லண்டன் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தின் போது 50 அடி உயரத்திலிருந்து கீழே வீசப்பட்ட 4 வயது குழந்தையை லாவகமாக பிடித்த நபரின் செயல் பாராட்டும் விதத்தில் அமைந்துள்ளது.
பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் உள்ள Grenfell Tower அடுக்குமாடி குடியிருப்பில் இரு தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர், 74 பேர் காயமடைந்துள்ளனர்.
தீ விபத்தில் தப்பித்த பலர் தாங்கள் அனுபவித்த திகில் நிமிடங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், சம்பவம் நடந்த போது அடுக்குமாடி குடியிருப்பின் 5வது மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்ட குழந்தையை ஒருவர் சரியாக பிடித்து காப்பாற்றியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
இது குறித்து Kadelia Woods (20) என்ற நபர் கூறுகையில், கட்டிடம் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த போது 5வது மாடியில் ஜன்னல் ஓரத்தில் தனது 4 வயது பெண் குழந்தையை கையில் வைத்து நின்று கொண்டிருந்த பெண் உதவிக்காக கத்தியுள்ளார்.
அப்போது கீழே நின்றிருந்த Pat என்ற 40 வயதுடைய நபர், குழந்தையை கீழே வீசுமாறும், தான் குழந்தையை பிடித்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.
முதலில், பயம் காரணமாக மறுத்துள்ள பெண் பின்னர் தைரியத்தை வரவழைத்து கொண்டு குழந்தையை Pat இருக்கும் திசை நோக்கி 50 அடி உயரத்திலிருந்து கீழே வீசினார்.
இதையடுத்து, எப்படியோ தனது மார்பில் அணைத்து கொண்டு Pat குழந்தையை லாவகமாக பிடித்து விட்டதாக Kadelia கூறியுள்ளார்.
பின்னர், குழந்தைக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், 5வது மாடியில் சிக்கிய குழந்தையின் தாய் உயிர் பிழைத்திருப்பார் என தான் நம்பவில்லை என Kadelia கூறியுள்ளார்.