4–வது டெஸ்ட் போட்டி! ரகானே சதம் – வலுவான நிலையில் இந்தியா

324
இந்தியா– தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 4–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 66 ரன்னுக்கு 3 விக்கெட்டை இழந்தது. கோஹ்லி–ரகானே ஜோடி பொறுப்புடன் ஆடியது. கோஹ்லி 44 ரன்னில் அவுட் ஆனார். அதன்பின் விக்கெட்டுகள் சரிந்தன.
ரோகித்சர்மா (1), சகா (1), ஜடேஜா (24) அடுத்தடுத்து வெளியேறினர். ரகானே மட்டுமே நிலைத்து நின்று விளையாடினார். முதல் நாளான நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 231 ரன் எடுத்தது. ரகானே 89 ரன்னுடனும், அஸ்வின் 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2–வது நாள் ஆட்டம் நடந்தது. ரகானே, அஸ்வின் தொடர்ந்து விளையாடினார்கள். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரகானே தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். அவருக்கு அஸ்வின் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.
ரகானே 96 ரன்னில் இருந்தபோது பவுண்டரி அடித்து சதத்தை பூர்த்தி செய்தார். 180 பந்தில் 10 பவுண்டரி, 2 சிக்சருடன் சதம் அடித்தார். 22–வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 5–வது சதமாகும். இந்திய அணி 93–வது ஓவரில் 250 ரன்னை கடந்தது.
பியட் வீசிய 96–வது ஓவரில் ரகானே 2 சிக்சர் அடித்து அசத்தினார். ரகானே– அஸ்வின் ஜோடி மிகவும் பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தது.
சிறப்பாக விளையாடி வந்த ரகானே 127 ரன்னில் இம்ரான் தாகீர் பந்தில் அவுட் ஆனார். அவர் 215 பந்தில் 11 பவுண்டரி, 4 சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார். ரகானே– அஸ்வின் ஜோடி 32.1 ஒவரில் 98 ரன் சேர்த்தது. அடுத்து அஸ்வினுடன் உமேஷ் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்திய அணி 106–வது ஓவரில் 300 ரன்னை தொட்டது.
இம்ரான் தாகீர் பந்தில் அஸ்வின் சிக்சர் அடித்து அரை சதத்தை பூர்த்தி செய்தார். இறுதியில் இந்திய அணி 117.5 ஓவர்கள் முடிவில் 334 ரன்களை சேர்த்து ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா அணி தரப்பில் அப்போட் 5 விக்கெட்டுகளையும் பியட் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
SHARE