எதிர்ப்பதில் பயனில்லை,  ஆக்கபூர்வமான பங்களிப்பை செலுத்துங்கள் 

242
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் அந்த புதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்கின்ற தீர்வுத் திட்டம் எவ்வாறு அமையும் என்பது பாரிய கேள்வியாக காணப்படுகின்றது.

 தமிழ் மக்கள் மிக நீண்ட காலமாக தீர்வுத் திட்டம் ஒன்றுக்காக தவித்துக் கொண்டிருக்கின்ற நிலையில் மிகவும் தீர்க்கமான காலகட்டத்தில் அரசியலமைப்பு மாற்றம் வரவுள்ளதுடன் அதில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிய அரசியலமைப்புக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறான பங்களிப்பை செய்யப் போகின்றது? தென்னிலங்கை கட்சிகள் என்ன நிலைப்பாட்டை எடுக்கப் போகின்றன? குறிப்பாக அரசியலமைப்பில் உள்ளடக்கப்படவுள்ளதாக கூறப்படும் இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் எவ்வாறு அமையும் என்பது குறித்து மக்கள் விவாதித்து வருகின்றனர்.

கருத்தொருமைவாத தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற இரண்டு பிரதான கட்சிகளும் ஒற்றையாட்சியின் அடிப்படையிலேயே அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்று கூறி வருகின்றன.

ஆனால், இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தில் பிரதான இடத்தை வகிக்கவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காண்பதே பொருத்தமாக இருக்கும் என்று வலியுறுத்தி வருகின்றது.

இந்த இடத்தில் தென்னிலங்கை அரசியல் கட்சிகள் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கவுள்ளன என்பது முக்கியமான விடயமாகும்.

இந்நிலையில் புதிய அரசியலமைப்பு மற்றும் அரசியல் தீர்வு விவகாரம் அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட விடயங்கள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச புதிய அரசியலமைப்பினூடாக அதிகாரப் பரவலாக்கலானது எக் காரணம் கொண்டும் 13வது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் செல்வதாக இருக்கக்கூடாது எனவும், அத்துடன் மாகாணங்களை இணைப்பதாகவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படக்கூடாது என்றும் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

விசேடமாக பொலிஸ் அதிகாரமானது இலங்கையில் எக்காரணம் கொண்டும் மாகாணங்களுக்கு வழங்கப்பட முடியாது. இந்தியா போன்ற மிகப் பெரிய நாடுகளில் பொலிஸ் அதிகாரங்களைப் பகிர்வது சாத்தியமாக இருக்கும். இலங்கையை விட பல மடங்கு பெரியதான தமிழ் நாட்டிலேயே ஒரு பொலிஸ் படையே காணப்படுகின்றது. அதனால் இந்திய முறைமையானது இலங்கைக்கு எந்த வகையிலும் ஏற்புடையதல்ல எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிக்கு முழுமையான ஆதரவை வழங்குகின்றோம். ஆனால் இவ்வாறு அரசியலமைப்பை மாற்றுவதற்கு எடுக்கும் முயற்சிகள் நெகிழ்வுத் தன்மையுடன் அமையுமென எதிர்பார்க்கின்றோம் எனவும் மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதியின் இந்தக் கூற்றானது தமிழ் பேசும் மக்கள் மத்தியில் நம்பிக்கையின்மையை ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளது.

அதாவது மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் இருக்கும் போது அரசியலமைப்பின் 13வது திருத்தத்துக்கு அப்பால் சென்று இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என வாக்குறுதியளித்திருந்ததுடன், இந்தியா உள்ளிட்ட சர்வதேசத்துக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இதனை கூறியிருந்தார்.

இவ்வாறு அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் செல்வதாக உள்நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் கூறியிருந்த மஹிந்த ராஜபக்ச தற்போது 13வது திருத்தத்துக்கு அப்பால் செல்லக்கூடாது என்று கூறுவது தமிழ் பேசும் மக்கள் மத்தியில் நம்பிக்கையின்மையை தோற்றுவிக்கின்றது.

அது மட்டுமன்றி முன்னாள் ஜனாதிபதியின் ஆட்சிக் காலத்தில் சிறியளவிலான பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என்று கூறப்பட்டு வந்தது.

ஆனால் இன்று அனைத்தையும் மறந்துவிட்டு 13வது திருத்தத்துக்கு அப்பால் செல்லக்கூடாது என்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்கக்கூடாது என்றும் கூறுவது எந்த வகையில் நியாயமாக இருக்கின்றது என்று தெரியவில்லை.

அதுவும் 2009ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததும் நாட்டின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக் காண்பதற்கான அருமையான வாய்ப்பு கிட்டியது. ஆனால் அந்த வாய்ப்பை மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் கைநழுவவிட்டது.

இவ்வாறு அருமையான சந்தர்ப்பங்களை கைவிட்ட முன்னைய ஜனாதிபதி தற்போது இவ்வாறு அதிகாரப் பகிர்வு தொடர்பில் கருத்துக்களை வெளியிடுவது ஏமாற்றமளிப்பதாகவே உள்ளது.

கடந்தகால செயற்பாடுகளிலிருந்து பாடங்களை கற்றே புதிய தீர்வுத் திட்டத்தை நோக்கி பயணிக்க வேண்டியுள்ளது.

தமிழ் பேசும் மக்கள் நியாயமான ஒரு அரசியல் தீர்வுக்காக 70 வருடங்களுக்கும் மேல் குரல் கொடுத்து வந்துள்ளனர் என்பதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

அவர்கள் வெறுமனே அபிவிருத்திக்காக வீதியில் இறங்கவில்லை. அந்த மக்களின் கோரிக்கைகளின் தாற்பரியத்தை புரிந்து கொள்ள வேண்டும். தமக்கான அரசியல் தீர்வுக்காகவே ஏக்கத்துடன் தமிழ் பேசும் மக்கள் இருந்து வருகின்றனர்.

எனவே இதனை தூர நோக்குடனும் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கையின் பக்கத்தில் இருந்தும் பார்க்க வேண்டும். இதுவரை அந்தக் கோணத்தில் இருந்து பார்த்திருக்காவிடின் இனியாவது நாட்டின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு பொதுநலனுடனும் இதனை இதய சுத்தியுடனும் நோக்க வேண்டியது அவசியமாகும்.

அந்தவகையில் இனப்பிரச்சினைக்கு எவ்வாறான முறைமையில் தீர்வு காண முடியும் என விவாதங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் அமைச்சர் விஜேதாச ராஜபக்ச ஒற்றையாட்சி முறைமையின் ஊடாக முழுமையான அதிகாரப் பகிர்வுக்கு செல்வதற்கு எவ்விதமான தடைகளும் இல்லை என்றும் ஆனால் எவ்வாறான முறைமைக்கு செல்ல வேண்டும் என்பதனை மக்களே தீர்மானிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது ஒற்றையாட்சி, சமஷ்டி என்று வெறும் வார்த்தைகளில் தொங்கிக் கொண்டிருக்காமல் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்கும் வகையிலும் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையிலுமான அரசியலமைப்பு ஒன்றுக்கே செல்ல வேண்டியுள்ளது.

குறிப்பாக வெறும் வார்த்தைகளில் நாம் தொங்கிக் கொண்டிருக்க முடியாது. மாறாக செயற்பாட்டு ரீதியில் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான புதிய அரசியலமைப்பு அமைய வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் கூறுவதைப் போன்று புதிய முறைமை ஒன்றின் ஊடாக பிரச்சினையை தீர்க்க முடியுமாயின் அதனை ஏற்கலாம். ஆனால் எந்த முறைமையானாலும் அதில் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்படவேண்டியது அவசியமாகும்.

அது பூர்த்தி செய்யப்படாமல் எட்டப்படுகின்ற தீர்வுத் திட்டங்களில் எவ்விதமான அர்த்தமும் இல்லை என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.

1987 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டமானது தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை இதுவரை பூர்த்தி செய்யவில்லை.

அது மட்டுமன்றி அதில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் கூட மாகாணங்களுக்கு பகிரப்படாமல் உள்ளன என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

குறிப்பாக புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையிலான நியாயமான தீர்வுத் திட்டத்துக்கு செல்ல வேண்டியது அவசியமாகும்.

இந்த இடத்தில் நல்லிணக்க செயற்பாடுகள் மிகவும் முக்கியமானதாகும்.

அத்துடன் தீர்வுத் திட்டத்துக்கும் நல்லிணக்கத்துக்கும் மத தலைவர்களினதும் சிவில் சமூக பிரதிநிதிகளினதும் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும்.

நல்லிணக்கத்தை நாட்டில் கட்டியெழுப்ப மதத் தலைவர்களின் பங்களிப்பு எவ்வளவு முக்கியமானது என்பதனை அண்மையில் ஜனாதிபதியும் வலியுறுத்தியுள்ளார்.

எனவே, இந்த அனைத்து விடயங்களையும் புரிந்து கொண்டு தமிழ் பேசும் மக்களின் அரசியல் தேவைகளை பூர்த்தி செய்கின்ற நியாயமான அரசியல் தீர்வுக்கு செல்ல வேண்டியது அனைவரதும் பொறுப்பாகும்.

இதற்கு அனைத்து தரப்பினரும் ஆக்கபூர்வமான மற்றும் ஆரோக்கியமான பங்களிப்பை வழங்க வேண்டியது முக்கியமாகும்.

குறிப்பாக அவரது ஆட்சிக் காலத்தில் முடியாது போன இந்த தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தை புதிய அரசாங்கம் தீர்க்க முயற்சிக்கின்ற போது அதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆதரவு வழங்க வேண்டும்.

அதனை விடுத்து எதிர்த்துக் கொண்டிருப்பதில் பயனில்லை. ஆக்கபூர்வமான பங்களிப்பே இங்கு அவசியமாகின்றது என்பதனை வலியுறுத்திக் கூற விரும்புகின்றோம்.

Sri Lanka President Mahinda Rajapaksa listens during a press conference during the Commonwealth Heads of Government Meeting (CHOGM) in Colombo on November 16, 2013. Britain's David Cameron put Sri Lanka on notice to address allegations of war crimes within months or else he would lead a push for action at the UN. AFP PHOTO/ISHARA KODIKARA

SHARE