வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் டொனால்ட் டிரம்ப் – ஹிலாரி இடையே வெடித்துள்ள வார்த்தை போரை வியாபாரமாக மாற்றி வணிக நிறுவனங்கள் கோடிகளை குவித்து வருகின்றன. அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் இடையிலான மூன்றாம் கட்ட நேரடி விவாத நிகழ்ச்சியில் ஹிலாரியை மோசமான பெண் என டிரம்ப் சாடினார். மறுநாள் டிரம்ப் ஆங்கிலத்தில் பயன்படுத்திய Nasty woman vote என்ற வார்த்தைகளுடன் டி சர்ட்டுகளை பெண் தொழில் முனைவோரான பாப்லேண்ட் தயாரித்தார். Nasty woman.co என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை உருவாக்கிய அவருக்கு மோசமான பெண் என்ற வாசகம் அடங்கிய டி சர்ட்டுகளை வாங்க ஒரே நாளில் ஆயிரக்கணக்கான ஆர்டர்கள் குவிந்தன.
இது பற்றி பேசிய அவர் ஏராளமானோர் எங்களுடன் இணைந்து டி சர்ட்டுகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், மாறுபட்ட சிந்தனை உடையதால் இதனை வாங்க பலர் ஆர்வம் காட்டுவதாகவும் குறிப்பிட்டார். மேலும் தேர்தல் நாளன்று Nasty woman டி சர்ட்டகளை அணிய பலர் ஆர்வம் காட்டுவதாக தெரிவித்தார். இதன் மூலம் மக்கள் தங்களுக்கு தேவையான தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து சிந்திக்க வைக்க முடியும் என்றார். பிரச்சாரத்தின் போதும் வாக்குப் பதிவு நாளன்றும் Nasty woman டி சர்ட்டை அணிந்து கொள்ள ஏராளமானோர் ஆர்வமாக உள்ளனர். இதுவரை இல்லாத அளவிற்கு அமெரிக்க அதிபர் தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹிலாரியும், டிரம்பும் அரசியல் நாகரீகத்தை கடந்து ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்து வருவதே இதற்கு காரணம்.