60 வருட காலப்போராட்டமும் தடுமாறும் தலைமைகளும்! – லோ.விஜயநாதன்

296

 

தமிழின அழிப்பு நடந்து 6 வருடங்கள் உருண்டோடி விட்டன. ஆனாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி நிலை நாட்டப்படுவதற்கான  எந்தவித அறிகுறிகளும் தென்படுவதாகத் தெரியவில்லை. உறவுகளைத் தொலைத்தவர்களினதும், அவயவங்களை இழந்து அங்கவீனமானவர்களினதும், வதை முகாம்களில் காலங்களைத் தொலைக்கின்றவர்களினதும் துன்பங்களோ விடிவில்லாத் தொடர்கதையாகவே உள்ளன. மாற்றத்திற்காக வாக்களித்து விட்டு எந்த வித மாற்றமும் காணாச் சமூகமாக தமிழினம் சிக்கித்தவிக்கின்றது. ஆனாலும் மாற்றங்களை எமது தமிழ் தலைமைகளிடம் மட்டுமே காணக்கூடியதாகவுள்ளது.
unnamed (10)
அவர்கள் கடந்த 60 வருடகாலத்தை மறந்தவர்களாக மீண்டும் சிங்களத் தலைமைகளின் வாய்வார்த்தைகளை நம்பியவர்களாக அதை தமிழ் மக்களிடத்திலும் சர்வதேச சமூகத்துக்கும் எடுத்துச் செல்பவர்களாக செயற்படத் தொடங்கியுள்ளனர்.
இவர்கள் ஒன்றை மட்டும் நினைவில் நிறுத்தி கொள்ளவேண்டும். அதாவது தமிழ் மக்களிடம் இருக்கும் ஒரே ஆயுதம் முள்ளிவாய்க்கால் இனவழிப்பினூடாக சர்வதேச ரீதியில் சிறிலங்காவுக்கெதிராக கட்டப்பட்டுள்ள சர்வதேச ரீதியிலான பொறிமுறை சார் நடவடிக்கை ஒன்றேயாகும். அப்பொறிமுறை சிதைக்கப்படுமானால் தமிழ் மக்களின் போராட்டம் மிகப்பெரும் பின்னடைவை சந்திக்கும் ஆபத்து இருக்கிறது.
மாறியுள்ள ஆட்சியை சமயோசிதமாக பயன்படுத்தி தமிழ் மக்களின் அன்றாட வாழ்வாதார பிரச்சினைகளைத் தீர்க்க முயல்வதை ஒருவரும் குறை சொல்ல முடியாத அதேநேரத்தில் புதிய சிங்கள ஆட்சியாளர்களை தமிழ் மக்களின் விடிவெள்ளியாக காட்ட முற்படுவதே மிகவும் பாரதூரமானதும் அபாயகரமானதுமான ஒரு நடவடிக்கையாகவுள்ளது. இவ்வணுகுமுறையானது மேற்சொன்ன சர்வதேச பொறிமுறை சார் நடவடிக்கைகளில் பாரிய பாதிப்புக்களை உண்டு பண்ணும் என்பதை நினைவில் நிறுத்தி எம்மவர்கள் சிந்தித்து செயலாற்றுதல் வேண்டும்.
ஆரம்பத்தில் சந்திரிகா அம்மையாரும் இனப்பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் தேவதைபோலவே வந்தார். ஆனால் நாளடைவில் நவாலி தேவாலயம், நாகர்கோயில் பாடசாலை, செம்மணி புதைகுழி, இடி முழக்கம், ரிவிரச, சத்ஜெய, ஜெயசிக்குறு என அவர்  ஆடிய ஆட்டங்களை மறந்தவர்களாக எமது தலைமைகளின் செயற்பாடுகள் அண்மைக்காலமாக அமைந்து காணப்படுகின்றன. இவரின் சமாதானத் தேவதை வேடமே உலக லாவியரீதியில் எமது விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டமாக முத்திரை குத்த உதவியது.
தற்போதைய ஆட்சியாளர்களும் தமது ஆட்சியை தக்க வைப்பதற்கான நடவடிக்கைகைளயே எடுக்கின்றார்களேயொழிய உண்மையில் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான எந்தவித நடவடிக்கைகளையும் சிறிதும் எடுக்க முன்வரவில்லை.
சந்திரிகாவும் சிங்கள மக்கள் மத்தியில் ஆட்சிபீடத்தைக் கைப்பற்றும் வரை தமிழ் மக்களுக்கு பிரச்சனையுள்ளது என்பதை கூறியிருந்தார். ரணில் விக்கிரமசிங்கவும் 2001 ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றும் போது கூறியிருந்தார். தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஆட்சிபீடம் ஏறுவதற்காக கூறினார். இதைவைத்து எப்படி தமிழ்மக்களின் இனப்பிர்சினைக்கான  தீர்வை இவர்கள் தருவார்களென உவகைப்படுத்த முடியும். உண்மையில் தற்போதைய ஆட்சியாளர்களின் முழுக்கவனமும் இனப்பிரச்சினையை எப்படித் தீர்ப்பதென்பதல்ல,  மாறாக அவர்களின் முழுக்கவனமும் எப்படி  சிறிலங்காவுக்கெதிரான இந்த சர்வதேச பொறிமுறையை உடைப்பதென்பதேயாகும்.
அதை நோக்கிய செயற்பாடுகளாகவே உயர்பாதுகாப்பு வலயங்களில் உள்ள சிறுகாணித்துண்டுகளின் விடுவிப்பும் வெற்றிவிழாவின் பெயர் மாற்றமும் அமைந்துள்ளதேயொழிய இவை தமிழ் மக்களின் நலன்சார் நடவடிக்கையாக நோக்கப்படுமானால் அது நம்மை நாமே ஏமாற்றுவதற்கு ஒப்பானதாகும்.
மறுபுறத்தே போர் குற்றவாளிகளை பாதுகாப்பதற்கான முயற்சிகள் புதிய ஆட்சியாளர்களால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக இறுதிப் போரில் 57வது படைப்பிரிவிற்கு தலைமை வகித்து பல போர்குற்றங்களைச் செய்தவரான மேஜர் ஜெனரல் ஜெகத் டயசுக்கு 46வது சிறிலங்கா இராணுவ கூட்டுப்படைத் தலைமை அதிகாரியாக பதவியுயவர்வு வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை ஓய்வுபெற்ற முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் ஜெகத் ஜெயசூரியா பிரேசிலுக்கான வெளிநாட்டு தூதுவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுவே சிங்கள தேசம் தமிழருக்கு காட்டும் நல்லெண்ண சமிக்கை ஆகும்.
எமது தலைவர்களோ நல்லிணக்கத்துக்காக சுதந்திரதின விழாவில் பங்கேற்பு, தேசிய நிறைவேற்று சபையில் பங்கேற்பு, கிழக்கு மாகாண ஆட்சியமைப்பில் பங்கேற்பு, தந்தை செல்வா நினைவுபேருரையாற்ற சிங்களத் தலைமைக்கு அழைப்பு என வாயால் கூறாது நல்லெண்ண சமிக்ஞைகளை செயலில் காட்டிவருகின்றனர். ஆனால் சிங்களத் தலைமைகளோ உதட்டளவில் நல்லிணக்கம் பற்றி சொல்லிக்கொண்டு செய்வதெல்லாம் இனப்படுகொலையாளிகளுக்கு பதவியுயர்வுகள், பட்டங்கள், சலுகைகள் என அள்ளி வழங்கிவருகின்றனர்.
இதேவேளை சிங்களதேசத்தின் ஒரு சாரார் ராஜபக்சக்கள் முற்றிலும் முடக்கப்படாமல் வைத்திருப்பதற்கு முயன்று வருகின்றனர். இதன் ஒரு பகுதியாகவே கோதபாய ராஜபக்ச கைது  செய்யப்படுவதை  தடுப்பதற்கான அடிப்படை உரிமை வழக்கின் ஊடாக உயர் நீதிமன்றத்திடம் பெற்றுக்கொண்ட  இடைக்கால தீர்ப்பும், அண்மைய மகிந்தராஜபக்சவின் கூட்டங்களும் காணப்படுகின்றன. இதன் மூலம் சிறிலங்கா தொடர்பிலான சர்வதேச நெருக்குவாரங்களை இவர்களுடைய மக்கள் செல்வாக்கைக் காட்டிக் குறைக்க முடியுமென்றும் தமிழ் தலைமைகளின் ஆதரவுகளை இவர்களைக் காட்டி தொடர்ந்து தக்கவைப்பதுடன் அவர்களை ஆகக் குறைந்தபட்ச தீர்வு ஒன்றுக்கு இணங்கவைக்க முடியுமென இந்த ஒரு சாரார் நம்புகின்றனர்.
அதேவேளை யாழ்ப்பாணத்தில் புங்குடுதீவில் உயர்தர வகுப்பில் கல்வி கற்றுவந்த  பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்குட்படுத்தப்பட்டு  கொடூரமாக படுகொலை செய்யப்பட்டமையானது தாயகத்திலும் புலம்பெயர் தமிழ் மக்களிடையேயும் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது உண்மையில் கட்டமைப்பு சார் இனவழிப்பின் ஒரு வடிவமாகவே வெளிப்பட்டுள்ளது. யாழ்.தீவுப்பகுதியானது இதைப் போன்ற பல பாலியல் வன்கொடுமைகளையும், படுகொலைகளையும் ஈ.பி.டி.பி துணை ஆயுதக்குழுக்கள் கோலோச்சிய காலத்தில் சந்தித்து வந்துள்ளது.
அக்காலத்தில் அக்குற்றங்களுக்கான நீதிவிசாரணைகளோ, தண்டனைகளோ வழங்கப்பட்டிருக்கவில்லை. அதன் அறுவடையே தற்போது புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையாக வந்துள்ளது. ஆனாலும், பலவருடங்களாக அடக்கி வைத்திருந்த உள்ளக் குமுறல்களின்  வெளிப்பாடாக தமிழர் தாயகமெங்கும் மாணவியின் படுகெலைக்கு நீதி வேண்டி மக்கள் போராட்டங்கள் வெடித்தன.
எங்கே குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கலாம் என காத்திருந்த சில புல்லுருவிகள் இந்த போராட்டங்களை தமது நலன்நோக்கிப் பாவிக்கத் தொடங்கினர். இதன் வெளிப்பாடாக நீதிமன்றமும், பொலிஸ் காவல் நிலையமும் தாக்கப்பட்டதும் பிரபல சட்டத்துறை விரிவுரையாளரை மையப்படுத்தி தவறான தகவல்கள் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டதும் நிகழ்தேறியுள்ளன. இவற்றை கட்டுக்கடங்காத வன்முறைபோல் காட்டி இராணுவம் வடகிழக்கில் நிலை நிறுத்தப்பட்டிருப்பதை நியாயப்படுத்த சில தரப்புக்கள் முயன்றன.
அதேவேளை எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் தீவுப்பகுதியில் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட சட்டத்துறைசார் விரிவுரையாளர் மீது களங்கம் கற்பிப்பதனூடாக கடந்த காலங்களில் அடக்கு முறையுடாக இதே தொகுதியில் பாராளுமன்ற அங்கத்தவராக தெரிவாகிய துணை ஆயுதக்குழுவின் தலைவருக்கு எதிர்வரும் தேர்தலில் வரவிருந்த நெருக்கடியை இதன் மூலம் தவிர்க்க அக்குழுவினர் முயன்றுள்னர். இதற்கு சில ஊடகங்களும் அனுசரணை வழங்கியருந்தன.
இவற்றுக்கு மிக முக்கிய காரணமாக அமைவது என்னவென்றால் மக்கள் போராட்டங்களுக்கு அமைப்புகள் அல்லது கட்சிகள் தலைமையேற்று போராட முன்வராமையே ஆகும்.  புல்லுருவிகள் அச்சந்தர்ப்பத்தை தமக்குச் சாதகமாக மாற்றப்பார்க்கிறார்கள். இது தொடர்ச்சியாக தண்ணீர் பிரச்சினை முதல் வித்தியா கொலை வரை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இவற்றுக்கிடையே யாழ்பபாணத்தில் திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும், திரு.சுமந்திரனுக்குமிடையிலான விவாத மாநாடானது தமிழ் மக்களிடையே மூடிக்கிடக்கின்ற அரசியல் சிந்தனையை வெளிக்கொண்டுவரக்கூடிய கருத்தியல் ரீதியிலான கருத்துருவாக்கங்களை ஏற்படுத்தக் கூடிய திறனாய்வுக் கூட்டமாக அமைந்திருந்தது. இவர்களுக்கிடையேயான கருத்துப் பரிமாற்றங்கள் பொதுவாக கடந்தகால நிகழ்கால தமிழர் போராட்டம் சார் பூகோள அரசியல் களநிலவரங்களை மையப்படுத்தி அமைந்திருந்ததைக் காணக்கூடியதாகவிருந்தது. இருப்பினும் அவர்கள் எதிர்காலத்தில் எப்படியான செயன்முறைகளுக்கூடாக எவ்வகையான தீர்வை நோக்கிச் செல்ல முடியும் என்பதை தெளிவாக முன்வைக்கத் தவறியிருந்தனர். இதுவே தமிழ்மக்களின் இன்றைய அரசியல் யதார்த்தமாகவும் உள்ளது.
இவற்றை நிவர்த்தி செய்வதற்கு இதுபோன்ற பல கருத்துருவாக்கங்களை ஏற்படுத்தக் கூடிய கருத்தரங்குகள் துறைசார் வல்லுநர்களுக்கிடையே தாயகத்திலும் புலத்திலும் தொடர்ந்து நடைபெறவேண்டும். இதன் மூலம் மக்களை அரசியல் தெளிவூட்டலுக்கூடாக வலுப்படுத்த முடியும்.
விடுதலைப்  புலிகள் இல்லாத சுழலில் தாயாக தமிழ் மக்களுக்கு இருக்கும் ஒரு  கவசம் புலம்பெயர் தமிழ் மக்கள் ஆவார்கள். இதை உடைப்பதற்கான  வேலைத்திட்டங்களை சிறிலங்கா தனது நட்பு நாடுகளுடன் இணைந்து முன்னெடுத்து  வருக்கின்றது. இதற்கு எம்மில் சிலரும் உடந்தையாகவுள்ளனர்.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் அண்மைய ஜேர்மன் நாட்டுக்கான விஜயத்தின் போது அவர் ஜேர்மன் வெளிவிவகார அமைச்சரிடம் பின்வருமாறு தெரிவித்திருந்தார். அதாவது புலம்பெயர் தமிழ் மக்களின் முக்கியத்துவத்தை  தமது அரசு உணர்ந்துள்ளதாகவும் அவர்களுக்கான  விழா ஒன்றை தாம் நடாத்த உத்தேசித்துள்ளதாகவும் கூறியிருந்தார். இதன் மூலம் சிறிலங்காவானது புலம்பெயர் தமிழ் மக்கள்விடயத்தில் எவ்வளவு சிரத்தையுடன் செயற்படுகின்றது என்பது தெளிவாகின்றது.
இதேவேளை தமிழ் தலைமைகளும் புண்ணுக்கு மருந்து போடுவதைத் தவிர்த்து மூலப்பிரச்சினைக்கு தீர்வு காணமுன்வரவேண்டும். தாயகத்திலும் புலத்திலும் தமிழ் தலைவர்களும் செயற்பாட்டாளர்களும் இறுதித்தீர்வின் அவசியத்தை உணர்த்தி அதனை விரைவாக அடைவதற்கான நெருக்குவாரங்களை சிறிலங்காவுக்கு பிரயோகிக்குமாறு தாம் சந்திக்கும் வெளிநாட்டுத் தலைவர்களிடத்திலும் தூதுவர்களிடத்திலும் தொடர்ச்சியாக முன்வைக்க வேண்டும். 13வது திருத்தமானது ஒருபோதும் இனப்பிரச்சினைக்காண தீர்வாக அமையாது என்பதை உறுதியாக வெளிப்படுத்தப்படல் வேண்டும்.
சிலர் 13வது திருத்தச்சட்டமானது இந்திய நலன்சார் ஒன்று என்றும் அதை விடுத்து வேறொன்றை தீர்வாக ஏற்க இந்தியா அனுமதிக்காது என்றும் வாதத்தை முன்வைக்கிறார்கள்.  13வது திருத்தச்சட்டமானது இலங்கையில் இந்திய நலனை பாதுகாக்கின்ற ஒரு சட்ட மூலமாகவே கொண்டுவரப்பட்தே அன்றி  தமிழருக்கான தீர்வாக அது கொண்டுவரப்பட்டிருக்கவில்லை. அச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு சுமார் 25 வருடங்கள் கழிந்த நிலையிலும் விடுதலைப் புலிகள் இல்லாத சூழலிலும் அச்சட்ட மூலத்தினால் இலங்கைத் தீவில் இந்திய நலன் பாதுகாக்கப்பட்டதா என்று  கேள்வி எழுப்பும் போது, இலையென்பதே பதிலாகவுள்ளது.
அச்சட்ட மூலத்தினால் அமெரிக்க- சிறிலங்கா பாதுகாப்பு உடன்படிக்கைகளையோ அல்லது பாகிஸ்தான்- சிறிலங்கா இராணுவ நெருக்கங்களையோ  அல்லது இலங்கைத் தீவில் சீனாவின் ஆதீக்கத்தையோ கட்டுப்படுத்த முடிந்திருக்கவில்லை. இதற்குக் காரணம் இலங்கையின் ஒற்றையாட்சி கட்டமைப்பும் அதற்கூடாக மத்தியில் குவிக்கப்பட்டுள்ள அதிகாரங்களும் ஆகும். இவை நிவர்த்தி செய்யப்பட்டு தமிழ்மக்களுக்கு சுயாட்சியுடன் கூடிய இறுதித் தீர்வு முன்வைக்கப்படும் வரை இலங்கைத் தீவில் இந்திய நலனானது தொடர்ந்து கேள்விக்குறியாகவேயிருக்கும்.
நன்றி,
தினக்குரல் – புதிய பண்பாடு
SHARE