பிச்சை எடுத்தாவது நாங்கள் வாழுவம்! எனக்கு எனது பிள்ளை தான் வேண்டும்: தாய் ஆணைக்குழு முன் சாட்சியம்

303

நாம் பிச்சை எடுத்தாவது வாழுவோம். இராணுவத்திடம் ஒப்படைத்த எனது பிள்ளை தான் எனக்கு வேண்டும் என தாயார் சிவசுப்பிரமணியம் இராசமலர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாம் நாள் அமர்வுகள் இன்று  வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தாயார் தொடர்ந்தும் சாட்சியமளிக்கையில்,

நாங்கள் குடும்பத்துடன் நெடுங்கேணியில் வசித்து வந்தோம். யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து முல்லைத்தீவு சென்று அங்கு புதுக்குடியிருப்பு, முள்ளிவாய்க்கால் என பல இடங்களில் மாறி மாறி இருந்தோம். யுத்தம் காரணமாக தொடர்ந்து ஒரு இடத்தில் இருக்க முடியவில்லை.

அப்பொழுது விடுதலைப்புலிகள் எனது மகன் சிவசுப்பிரமணியம் சிவதீபனை (வயது 26) பிடித்துச் சென்றனர். மகன் அவர்களிடம் இருந்து தப்பி ஓடி வந்து எம்முடன் நின்றான். யுத்தம் தீவிரமடைந்த போது 2009 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி புதுக்குடியிருப்பு பகுதியூடாக இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் வந்தோம்.

அப்போது எனது மகனை இராணுவம் கூப்பிட்டது. நாம் அவனை எம்முடன் அனுப்புமாறு கோரினோம். அவனை விசாரித்து விட்டு நாங்கள் இருக்கும் முகாமில் கொண்டு வந்து விடுவதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.

இதன்பின் நாங்கள் இடம்பெயர்ந்து இராமநாதன் முகாமுக்கு வந்து விட்டோம். எனது கணவருக்கும், மூன்று பிள்ளைகளுக்கும் காயம். அவர்கள் இன்றும் ஏலாத நிலையிலேயே உள்ளனர். நான் இராணுவத்திடம் உயிருடன் ஒப்படைத்த எனது பிள்ளை தான் எனக்கு வேண்டும் எனத் தெரிவித்தார்.

இதன்போது ஆணைக்குழுவினர், உங்களுக்கு சமுர்த்தி, வீட்டுத்திட்டம் என்பன கிடைத்துள்ளதா என கேட்ட போது எமக்கு எதுவும் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.

இதன்போது சமுர்த்தி வழங்குமாறு நாம் அறிவுறுத்துகிறோம் என ஆணைக்குழுவினர் தெரிவித்தனர்.

இதன்போது தயார் எமக்கு எதுவும் வேணாம். பிச்சை எடுத்தாவது நாம் வாழுவோம். உயிருடன் கொடுத்த எனது பிள்ளை தான் வேண்டும் என கண்ணீர் விட்டழுதார். இதனையடுத்து ஆணைக்குழுவின் சட்ட நடவடிக்கைக்காக அவருடயை விபரங்கள் பெறப்பட்டது.

SHARE