ஜேர்மனி பீலபெல்ட் நகரில் நடைபெற்ற நினைவெழுச்சி நிகழ்வில் பேரெழுச்சியுடன் மக்கள் பங்கேற்பு

337
லெப்.கேணல் ஜொனி, லெப்.கேணல் ரவி மற்றும் மார்ச் மாதத்தில் தமிழீழ விடுதலைக்கான போரில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவெழுச்சி நிகழ்வு ஜேர்மனி பீலபெல்ட் நகரில் நேற்று நடைபெற்றுள்ளது.

இந்திய ஆக்கிரமிப்பு படைகளின் சதியால் அநியாயமாக கொல்லப்பட்ட லெப்.கேணல் ஜொனி மற்றும் இந்திய ஆக்கிரமிப்பு படைகளுக்கு எதிரான போரில் ஈடுபட்டிருந்த போது வீரச்சாவடைந்த லெப்.கேணல் ரவி ஆகியோரின் நினைவு நாள் மற்றும் மார்ச் மாதத்தில் தாயக விடுதலைப் போரில் வீரச்சாவடைந்த அனைத்து மாவீரர்களின் நினைவை போற்றும் வகையில் இந்த நினைவெழுச்சி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜேர்மனி, பீலபெல்ட் நகரில் நடைபெற்ற இந்த நினைவெழுச்சி நிகழ்வில் மக்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர்.

இதன்போது, பொதுச்சுடர் ஏற்றலைத் தொடர்ந்து தேசியக்கொடி ஏற்றப்பட்டதுடன், ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கம், சுடர் வணக்கம் செய்யப்பட்டது.

இளஞ்சூரியன் இசைக்குழுவினரின் எழுச்சி கானங்கள், பிரதிநிதிகளின் சிறப்பு உரைகள் மற்றும் எழுச்சி நடனங்கள் என்பன இடம்பெற்றுள்ளன.

ஈழத்தில் போர் நடைபெற்ற காலத்திலும் 2009 ற்கு பின் சில ஆண்டுகாலமாகவும் நீடித்து வந்த மக்கள் எழுச்சியானது போட்டி குழுக்களின் செயற்பாட்டினாலும், புல்லுருவிகளின் குழப்பங்களினாலும் மெல்ல மெல்ல குறைந்துவந்த நிலையில் நேற்று பேரெழுச்சியுடன் கூடிய மக்கள் பெரும் நம்பிக்கையினை ஏற்படுத்தியுள்ளனர்.

நினைவெழுச்சி நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்ட அரங்கம் எழுச்சியுடன் கூடிய மக்களால் நிறைந்து, அரங்கத்திற்கு வெளியில் பெருமளவானோர் குழுமியிருந்ததை காணக்கூடியதாக இருந்துள்ளது.

மாவீரர்கள் தமது உயிரை கொடையாக கொடுத்து கட்டியெழுப்பிய தேசிய உணர்வு அவர்களை நினைவு கொள்கையில் மீள் எழுச்சி கொள்வதில் ஆச்சரியமில்லை.

மண்ணின் விடுதலைக்காக அவர்கள் சிந்திய இரத்தம் இன்னும் காயவில்லை. எமது மக்களின் மனங்களில் இன்னும் அவை ஈரமாகவே கசிந்து கொண்டிருக்கிறது என்பதற்கான சாட்சியாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது.

இனப்படுகொலையாளி மஹிந்தவின் அரசு போய் மைத்திரி அரசு தமிழர்களின் இருப்பையே இல்லாதொழிக்கும் விதமாக சூட்சுமமாக இன அழிப்பு செய்துவருகின்ற நிலையில், இந்த நிகழ்வானது ஒட்டுமொத்த தமிழர்களின் ஒரே இலக்கு தனித் தமிழீழமே என்பதை பறைசாற்றியுள்ளது.

 

SHARE