அவனவன் ரெண்டு பிள்ளைகளைப் பெத்தா எப்படி காப்பாத்துறதுன்னு வழி தெரியாம விழி பிதுங்கி ஒண்ணோட ஸ்டாப் பண்ணுற இந்தக் காலத்துல 39 மனைவிகள், 94 குழந்தைகள், 14 மருமகள்கள், 33 பேரக் குழந்தைகள் என ஒரு ஊரையே குடும்பமாக நடத்திக் கொண்டிருக்கிறார் ஒருவர்!
ஸ்டாப், ஸ்டாப்………. என்ன கதவுடுறியா………. அப்படின்னு நீங்க கேட்கிறது காதில் விழுகிறது. இனியும் நீங்க நம்பலைன்னா 2013 இல் வெளியான ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள் என்ற புத்தகம் 9 ஐ எடுத்துப் பாருங்கள்.
அந்தப் புத்தகத்தில் ஜியோனாவின் குடும்பத்தைப் பற்றிய செய்தி இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் உலகிலேயே மிகப் பெரிய குடும்பம் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது அந்தக் குடும்பம்.
மிசோ ரம் மாநிலம் செர்சிப் மாவட்டம் பாக்டாவ்ங் என்ற மலைக் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜியோனா. கிறிஸ்தவ மதத்தில் சனா என்ற பிரிவைச் சேர்ந்தவர்.
1945 ஜூலை 20 ஆம் திகதி பிறந்த இந்த முதியவருக்குத்தான் 39 மனைவிகள், 94 குழந்தைகள், 14 மருமகள்கள், 33 பேரக் குழந்தைகள் உள்ளார்கள். தனது 15 ஆவது வயதில் முதல் திருமணத்தை முடித்த இந்தத் தாத்தா 60 ஆவது வயதில் வெற்றிகரமாக 39 ஆவது திருமணத்தையும் முடித்துள்ளார்.
தனது 72-வது வயதைக் கடந்த ஜூலை 20 ஆம் திகதி கொண்டாடிய இந்தப் பெரிசு இன்னும் பெண் தேடிக் கொண்டிருக்கிறதாம். இவரது மனைவிகள் அனைவரும் பல்வேறு ஜாதி மற்றும் மதங்களைச் சேர்ந்தவர்களாம்.
தற்போது தனக்குப் புதுமணப் பெண்ணைத் தேடி அமெரிக்காவுக்குச் செல்லவிருப்பதாகக் கூறி அனைவரையும் கிறுகிறுக்க வைத்திருக்கிறது இந்த முதியவர். ஜியோனாவுக்கென சொல்லிக்கொள்ளும் படியாக எந்த வேலையும் கிடையாது.
அதனால் தங்களது தோட்டத்திலேயே பன்றி மற்றும் கோழிப் பண்ணை, காய்கறித் தோட்டம் என வைத்துத் தங்களுக்குத் தேவையானதை தாங்களே உற்பத்தி செய்து கொள்கின்றனர்.
சாப்பாட்டுப் பிரச்சினை தீர்ந்தது. படிப்புக்கு யோசித்த ஜியோனா தனது தோட்டத்திலேயே பள்ளிக் கூடத்தைக் கட்டி, விளையாட்டு மைதானத்தையும் அமைத்துக் கொண்டார். சாதாரணமாக ஒரு குடும்பத்தில் நாலு பேர் இருந்தாலே சண்டை நாறி நாத்தம் எடுத்துவிடும்.
குறிப்பாக மாமியார், மருமகள் சண்டை குடுமிப்பிடி வரை போகும். இங்கு இவ்வளவு பேர் இருந்தால் என்னாகும் என்று தானே நினைக்கிறீர்கள்? அதுதான் கிடையாது. சின்னச் சின்னச் சச்சரவுகள் கூட வராதாம். அந்தளவுக்கு மிலிட்டரி ரூல் கடைப்பிடிக்கப்படுகிறதாம்.
ஜியோனாவின் முதல் மனைவிதான் இராணுவத் தளபதியாம். துணி துவைப்பதில் தொடங்கி பாத்திரம் துலக்குவது, சமையல் செய்வது வரை யார் யார் என்னென்ன வேலை செய்வது என்பதைச் சாட் போட்டுக் கொடுத்து விடுவாராம். அதன்படி அவரவர் வேலையை முடித்துவிட்டு கம்முனு போய்க்கிட்டே இருக்கணும்.
இது குறித்து ஜியோனாவிடம் கேட்டதற்கு, நான் கடவுளின் செல்லக் குழந்தைப் போல் உணர்கிறேன். என்னைப் பார்த்துக் கொள்வதற்கு ஏராளமான மக்களைக் கொடுத்திருக்கிறார். மேலும் 39 மனைவிகளுக்குக் கணவனாகவும் உலகிலேயே மிகப் பெரிய குடும்பத்திற்குத் தலைவனாகவும் இருக்கும் நான் மிகப் பெரிய அதிர்ஷ்டசாலி.
1942 இல் இந்தச் சனா பிரிவை எனது தந்தை தான் நிறுவினார். தற்போது 4000 பேர் இந்தப் பிரிவில் அங்கத்தினர்களாக உள்ளனர். இந்தப் பிரிவை மேலும் விரிவுபடுத்துவதற்காக இன்னும் திருமணங்களைச் செய்ய விரும்புகிறேன். அதற்காக அமெரிக்கா போக முடிவு செய்திருக்கிறேன்.
எனது மகன் தான் தாத்தாவைப் போல உள்ளூரில் ஏழைப் பெண்களைத் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்துகிறான் என்கிறார். இவரது தந்தைக்கும் ஏராளமான மனைவிகளாம்.“ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள்” புத்தகத்தில் இடம்பிடித்ததிலிருந்து ஜியோனாவின் குடும்பம் ரொம்ப பிஸியாம்.
உலகம் முழுவதும் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் இவரது குடும்பத்துடன் செல்பி எடுக்கத் தவறுவதே இல்லையாம்.
இந்தக் குடும்பத்தால் மிசோரம் மாநில அரசுக்கு சுற்றுலா வருவாய் குவிகிறதாம். சுற்றுலாத்துறைக்கு வருவாய் வருவதைப் பார்த்த ஜியோனாவுக்கு மாநில அரசே கல்யாணம் பண்ணி வைச்சாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள்.