இந்திய கடவுச்சீட்டுக்களை பயன்படுத்தி 6 இலங்கையர்களை சட்டவிரோதமான முறையில் இங்கிலாந்துக்கு அனுப்பி வைப்பதற்கு பிரித்தானிய பெண் ஒருவர் உதவியுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த பிரித்தானிய பெண், கடந்த நான்காம் திகதி சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
ஜூலி ஏன் வார்னர் என்ற பிரித்தானிய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, இந்திய கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி நான்கு இலங்கை பிரஜைகளை லண்டனுக்கு அனுப்ப முயசித்த மற்றுமொரு இலங்கை முகவரும் கடந்த நான்காம் திகதி கைது செய்யப்பட்டார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
மோசடியான முறையில் இலங்கையர்களை லண்டனுக்கு ஆட்கடத்தல் நடவடிக்கையில் ஈடுபடும் முகவர்களே இவர்கள் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இலங்கை மற்றும் பிரித்தானிய முகவர்கள் ஆட்கடத்தல் நடவடிக்கையில் ஈடுபடும் பிரதான சந்தேகநபர்கள் என சஹார் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
இந்த மோசடி சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்ற இலங்கை பயண முகவரான மஹமுனி லோகோராஜன் மற்றும் இந்திய முகவரான ராஜன் ஆகிய இருவரும் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
சென்னை குடிவரவு அதிகாரிகள் கடந்த ஐந்தாம் திகதி தேவகுமரனை சஹார் பொலிஸாரிடம் ஒப்படைத்த பின்னர், இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஆறு இலங்கையர்கள் லண்டனுக்கு சென்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
சஹார் பொலிஸாரின் தகவல்களுக்கமைய கடந்த பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி வெலுமிலம் சுகஹரன், வடிவேலு சிவர்பலிங்கம் மற்றும் அருந்தனை சிவதாஸ் ஆகிய இலங்கை பிரஜைகள் இந்திய கடவுச்சீட்டுக்களை பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் லண்டனுக்கு சென்றுள்ளனர்.
தேவகுமாரனை தடுப்பு காவலில் வைக்கும் போது, கடந்த வாரம் ஆந்தேரி நீதிமன்றத்திற்கு பொலிஸார் சமர்ப்பித்த ஆவணங்களுக்கமைய கடந்த பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி தங்கவடிவேல் பார்த்தீபன், கிரிஷ்ணமூர்த்தி சன்ஞன் மற்றும் அண்ணலிங்கம் சிவக்குமார ஆகியோரும் லண்டன் பயணித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.