7500 கடிதங்களை புறக்கணித்த மைத்திரி! அதிருப்தியில் பாதிக்கப்பட்டவர்கள்

267

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு 7500ற்கும் மேற்பட்ட கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்ட போதும், எந்தவித பதிலும் கிடைக்கவில்லை என வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது எனக் கேள்வியெழுப்பி ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதங்களுக்கு பதில் வழங்கப்படாமையினால் கடிதத்தை அனுப்பும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் இன்றைய தினம் 152வது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட எந்தவொரு கடிதத்திற்கும் பதில் கிடைக்கவில்லை என வவுனியா காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவி கா.ஜெயவனிதா குறிப்பிட்டுள்ளார்.

150 நாட்களை கடந்தும் போராட்டத்தை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்ட ஜெயவனிதா, ஜனாதிபதி கூட தங்களது போராட்டம் தொடர்பில் கண்டு கொள்ளவில்லை என்றும் கவலை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதிக்கு நாளொன்றுக்கு ஆயிரம் கடிதங்கள் வீதம் அனுப்பி வைக்கப்பட்டதுடன், பத்து நாட்கள் இடைவெளி விட்டு 500 கடிதங்களையும் அனுப்பியிருந்ததாகவும்

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கடந்த பெப்ரவரி மாதம் 24ம் திகதி முதல் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக தீர்க்கமான முடிவை தெரிவிக்க வேண்டும், அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் போராட்டத்தின் 150வது நாளான நேற்று முன்தினம் வவுனியா கந்தசுவாமி கோவிலில் தேங்காய் உடைத்து வழிபாடு மேற்கொள்ளப்பட்டு கவனயீர்ப்பு பேரணியொன்றும் மேற்கொள்ளப்பட்டது.

இதேவேளை, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE