ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா அரசுக்கு ஒன்றரைக் கோடி ரூபா இழப்பை ஏற்படுத்தியுள்ளார்-நாடாளுமன்ற உறுப்பினரான ஈ.சரவணபவன்

360

 

 

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அலைவரிசையைப் பயன்படுத்தி இதய வீணை ஒலிபரப்புச் சேவையை நடத்தியமைக்கான கட்டணத்தைச் செலுத்தாமல் முன்னாள் அமைச்சரும், ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா அரசுக்கு ஒன்றரைக் கோடி ரூபா இழப்பை ஏற்படுத்தியுள்ளார் எனப் பெரிய அளவிலான நிதி மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான ஈ.சரவணபவன் இன்று வியாழக்கிழமை காலை ஆணைக்குழுவின் அலுவலகத்துக்குச் சென்று இந்த முறைப்பாட்டைச் செய்தார்.

daklach saravanapavan

நாடாளுமன்ற உறுப்பினரான ஈ.சரவணபவன் தனது முறைப்பாட்டில் – இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அலைவரிசையை வாடகைக்குப் பெற்று 2000 ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை தனது ஒலிபரப்புச் சேவையான இதய வீணை ஒலிபரப்பை நடத்தியுள்ளார். இதற்கான கட்டணமாக ஒரு வருடத்துக்கு 3 மில்லியன் ரூபா வீதம் 5 வருடங்களுக்கும் ஒன்றரைக் கோடி ரூபாவை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்குச் செலுத்த வேண்டும்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் குறித்த கட்டணத்தைச் செலுத்துமாறு அதற்கான சிட்டையை முன்னாள் அமைச்சர் டக்ளஸுக்கு அனுப்பிவைத்தபோதும் அவர் இதுவரை கட்டணத்தைச் செலுத்தவில்லை. இதன் மூலம் அவர் அரசுக்கு ஒன்றரைக் கோடி ரூபா இழப்பை ஏற்படுத்தியுள்ளார். இது குறித்து உரிய விசாரணை நடத்தவேண்டும்.

அத்துடன், அவருக்கு வழங்கப்பட்ட அலைவரிசைக்கான கட்டண வாடகையான 3 மில்லியன் ரூபா என்பது அந்தக் காலப் பகுதியில் மிகக் குறைந்த கட்டணமாகவே உள்ளது. இந்தக் கட்டண விதிப்பு சரியான என்பதையும் ஆராயவேண்டும் என்று கோரினார். இதற்குப் பதிலளித்த ஆணைக்குழுவின் அதிகாரிகள், இது தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்வர் எனத் தெரிவித்தனர்.

SHARE