சூளைமேட்டுப் படுகொலை வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகத் தேவையில்லை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு விலக்கு அளித்துள்ள சென்னை உயர் நீதிமன்று, அதற்குப் பதிலாக இலங்கையிலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் ஊடாக வீடியோ கென்வரன்ஸ் மூலம் சாட்சியமளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. 1986 ஆம் ஆண்டு சென்னை சூளைமேட்டில் நடந்த கொலை தொடர்பாக, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். ஆனால், பின்னர் நடந்த வழக்கு விசாரணைகளுக்கு அவர் முன்னிலையாகவில்லை.
இதனால் 1996 இல் டக்ளஸுக்கு எதிராக பிடியாணை பிறக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் அவர் நேரில் முன்னிலையாக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில் நேரில் முன்னிலையாவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரி டக்ளஸ் தேவானந்தா மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனால் டக்ளஸ் தேவானந்தா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தற்போது அமைச்சராக இருக்கும் தன்னிடம் வீடியோ கென்வரன்ஸ் மூலம் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் திகதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது. இந்த நிலையில், டக்ளஸ் தேவானந்தா நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாக வேண்டும் என்ற சென்னை அமர்வு நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்துள்ள உயர் நீதிமன்றம், கொழும்பில் உள்ள இந்திய துணைத் தூதரகம் மூலம் வீடியோ கென்வரன்ஸ் ஊடாக சாட்சியமளிக்கவேண்டும் என்றும், நீதிமன்றம் உத்தரவிட்டால் மட்டும் தேவானந்தா நேரில் முன்னிலையாக வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது