இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். 4000 பேர் அமர்ந்து பதவியேற்பு நிகழ்வை காணும் வகையில் ஏற்பாடுகள்

536

இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். குடியரசுத் தலைவர் மாளிகை முற்றத்தில்  இன்று மாலை 6 மணிக்கு நடைபெற்ற விழாவில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, நரேந்திர மோடிக்கு பதவிப் பிரமாணமும், இரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

கடவுள் பெயரால் அவர் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து அமைச்சர்களுக்கும் பிரணாப் முகர்ஜி, பதவிப் பிரமாணமும், இரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

கபினட் அமைச்சர்களாக, ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி, வெங்கையா நாயுடு, நிதின் கட்காரி, சதானந்த கவுடா, உமாபாரதி, நஜ்மா ஹெப்துல்லா, கோபிநாத் முண்டே, ராம்விலாஸ் பஸ்வான், கல்ராஜ் மிஷ்ரா, மேனகா காந்தி, ஆனந்த் குமார், ரவிசங்கர் பிரசாத், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த அஷோக் கஜபதி ராஜு, சிவசேனா கட்சியைச் சேர்ந்த ஆனந்த் கீதே, சிரோன்மணி அகாலிதளம் கட்சியைச் சேர்ந்த ஹர்சிம்ரத் கௌர் பாதல், நரேந்திர சிங் தோமர், ஜூயல் ஓரம், ராதா மோகன் சிங், தவர் சந்த் கெலோட், ஸ்மிர்தி இரானி, ஹர்ஷ வர்தன் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் திறந்தவெளி அரங்கில் மாலை 6 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற்றது.

மோடி பதவியேற்பு விழா நடைபெற்ற குடியரசுத் தலைவர் மாளிகையைச் சுற்றி பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதனையொட்டி குடியரசுத்தலைவர் மாளிகையின் திறந்தவெளி முற்றத்தில் 4000 பேர் அமர்ந்து பதவியேற்பு நிகழ்வை காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஒரே நேரத்தில் முக்கிய பிரமுகர்கள் கூடியதால் தலைநகர் டெல்லி பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

25,000 போலீஸார், துணை இராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

குடியரசுதின விழா அணிவகுப்பின் போது வழங்கப்படுகிற பாதுகாப்பை போன்றதொரு பாதுகாப்பு இவ்விழாவிற்கும் வழங்கப்பட்டது.

குடியரசுத் தலைவர் மாளிகைக்கு மேலே விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த விழாவில் முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவகௌடா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், மணிசங்கர் அய்யர், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், சார்க் அமைப்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டு நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

moodi-003  moodi-004

SHARE