அமெரிக்க இராணுவ உயர்கல்வி அதிகாரிகளுடன் ரவிகரன் கலந்துரையாடல்.

356

அமெரிக்க தூதரக மற்றும் இராணுவ உயர்கல்வி அதிகாரிகளுக்கும் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று நடைபெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது சுமார் ஒரு மணி நேரம் நீடித்ததுடன் முல்லை. மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் இன்னல்களும் தமிழ்மண்ணில் தொடரும் கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பு நடவடிக்கைகளும் இச்சந்திப்பில் முதன்மைக்கலந்துரையாடல்களாக அமைந்திருந்தன என ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் அறியவருகையில்,
இன்று (2016-07-25) நண்பகல் பன்னிரண்டு மணியளவில் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்களுக்கும் அமெரிக்க தூதரக மற்றும் இராணுவ உயர்கல்வி அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
ரவிகரன் அவர்களின் மக்கள்தொடர்பகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில், முல்லை. மாவட்ட மக்கள் சமகாலத்தில் எதிர்நோக்கும் பல்வேறு சிக்கல்கள் விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக ரவிகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இச்சந்திப்பானது கொழும்பில் அமையும் அமெரிக்கத்தூதரகத்தின் அரசியல் அலுவலர் தமெய்சா கென்றி (Ms. Temeisha Henry) அவர்களோடு வந்திருந்த அமெரிக்க இராணுவ உயர்கல்வி மாணவர்களுடன் நடைபெற்றது. கலந்துகொண்டிருந்தவர்கள் போர்ச்சூழலின் பின்னரான மக்களின் வாழ்க்கை பற்றிய ஆய்வுவினாக்களை கேட்டிருந்தனர்.
காலங்காலமாக தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்டுவரும் இன்னல்கள், அதன் வெளிப்பாடாக ஒரு கட்டத்தில் போர்க்கருவிகளை ஏந்தி தங்கள் இனத்தின் இருப்பை தக்கவைக்கவேண்டும் என்ற நிலைக்கு தள்ளவைக்கப்பட்ட இளைஞர்களின் நிலை, அதனை அரசும் பன்னாடும் பயங்கரவாதமாய் அடையாளப்படுத்தியமை என்பவற்றில் இருந்து தற்காலத்திலும் அரசாலும் அரசின் இராணுவக்கட்டமைப்பாலும் ஈழத்தமிழ் பகுதிகளில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகள் என பலவற்றை கலந்துரையாடமுடிந்தது.
தமிழர் பாரம்பரிய பகுதிகளிலெல்லாம் தமிழினத்தை சிறுபான்மையாக்க மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள், 3000க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளையும் 5000க்கும் மேற்பட்ட கைம்பெண்களையும் 21000க்கும் மேற்பட்ட படித்த வேலையற்ற இளைஞர்களையும் பல ஆயிரம் ஏக்கர் வாழ்வுடைமை நிலங்களை பறிகொடுத்திருக்கும் மண்ணுக்குரியவர்களையும் கொண்டு ஈழத்தீவின் வறுமையான மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டம் ஆக்கப்பட்டுள்ளது. முதன்மை வாழ்வியல் அடையாளங்களில் ஒன்றாக கடற்றொழிலைக்கொண்டிருக்கும் நிலையில் இங்கும் அந்நிய ஆதிக்கம் காணப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் , சிறையில் வாடும் இளைஞர்களின் குடும்பங்கள் எதிர்நோக்கும் இடர்பாடுகள் என பலவற்றை இன்றைய பொழுதில் ஆய்வுநோக்கில் வருகைதந்த அமெரிக்க இராணுவ உயர்கல்வி மாணவர்களிடம் விளக்கமுடிந்தது என்று அவர் தெரிவித்தார்.
33a76977-2b40-4bcf-937b-29c9832d8bdc 450679ba-8091-4517-b904-7d69987e6332 c635ef7c-8e47-4204-9b41-016251761a19
SHARE