சம்பள பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நேற்று நிறைவு பெற்றதையடுத்து கொட்டகலை பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 05.10.2016அதாவது இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
18 மாதங்களாக இழுபறி நிலையில் காணப்பட்ட கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் ஆயிரம் ரூபாய் சம்பளம் வேண்டும் எனக் கோரி மலையகம் தழுவிய ரீதியில் கடந்த 26ஆம் திகதி முதல் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் 04ம் திகதி தொழில் அமைச்சில் நடைபெற்ற சம்பளப் பேச்சுவார்த்தையும் இணக்கப்பாடின்றி நிறைவுபெற்று 05ஆம் திகதி அதாவது இன்றைய தினம் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டதையடுத்து இன்று மீண்டும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.
முதலாளிமார் சம்மேளனம் ஆயிரம் ரூபாய் சம்பளத்தை வழங்கவேண்டும் எனக் கோரியே இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் கொட்டகலை நகர மத்தியில் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டமானது சுமார் 1 மணித்தியாலங்கள் வரை நடைபெற்றது. இதனால் நுவரெலியா அட்டன் ஊடான போக்குவரத்து தடைப்பட்டதுடன் இன்று நடைபெறும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைக்காவிடின் மீண்டும் கொட்டகலை நகரில் பாரிய போராட்டதை முன்னெடுக்கவுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்