452
எபோலா நோயினால் பாதிக்கப்பட்ட மதபோதகரை அழைத்துவர விமானம் அனுப்புகிறது ஸ்பெயின்
கடந்த பிப்ரவரி மாதம் கினியாவில் தொடங்கிய எபோலா விஷ நோய்த்தொற்றானது லைபீரியா, சியரா லியோன் நாடுகளிலும் பரவி இதுவரை 900-க்கும் அதிகமானோரை பலி வாங்கியுள்ளது. பொதுமக்கள் மட்டுமின்றி நோயாளிகளுக்குப் பணி புரியும் மருத்துவர்களும், தொண்டுப் பணி ஊழியர்களும் கூட தற்போது நோய்த்தொற்றுக்கு ஆட்படத் துவங்கியுள்ளனர்.

சென்ற வாரம் அமெரிக்க மருத்துவர் ஒருவரும், பெண் சமூக சேவைப் பணியாளர் ஒருவரும் இந்த நோயினால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்க அரசு அவர்கள் இருவரையும் மருத்துவ சிகிச்சைக்காக தங்கள் நாட்டிற்கு திரும்ப அழைத்து வந்துள்ளது.

இப்போது ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவரும், லைபீரியாவின் தலைநகர் மன்ரோவியில் உள்ள செயின்ட் ஜோசப் மருத்துவமனையில் பணி புரிந்து வருபவருமான மிகுவல் பஜாரேஸ்(75) என்ற மதபோதகருக்கு எபோலா நோய்த்தாக்கம் இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. கடந்த ஐம்பது வருடங்களாக லைபீரியாவில் தொண்டாற்றி வரும் இவர் சென்ற ஏழு வருடங்களாக இந்த மருத்துவமனையில் பணியாற்றி வருகின்றார். கடந்த சனிக்கிழமை அன்று இந்த மருத்துவமனையின் இயக்குனர் எபோலா நோயினால் மரணமடைந்ததைத் தொடர்ந்து பஜாரேசுடன் இன்னும் ஐந்து பேர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

பஜாரேசுக்கு நோய்த்தாக்கம் உறுதி செய்யப்பட்டிருப்பதைத் தொடர்ந்து சிகிச்சைக்காக அவரை ஸ்பெயின் அழைத்து வருவதற்காக விமானப்படை விமானம் ஒன்று அனுப்பப்பட உள்ளது என்று ஸ்பெயின் அரசு இன்று தெரிவித்துள்ளது.

இவருடன் தனித்து வைக்கப்பட்டிருந்த காங்கோ நாட்டைச் சேர்ந்தவரான சண்டல் பஸ்கலே, ஈகுவடோரியல் கினியாவைச் சேர்ந்தவரான பசியென்சியா மெல்கர் ரோன்டா ஆகியோரும் பாதிக்கப்பட்டுள்ளது சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் அவர்களையும் அழைத்துச் செல்லுமாறு உதவி மையம் ஸ்பெயின் நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.

SHARE