மகளிர் டி20 உலகக் கிண்ணத்தின் அரையிறுதி போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வியை தழுவியது.
மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக் கிண்ண தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதின.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற முதலில் ஆடிய இந்திய அணியில், தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அதிரடியாக 23 பந்துகளில் 34 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார். அதன் பின்னர் தனியா பாட்டியா 11 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த ஜெமிமா ரோட்ரிகஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அணியின் ஸ்கோர் 89 ஆக உயர்ந்தபோது 26 ஓட்டங்களில் ஜெமிமா ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த வீராங்கனைகள் இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனால் இந்திய அணி 19.3 ஓவர்களில் 112 ஓட்டங்களுக்கு சுருண்டது. கேப்டன் ஹர்மன்பிரீத் 16 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் ஹீதர் நைட் 3 விக்கெட்டுகளையும், சோபி மற்றும் கார்டன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணியில், தொடங்க வீராங்கனைகள் வியாட் மற்றும் பீமாண்ட் இருவரும் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர். அதன் பின்னர் வந்த எமி எலன் ஜோன்ஸ்-நடாலி ஜோடி அபாரமாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது.
எமி எலன் 47 பந்துகளில் ஒரு சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 53 ஓட்டங்களும், நடாலி 38 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 52 ஓட்டங்களும் விளாசினர். இதன்மூலம் இங்கிலாந்து அணி 17.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 116 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலமாக இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
