5000 சிவில் பாதுகாப்புப் படையினரை பொலிஸ் சேவையில் உள்ளீர்க்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
அண்மையில் பாதுகாப்புப் பேரவையில் நடைபெற்ற கூட்டமொன்றில் இது பற்றி தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போது சிவில் பாதுகாப்புப் படையில் கடமையாற்றி வரும் சுமார் 5000 பேரை பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ் சேவையில் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
சிவில் பாதுகாப்புப் பிரிவில் சுமார் 40000 பேர் கடமையாற்றி வருகின்றனர்.
போர்க் காலத்தில் இவர்கள் கிராமங்களின் பாதுகாப்பிற்காக கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
பின்னர் தற்போதைய அரசாங்கம் இந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு நிரந்தர அரசாங்க நியமனங்களை வழங்கி ஓய்வூதியக் கொடுப்பனவுக்கு உரித்துடையவர்களாகவும் மாற்றியது.
தற்போது சிவில் பாதுகாப்புப் பிரிவினர் நாட்டின் அபிவிருத்திப் பணிகளில் பங்களிப்பு வழங்கி வருகின்றனர்.
இந்த சிவில் பாதுகாப்புப் பிரிவின் ஒரு தொகுதியினர் பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ் சேவைக்கு உள்ளீர்க்கப்பட உள்ளனர்.
நாட்டில் தற்போது 460 பொலிஸ் நிலையங்கள் இயங்கி வருவதாகவும் இந்த எண்ணிக்கை 600 ஆக உயர்த்தப்பட உள்ளதாகவும் இதன் போது குறித்த சிவில் பாதுகாப்புப் படையினர் பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவர் எனவும் அரசாங்கத் தகவல்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.