ்செழியன் வழங்கினார்.

இந்த வழக்கில் தடுப்புக் காவல் கைதியின் சார்பில் சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் முன்னிலையாகியிருந்தார்.

அரச தரப்பில் அரச சட்டத்தரணி திருமதி நளினி சுபாகரன் ஆஜராகியிருந்தார்.

SHARE