ரணில் – மைத்திரி – சந்திரிகா அரசு இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணுமா?

270

 

 

அதிகாரத்துக்கு வந்த புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்துக்கான காலம் முடிவுக்கு வந்துள்ளது. இந்தக் காலகட்டத்துக்குள் நாட்டு மக்களின் நன்மைக்காக அரசாங்கம் செய்யப்போவதாக அறிவித்திருந்த வேலைத்திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

அரசாங்கம் சாதித்ததெல்லாம் முன்னைய அரசின் முக்கிய தலைவர்கள் மீதும், அந்த அரசில் முக்கிய பதவிகள் வகித்த அதிகாரிகள் மீதும், நூற்றுக்கணக்கில் விசாரணைகள் மேற்கொண்டதும், சிலர் மீது வழக்குகள் தொடுத்ததும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆதரவாளர்களை அரச பதவிகளிலிருந்து நீக்கியதும், பல்வேறு பிரதேசங்களில் அவர்கள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டதும்தான்.

அத்துடன் தமது அமைச்சரவையில் 30 பேருக்கு மேல் இடம் பெறமாட்டார்கள் என்று சொன்ன புதிய ஆட்சியாளர்கள், அதிகாரத்தைத் தக்க வைப்பதற்காக அத்தொகையை இரண்டு மூன்று மடங்காகப் பெருக்கியும் வருகின்றனர்.

அதைவிடப் பாரதூரமான விடயமென்னவெனில், முன்னைய அரசாங்கம் தேர்தலுக்கு முன்னர் ‘மக்கள் வரப்பிரசாத’ வரவு செலவுத்திட்டம் ஒன்றை சமர்ப்பித்திருந்த நிலையில், புதிய அரசாங்கம் வரப்போகின்ற பொதுத்தேர்தலை மனதில் வைத்து பிறிதொரு ‘மக்கள் வரப்பிரசாத’ வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்துள்ளது. இதன் காரணமாக நாட்டின் நிதி நிலைமை வங்குரோத்தாகி, அதைச் சமாளிப்பதற்காக அரசாங்கம் பணத்தாள்களை அச்சடித்து விடுவதற்கான குறுக்கு வழி முயற்சிகளிலும் இறங்கியிருக்கிறது.

இவையெல்லாவற்றையும் பார்க்கையில் ‘கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்குத்தான்’ என்ற முதுமொழிதான் ஞாபகத்துக்கு வருகின்றது.

நாட்டின் இந்த அடிப்படையான பிரச்சினைகளுக்காக தென்னிலங்கையில் ஜனநாயக மற்றும் இடதுசாரி சக்திகள் குரல் எழுப்புவதைக் காண முடிகிறது. இது தென்னிலங்கையில் எந்தச் சூழ்நிலைகளிலும் மாற்றுக்குரல் தொடர்ச்சியாக இருந்து வருவதன் வெளிப்பாடு. உத்தியோகபூர்வமான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை, சிறீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமைப் பதவியைப் பயன்படுத்தி புதிய ஜனாதிபதியும், முன்னைய ஜனாதிபதி சந்திரிகாவும் நெருக்கடியில் தள்ளிவிட்டுள்ள போதும், இந்த மாற்றுக்குரல் ஓங்கி ஒலிக்கின்றது.

அதேவேளை, ‘திண்ணை எப்போ காலியாகும்?’ எனக் காத்திருந்தது போலக் காத்திருந்து, எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தமக்குத் தரும்படி கேட்டு நிற்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு, உண்மையான எதிர்க்கட்சியாகச் செயல்படுகின்ற நிலையில் இருக்கின்றதா?

1994இல் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் பதவி ஏற்றதிலிருந்து எதிர்ப்பு அரசியலையே செய்து வந்த கூட்டமைப்பு, ஜனவரி 8ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் பிரச்சினை சம்பந்தமாக எந்தவொரு வாக்குறுதியையும் பெற்றுக் கொள்ளாமல் எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து அவரைப் பதவிக்குக் கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகித்தது. அதற்கு முன்னர் 2010இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போதும் கூட முன்னாள் இராணுவத் தளபதியும், புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் (கூட்டமைப்பினரின் மொழியில் தமிழின அழிப்பு யுத்தம்) முக்கிய பங்கு வகித்தவரும், தமிழ் மக்களுக்கு எதிராகப் பகிரங்கமாக கருத்து தெரிவித்து வந்தவருமான, சரத் பொன்சேகாவையே கூட்டமைப்பு ஆதரித்தது.

தமிழ் தலைமைகள் காலத்துக்குக் காலம் தமிழ் மக்களுக்கு எதிரான தென்னிலங்கை அரசியல் (ஐ.தே.க) கட்சியையே ஆதரிப்பதை ஒரு மரபாகக் கொண்டு வந்திருக்கின்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கின்ற தற்போதைய அரசாங்கம் கூட, தமிழ் மக்களின் பிரச்சினை சம்பந்தமாக எந்தவொரு தீர்வையும் காண்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதற்கான அறிகுறி எதனையும் காணவில்லை. மறுபுறத்தில் இந்த அரசாங்கத்தை ஆதரிக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பும் கூட அது சமபந்தமாக எந்தவொரு கோரிக்கையையும் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளதாகவும் தெரியவில்லை.

குறைந்தபட்சம் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பாவது ஏதாவது தீர்வுத் திட்டம் எதனையும் முன் வைத்திருக்கிறதோ என்றால், அதுவும் இல்லை. “தீர்வுத் திட்டம் தயாரிக்கிறோம்…தயாரிக்கிறோம்” என இதுவரை அவர்கள் பல தடவை சொல்லியும், அவர்களது தயாரிப்பு என்ன என்பது இதுவரை மூடுமந்திரமாகவே இருக்கின்றது.

புதிய அரசாங்கம் பொறுப்பேற்றதும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என அறிவித்தது. இது வழமையான வாய்ச்சவடால் என எல்லோருக்கும் தெரியும் என்றாலும், சிலருக்கு இந்த அரசாங்கத்தை தமிழ் கூட்டமைப்பும் சேர்ந்துதான் பதவிக்குக் கொண்டு வந்தது என்றபடியால், அது ஏதாவது செய்யக்கூடும் என்ற சிறு நப்பாசை ஏற்பட்டு இருந்தது. ஆனால் அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத் திட்டத்தில் அந்தப் பிரச்சினை இடம் பெறாததுடன், அரசாங்கம் பல கட்சிகளையும் கொண்டு அமைத்துள்ள ‘தேசிய நிறைவேற்றுச் சபை’யிலும் அதுபற்றி ஒருமுறை தன்னும் கலந்துரையாடப்படவும் இல்லை.

அரசாங்கத்தின் இந்தப் போக்கில் ஆச்சரியப்படுவதற்கு ஏதும் இல்லை. ஏனெனில் இந்த அரசாங்கத்தின் மூன்று முக்கிய புள்ளிகளான ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேன, சந்திரிகா குமாரதுங்க ஆகியோரின் நிலைகளை எடுத்துப் பார்த்தால் இந்த நிலை பற்றிப் புரிந்து கொள்ளலாம்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரே மைத்திரிபால சிறிசேன, தமிழ் மக்களின் பிரச்சினை சம்பந்தமாக இப்பொழுது எதுவும் கதைக்கக்கூடாது என திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். அதற்கு சிங்கள மக்களின் வாக்குகள் கிடைக்காது போய்விடும் என்ற அச்சம் மட்டும் காரணமல்ல. இனப்பிரச்சினை சம்பந்தமான அவரது நிலைப்பாடும் ஒரு காரணம். இருந்தும் சூடு சுரணையற்ற தமிழ் பேசும் மக்களான தமிழ் – முஸ்லீம் மக்களின் வாக்குகளால்தான் அவர் வெற்றி பெற்றார்.

ரணிலைப் பொறுத்தவரை, அவரது வரலாற்றைப் பற்றி புதிதாக ஏதும் சொல்லத் தேவையில்லை. அண்மையில் அவர் யாழ்ப்பாணம் சென்றிருந்த போது, “வடக்குப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்” என மொட்டையாகச் சொன்னார். இதில் ஆழமான அர்த்தம் பொதிந்து கிடக்கிறது. அதாவது வடக்கு மட்டுமின்றி, கிழக்கும் தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடம் என்பதை ஏற்றுக்கொள்ளாத தொனி இதில் இருக்கின்றது. அதுமட்டுமல்லாமல், இந்தப் பிரச்சினையை தேசிய இனப்பிரச்சினை என்றோ அல்லது குறைந்தபட்சம் தமிழ் மக்களின் பிரச்சினை என்றோ கூட அவர் சொல்ல விரும்பவோ, தயாராகவோ கூட இல்லை. இன்று மட்டுமல்ல, அவர் என்றுமே தமிழ் மக்களின் பிரச்சினையை ‘வடக்கு பிரச்சினை’ என்றுதான் சொல்லி வந்திருக்கிறார் என்பது அவரை அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும்.

அதுமட்டுமல்ல, சந்திரிகா ஜனாதிபதியாக இருந்த காலத்தில் 2000ஆம் ஆண்டில் அவரது அரசாங்கம் முன்வைத்த ‘தீர்வுப்பொதி’யை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த போது, தமது ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்கள் அதன் பிரதிகளை பாராளுமன்றத்துக்கு உள்ளேயே தீ வைத்துக் கொளுத்திய போது ரணில் வேடிக்கை பார்த்து ரசித்ததை நாட்டு மக்கள் தொலைக்காட்சிகளில் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அதுமட்டுமின்று. அவர் தலைமைதாங்கும் ஐ.தே.க கட்சிதான் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வாக காலத்துக்காலம் உருவாக்கப்பட்ட பண்டா – செல்வா ஒப்பந்தம், இந்திய – இலங்கை உடன்படிக்கை, சந்திரிகாவின் தீர்வுத் திட்டம் என்பனவற்றை நடைமுறைப்படுத்த விடாமல் தடுத்தவர்கள். அவரது மாமன் ஜே.ஆர்.ஜெயவர்தன தான் பண்டா – செல்வா உடன்படிக்கையைக் கிழித்தெறிய வைப்பதற்காக அபகீர்த்திமிக்க ‘கண்டி யாத்திரை’யை முன்னின்று நடாத்தியவர். அவரது ஆட்சியில்தான் 1977, 1981, 1983 ஆண்டுகளில் தமிழ் மக்கள் மீது அரச ஆதரவுடன் வன்செயல் கட்டவிழ்த்துவிடப்பட்டு, ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், அவர்களது சொத்துகள் சூறையாடப்பட்டு, வாழ்விடங்களை விட்டு துரத்தியடிக்கப்பட்டார்கள். அந்த மாமனாரின் அரசில் ரணில் முக்கியமான ஒரு அமைச்சராகப் பதவி வகித்தவர் என்பதும் மறந்துவிடக்கூடியதல்ல.

ரணிலின் ஐ.தே.க தான் 1977இல் பதவிக்கு வந்ததும் அரசியல் ரீதியாகத் தீர்வுகாண வேண்டிய இனப்பிரச்சினையை யுத்தமாக மாற்றியது என்பதையும் மறந்துவிட முடியாது. எனவே ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் என யாராவது (கூட்டமைப்பு அப்படிச் சொல்லித்தான் தமிழ் மக்களை ஏமாற்ற முயல்கிறது) சொன்னால், அவர்கள் மோசடிக்காரர்கள் அல்லது அவர்களுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

இதில் தனது தந்தை எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க போல, சந்திரிகாவும் இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் உண்மை விசுவாசத்துடன் செயல்பட்டவர் என்ற ஒரு கருத்து இருந்தது. ஆனால் ‘பன்றியோடு சேர்ந்த பசுமாடும்…ஏதோ செய்யும் என்பது போல’, மகிந்த ராஜபக்ச மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சி, குரோதம் என்பன காரணமாக அவர் ஐ.தே.கவுடன் சேர்ந்ததின் மூலம் அதைக் கெடுத்துக் கொண்டுள்ளார். அதுவும் தான் முன்வைத்த எந்தத் தீர்வுத் திட்டத்தை ரணில் கோஸ்டி பாராளுமன்றத்தில் தீ வைத்து எரித்ததோ, அந்த ரணில் கோஸ்டியுடன் அவர் இன்று கைகோர்த்து நிற்கும் அலங்கோலத்துக்கு அவர் எந்த நியாயத்தையும் சொல்லித் தப்பிவிட முடியாது.

இந்த நிலைமையில் என்ன முகாந்திரத்தை வைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்றைய ஐ.தே.க அரசாங்கத்தை ஆதரிக்கின்றது என ஒருவர் யோசிக்கக்கூடும். அப்படி ஒருவர் யோசித்தால் அதில் நியாயம் உண்டு. ஆனால் அதற்கான காரணங்கள் கூட்டமைப்புக்கு உண்டு என்பதில் விடயம் அடங்கியிருக்கிறது. தமிழ் மக்களின் பிரச்சினையை விட கூட்டமைப்புக்கு அந்தக் காரணங்கள் முக்கியமானவை.

அதில் பிரதானமானது, இனப்பற்றை விட ஐ.தே.கவுடனான வர்க்கரீதியான, அரசியல் ரீதியான பற்றுதல் கூட்டமைப்புக்கு முக்கியமானது. அடுத்தது, இலங்கை அரசியலில் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான, ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகளை தொடர்ச்சியாக எதிர்த்து வந்ததின் பழக்க தோசம். இன்னொன்று, இனப்பிரச்சினையை யாராவது தீர்த்துவிட்டால், பிச்சைக்காரனின் புண்ணைப் போல அதைக்காட்டி அரசியல் பிழைப்பு நடாத்த முடியாமல் போய்விடுமே என்ற அச்சம்.

எனவே ஐ.தே.க ஆட்சிக்கு வந்தால் கூடிக்குலாவுவதும், ஏனைய கட்சிகள் வந்தால் எதிர்ப்பு அரசியல் நடாத்துவதும் என்ற தமிழ் தலைமைகளின் இரட்டை வேட அரசியலால், தமிழ் மக்களின் பிரச்சினை மீண்டும் கிணற்றில் போட்ட கல்லாக மாறிவிடப்போகும் அபாயம் எழுந்துள்ளது. இந்த அவல நிலையை முற்போக்கு சக்திகள்தான் சரியாகவும், தீர்க்கதரிசனத்துடனும் புரிந்து கொண்டு, சரியான தலைமைத்துவத்தைத் தமிழ் மக்களுக்கு வழங்குவதற்கு பிரயத்தனம் எடுக்க வேண்டும். 1970களில் இந்தப் பிரச்சினை தீவிரமடைந்த போது, உண்மையான மார்க்சிச – லெனினிசவாதிகள் அதைச் சரியாகப் புரிந்து கொண்டு, எவ்வாறு தமிழ் மக்களின் பரந்துபட்ட ஜனநாயக முன்னணி ஒன்றை உருவாக்கி, தமிழ் மக்களின் அழிவுக்கு வழி கோலிய தேசிய ஒடுக்குமுறைக்கும் பிரிவினைவாதத்திற்கும் எதிராகப் போராட முன்வந்தார்களோ, அதேபோன்று ஏற்பட்டிருக்கின்ற இன்றைய சூழ்நிலையிலும,; அவர்கள்தான் நிலைமையைச் சரியாகப் புரிந்துகொண்டு முன்கையெடுத்துச் செயல்பட முன்வர வேண்டும்.

பொருளாதாரப் பிரச்சினைகளால் நாட்டு மக்கள் அனைவரும் பாதிப்புக்கு உள்ளாகின்ற அதேவேளை, தமிழ் மக்கள் தேசிய இனப் பிரச்சினை சம்பந்தமான பாதிப்புக்களுக்கும் உள்ளாகின்றனர். சுதந்திரத்துக்கு முந்திய குடியேற்றத் திட்டங்களுடன் இனப் பிரச்சினை ஆரம்பமாகிய போதிலும், 1947ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது பாராளுமன்றத் தேர்தலில் அது பிரதான பேசுபொருளாக இருக்கவில்லை. வடக்கில் அமோக வெற்றியீட்டிய தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைமை, டீ.எஸ்.சேனநாயகவின் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் இணைவதற்கான முயற்சியை முன்னெடுத்த கட்டத்திலேயே இனப் பிரச்சினையின் தீர்வு பற்றிய பேச்சு எழுந்தது. அப்போதுதான் சமஸ்டிக் கோரிக்கை தமிழ் அரசியல் அரங்குக்கு வந்தது.

ஐ.தே.கட்சியின் அரசாங்கத்தில் இணைவதற்கான சில நிபந்தனைகளை அப்போது அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த எஸ்.ஜே.வி.செல்வநாயகம் கட்சிக்குள் முன்வைத்தார். சமஸ்டி அடிப்படையிலான புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்காக அரசியலமைப்பு நிர்ணய சபையை நிறுவ வேண்டும் என்பது அந்த நிபந்தனைகளுள் பிரதானமானது. இக்கோரிக்கையை டொக்டர் ஈ.எம்.வி.நாகநாதன் 1951 மார்ச் 14ந் திகதி செனெற் சபையில் தனிநபர் பிரேரணையாக முன்மொழிந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மைத் தீர்மானத்தின் அடிப்படையில் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் நிபந்தனைகளை நிராகரித்து ஐ.தே.கவின் அரசாங்கத்தில் இணைந்தது. இந்த முடிவை ஆட்சேபித்து எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் தலைமையில் கட்சியிலிருந்து வெளியேறித் தமிழரசுக் கட்சியை ஆரம்பித்தவர்கள், இரண்டாவது பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் (1952) பிரதான பேசுபொருளாகச் சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்தனர். இதற்கு மக்கள் மத்தியில் பெருமளவு ஆதரவு இருக்கவில்லை. தமிழரசுக் கட்சி நிறுத்திய ஏழு வேட்பாளர்களில் இருவர் மாத்திரம் தெரிவாகினர். எஸ்.ஜே.வி. செல்வநாயகம் காங்கேசன்துறைத் தொகுதியில் ஐ.தே.க. வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.

சமஸ்டிக்கு ஆதரவு

மூன்றாவது பொதுத் தேர்தல் நடைபெற்ற காலத்தில் (1956) சிங்களம் மட்டும் என்ற கோசம் தென்னிலங்கையில் பிரதான இடத்தைப் பிடித்திருந்தது. நித்தம்புவவில் 17 – 12 – 1955ந் திகதி நடைபெற்ற வருடாந்த மாநாட்டில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியும், 18 – 02 – 1956ல் களனியில் நடைபெற்ற வருடாந்த மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியும், ‘சிங்களம் மட்டும்’ என்ற தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தன. சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம் தமிழின் நியாயபூர்வ உபயோகத்தை அங்கீகரிப்பதற்கான ஏற்பாட்டுடன், ஒரே அரசகரும மொழியாக சிங்களம் என்றும் (Sinhala the only official Language with provision for the recognition of reasonable use of Tamil), ஐக்கிய தேசியக் கட்சியின் தீர்மானம் இலங்கையின் அரச மொழியாக சிங்களம் மாத்திரம் இருத்தல் வேண்டும் (Sinhala should be made the state Language of Ceylon) என்றும், அமைந்திருந்ததை இங்கு குறிப்பிடலாம்.

இந்தப் பின்னணியில் தமிழரசுக் கட்சியின் சமஸ்டிக் கொள்கை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெருமளவு மக்களைக் கவர்ந்தது. சமஸ்டி அமைப்பில் தமிழ் மக்களுக்கு மாத்திரமின்றி முஸ்லிம்களுக்கும் தனியான அலகொன்றைக் கோருவோம் என்று தமிழரசுக் கட்சி வாக்குறுதி அளித்ததால், முஸ்லிம்களும் அக்கட்சியை ஆதரித்தனர். தமிழரசுக் கட்சி தேர்தலில் பத்து ஆசனங்களைப் பெற்றது.

கிட்டத்தட்ட இருபத்தைந்து வருட காலம் தொடர்ச்சியாக சமஸ்டியை வலியுறுத்தி வந்த தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணியாக உருமாற்றம் பெற்று, 1976 மே 14ந் திகதி வட்டுக்கோட்டை மாநாட்டில் தனிநாட்டுத் தீர்மானத்தை நிறைவேற்றியது. கொள்கை நிலைப்பட்ட முடிவாக இதைக் கருத முடியாது. எதிர்காலத்தில் தமிழ் மக்களை மோசமான அவல நிலைக்கு இட்டுச் செல்லும் முடிவாக இது இருந்தது.

தமிழரசுக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் 1961 டிசம்பர் 26ந் திகதி நடைபெற்றபோது, வவுனியாவைச் சேர்ந்த ஏ.சிற்றம்பலம் தனிநாட்டுப் பிரேரணையை முன்மொழிந்தார். தமிழரசுக் கட்சி அதை நிராகரித்தது. தனிநாட்டுப் பிரேரணை ஆயுதப்போருக்கு இட்டுச் செல்லும் என்றும், ஆயுதப்போர் புதிய பிரச்சினைகளை உண்டாக்குமேயொழிய, எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காணாது என்றும், தமிழரசுக் கட்சித் தலைமை கூறியது.

எந்தப் பிரச்சினைக்கும் தீர்வுகாண முடியாத தனிநாட்டுப் பிரேரணையை வட்டுக்கோட்டையில் ஏன் நிறைவேற்றினார்கள் என்பது முக்கியமான கேள்வி. கொள்கைக்கு அப்பாற்பட்ட சமரச ஏற்பாடாகவே தனிநாட்டுப் பிரேரணை நிறைவேற்றப்பட்டது. தமிழரசுக் கட்சியும், தமிழ் காங்கிரஸ் கட்சியுமே, தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரதான கட்சிகள். சமஸ்டியைத் தீவிரமாக வலியுறுத்திய தமிழரசுக் கட்சியும், சமஸ்டியைத் தீவிரமாக எதிர்த்த தமிழ் காங்கிரஸ் கட்சியும், கூட்டுச் சேர்வதற்குச் சமஸ்டி அல்லாத வேறொரு கொள்கை தேவைப்பட்டதாலேயே இந்த முடிவுக்கு வந்தார்கள்.

கூட்டணித் தலைவர்களின் பிந்தியகால செயற்பாடுகளிலிருந்து தனிநாட்டுத் தீர்மானத்தில் அவர்கள் விசுவாசமான பற்றுறுதி கொண்டிருக்கவில்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம். தனிநாட்டுத் தீர்மானத்தை நிறைவேற்றிய பின், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் செய்த முதலாவது பிரதான காரியம், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டதும், அதிகாரங்கள் இல்லாததுமான மாவட்ட அபிவிருத்திச் சபையை ஏற்று அதற்கான தேர்தலில் போட்டியிட்டதே. இன உணர்வைத் தட்டியெழுப்பும் பிரசாரத்தில் வல்லவர்களான கூட்டணித் தலைவர்கள், தனிநாட்டுத் தீர்மானத்தையும் அவ்வாறு கச்சிதமாகப் பயன்படுத்தித் தங்கள் பாராளுமன்ற ஆசனங்களைத் தக்க வைத்துக் கொண்டனர். ஆனால், அத்தீர்மானத்தின் விளைவாக, மக்கள் இழக்கக்கூடாததையெல்லாம் இழந்து ஏதிலிகளாக நிற்கின்றனர்.

பின்னடைவு

தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு என வௌ;வேறு பெயர்களில் செயற்பட்ட போதிலும், ஆறு தசாப்தங்களுக்கு மேலாக ஒரே தலைமைப் பாரம்பரியமே தொடர்கின்றது. இக்காலப்பகுதியில், இத்தலைமை அதன் பகிரங்க அரசியல் செயற்பாட்டில் இனப்பிரச்சினையைத் தவிர வேறு எந்தப் பிரச்சினையையும் உள்ளடக்கவில்லை. அரசியலில் அறுபது வருடங்கள் சாதாரண காலப்பகுதி அல்ல. இனப் பிரச்சினை தொடர்பாக கருத்து ஈடுபாட்டுடனும், தீர்க்கதரிசனத்துடனும் செயற்பட்டிருந்தால், இக்காலப்பகுதியில் சிறிதளவாவது முன்னேற்றத்தை அடைய முடிந்திருக்கும். ஆனால் தமிழ் மக்கள் பின்னடைவுகளையே தொடர்ச்சியாக சந்தித்திருக்கிறார்கள். இழப்புகளும், அழிவுகளுமே அவர்கள் கண்ட பலன். இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வில் அக்கறை உள்ள ஒவ்வொருவரும் இதற்கான காரணம் என்னவென்று நிதானமாகச் சிந்திக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.

சமகால யதார்த்தத்தை விளங்கிச் செயற்படுவதும், கிடைக்கும் சந்தர்ப்பங்களைச் சாதகமாகப் பயன்படுத்துவதும், நட்புச் சக்திகளைச் சரியாக இனங்காண்பதும், அரசியல் செயற்பாடுகளைச் சரியாக முன்னெடுப்பதற்கு அத்தியாவசியமானவை. தமிழ் மக்களின் அரசியல் தலைமையைத் தொடர்ச்சியாகத் தங்களிடம் வைத்திருப்பதில் தமிழ்த் தலைவர்கள் அக்கறை செலுத்தினார்களேயொழிய, மேலே கூறிய விடயங்களில் கவனம் செலுத்தவில்லை. சிங்கள மக்கள் மத்தியிலும் ஆதரவுத் தளமொன்றை உருவாக்குவதன் மூலமே இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு நிரந்தரமானதாக நிலைக்க முடியும். தமிழ்த் தலைவர்கள் இதைப் புரிந்துகொண்டு செயற்படவில்லை. சி;ங்கள விரோத உணர்வைத் தமிழ் மக்களிடம் தோற்றுவிக்கும் வகையிலேயே இவர்களின் அரசியல் செயற்பாடுகள் அமைந்திருந்தன. தமிழ் மக்களின் போராட்டம் சிங்கள மக்களுக்கு எதிரானது என்ற உணர்வு அம்மக்களிடம் தோன்றுவதற்கு இது இடமளித்தது.

கிடைத்த சந்தர்ப்பங்களைச் சாதகமான முறையில் பயன்படுத்தியிருந்தால், இன்று தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அவலநிலையைத் தவிர்க்க முடிந்திருக்கும். பண்டா – செல்வா ஒப்பந்தம், வடக்கு – கிழக்கு மாகாணசபை, சந்திரிகாவின் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டம் என்பன விசேடமாகக் குறிப்பிட வேண்டியவை. இவை தொடர்பாகத் தமிழ்த் தலைமை நடந்துகொண்ட முறை, ஐக்கிய தேசியக் கட்சிக்கு நேரடியாக நன்மை பயப்பதாக இருந்ததையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

பண்டா – செல்வா ஒப்பந்தம் சமஸ்டி ஆட்சியமைப்புக்கான அடிப்படையை உருவாக்குகின்றது என்று எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அப்போது கூறினார். ஆனால் ஒப்பந்தத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட நேரத்தில் அதைப் பலவீனப்படுத்தும் வகையிலேயே அவரது கட்சி செயற்பட்டது. தென்னிலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சி ஒப்பந்தத்துக்கு எதிராக மோசமான இனவாதப் பிரச்சாரத்தை மேற்கொண்டது. ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தால் நாடு பிளவுபட்டுவிடும் என்றும், வடக்கு – கிழக்கு மாகாணங்களில் வாழும் சிங்களவர்கள் தமிழ் படிக்க நேரும் என்றும், அம்மாகாணங்களில் சிங்களவர்களைக் குடியேற்ற முடியாது போய்விடும் என்றும், சிங்கள மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ததோடு, பௌத்த குருமாரையும் இப்பிரச்சாரத்தில் இணைத்துக் கொண்டது.

ஒப்பந்தத்துக்கு எதிராக ஜே.ஆர்.ஜெவர்த்தனவின் தலைமையில் கண்டி யாத்திரையும் சென்றார்கள்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரச்சாரத்துக்கும், அரசாங்கத்திலிருந்த வலதுசாரி அமைச்சர்களின் எதிர்ப்புக்கும் மத்தியில், பிரதமர் பண்டாரநாயக்க ஒப்பந்தத்தை ஆதரித்து உறுதியாக நின்றார். இந்த நிலையில், பிரதமரைப் பலவீனப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக வலதுசாரி அமைச்சர்கள் குழு மேற்கொண்ட தீர்மானத்தின் அடிப்படையில் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு மீண்டும் சிங்கள சிறீ இலக்கத் தகடு பஸ்கள் அனுப்பப்பட்டன. வலதுசாரி அமைச்சர்களின் நோக்கத்தை விளங்கிக்கொண்டு பிரதமரின் கரங்களைப் பலப்படுத்தி ஒப்ப்தத்தை நடைமுறைக்குக் கொண்டுவரும் வகையில் தமிழரசுக் கட்சி செயற்பட்டிருக்க வேண்டும். ஆனால் தமிழரசுக் கட்சி சிங்கள சிறீ எதிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துப் பிரதமரைப் பலவீனப்படுத்தியது. அரசியல்வாதி என்ற வகையில் ஒப்பந்தத்தை ரத்துச் செய்வதைத் தவிர வேறு வழி பிரதமருக்கு இருக்கவில்லை. ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்ற ஐக்கிய தேசியக் கட்சியின் எண்ணம் ஈடேறுவதற்குத் தமிழரசுக் கட்சியும் கைகொடுத்தது.

வடக்கு கிழக்கு மாகாணசபை செயற்பட முடியாத நிலையைப் புலிகளும் பிரேமதாசவும் இணைந்து உருவாக்கியபோது, தமிழர் விடுதலைக் கூட்டணி அதற்கு எதிராக எந்த நகர்வும் மேற்கொள்ளாததின் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியின் முடிவுக்கு மௌன ஆதரவு அளித்தது.

சந்திரிகாவின் அரசாங்கம் முன்வைத்த அதிகாரப் பகிர்வுத் தீர்வுத்திட்டம் பல சிறப்பான அம்சங்களைக் கொண்டிருந்தது. அது சமஸ்டி ஆட்சியமைப்புக்கு மிக அண்மையான திட்டம். அத்தீர்வுத்திட்டத்தின் பிராந்திய சபைகளுக்கான அதிகாரங்களையோ, விடயங்களையோ, எல்லைகளையோ, சம்பந்தப்பட்ட சபையின் அல்லது சபைகளின் சம்மதமின்றி எவ்விதத்திலும் மாற்ற முடியாது. இது ஒரு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடு. இந்தத் தீர்வுத்திட்டம் உரிய முறையில் பாராளுமன்றத்தில் நிறைவேறவிடாது தடுப்பது ஐக்கிய தேசியக் கட்சியின் அன்றைய பிரதான நிகழ்ச்சி நிரலாக இருந்தது. தீர்வுத் திட்டத்தை எதிர்த்ததன் மூலம் தமிழ்த் தலைவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் நோக்கம் நிறைவேறுவதற்குக் கைகொடுக்கும் வகையில் செயற்பட்டார்கள்.

அன்று அத்தீர்வுத்திட்டத்தை ஒட்டுமொத்தமாக நிராகரித்துவிட்டு, சந்திரிகா அரசாங்க காலத்தில் தீர்வுக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைகள் இனப்பிரச்சினைக்கான தீர்வில் எடுகோளாக இருக்கலாம் என்று இப்போது கூட்டமைப்பினர் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.

இடதுசாரி எதிர்ப்பு

தேசிய இனப் பிரச்சினை சிங்களம் மட்டும் சட்டத்துடன் புதிய பரிமாணத்தைப் பெற்றது. தமிழ் அரசியல் அரங்கில் இப்பிரச்சினை பிரதான இடத்தைப் பெறத் தொடங்கியதும் இதன் பின்னரே. இக்காலத்தில் இடதுசாரிக் கட்சிகள் சிங்களம் மட்டும் சட்டத்துக்கு எதிரான நிலைப்பாட்டில் மிகவும் உறுதியாக நின்றன. சிங்களம் மட்டும் சட்டத்தை அவை பாராளுமன்றத்தில் எதிர்த்தது மாத்திரமின்றி, தென்னிலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில் அதற்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டன. இடதுசாரிக் கட்சிகளை நட்புச் சக்தியாகக் கருதி அவற்றுடன் உறவை வளர்த்துக் கூட்டாகச் செயற்படுவதற்கு அன்றைய தமிழ்த் தலைமை முன்வந்திருந்தால், இனப் பிரச்சினையின் தீர்வுக்குப் பலம்மிக்க ஆதரவுத் தளமொன்றைச் சிங்கள மக்கள் மத்தியில் உருவாக்க முடிந்திருக்கும். தமிழ்த் தலைவர்கள் அப்போது இடதுசாரி எதிர்ப்பிலேயே கூடுதலாகக் கவனம் செலுத்தினார்கள். தென்னிலங்கையில் இடதுசாரிகளை எதிர்க்கும் சக்திகளையே நட்புச் சக்திகளாகக் கருதினார்கள். இதற்கு இரண்டு காரணங்களைக் கூறலாம். அன்றைய தமிழ்த் தலைமையின் பிதாமகரான எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அடிப்படையிலேயே மார்க்சிய விரோதி என்பது ஒரு காரணம். அவர் மார்க்சிஸ்ட்டுகளிலிருந்து தூர விலகி நிற்கும் மனோபாவம் உடையவர். இடதுசாரிகள் தங்கள் தலைமைக்கு அச்சுறுத்தலாக வளர்ந்துவிடுவார்கள் என்ற அச்சம் அன்றைய தமிழ்த் தலைமைக்கு இருந்தது இரண்டாவது காரணம்.

இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னரே யாழ்ப்பாண வாலிபர் சங்கத்தின் செயற்பாடுகளுக்கூடாக யாழ்ப்பாண மாவட்டத்தில் இடதுசாரி சிந்தனை ஓரளவு வேரூன்றியிருந்தது. யாழ்ப்பாண வாலிபர் சங்கம், இடதுசாரிகளின் ‘சூரியமல்’ இயக்கம் மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கை ஆகியவற்றுடன் உடன்பாடு கொண்டு செயற்பட்டதோடு, அதன் முக்கியஸ்தர்களாக விளங்கிய ஹன்டி பேரின்பநாயகம், பி.நாகலிங்கம், கே.தர்மகுலசிங்கம், ரி.துரைசிங்கம், வி.சிற்றம்பலம், வி.சச்சிதானந்தம் போன்றோர் பிற்காலத்தில் இடதுசாரிக் கட்சிகளுடன் தங்களை இணைத்துக் கொண்டனர்.

புதிய பாதை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் பாதை இன்று முட்டுச்சந்துக்கு வந்திருக்கிறது. தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பெருமளவு பிரதிபலிக்கும் அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை நிராகரித்துப் புலிகளின் தனிநாட்டு நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்பட்டார்கள். இச் செயற்பாடு இவர்களின் பாராளுமன்றப் பதவிகளைக் காப்பாற்றுவதற்கு உதவியது. மக்களுக்கு அழிவுகளும் இழப்புகளுமே கிடைத்தன. வரலாற்றில் முன்னர் ஒருபோதும் இடம்பெற்றிருக்காத அவலங்களைத் தமிழ் மக்களுக்கு இவர்கள் ஏற்படுத்தினர்.

ஆயுதப் போராட்டமோ, தனிநாடோ சாத்தியமில்லை என்பது தெளிவாகிவிட்டது. இந்த நிலையில், சென்ற பாதை தவறானது என்பதைப் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டு புதிய சூழ்நிலைக்கு உகந்த வேலைத்திட்டமொன்றைத் தயாரித்துச் செயற்படுவதற்குத் தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை. தாங்களாக எதுவும் செய்ய முற்படாமல் சர்வதேச சமூகம் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

இன்றைய நிலையில் நியாயமான அரசியல் தீர்வு அரசியலமைப்புத் திருத்தத்திற்கூடாகவே நடைமுறைக்கு வர வேண்டும். சர்வஜன வாக்கெடுப்பின் பின்னரே அரசியலமைப்புத் திருத்தம் பூர்த்தியடையுமென்பதால், சிங்கள மக்களில் கணிசமானோரின் ஆதரவு அவசியமாகின்றது. தமிழ் பேசும் மக்களும், சிங்கள மக்களும் இணைந்து தீர்வுக்கான கோரிக்கையை ஒரே குரலில் முன்வைக்கும் நிலையிலேயே இது சாத்தியமாகும். இந்த இலக்கை நோக்கிய அணுகுமுறைதான் இன்றைய தேவை.

இவ்விடத்தில் தென்னிலங்கையின் இடதுசாரிகளும் முற்போக்காளர்களுமே உண்மையான நட்பு சக்தியாகச் செயற்படக்கூடியவர்கள்.

இனப்பிரச்சினை பற்றி முற்போக்கான சிந்தனையுடன் பல ஆய்வறிவாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் வௌ;வேறு தளங்களில் செயற்படுகின்றனர். இவர்களையெல்லாம் அணிதிரட்டி அரசியல் தீர்வக்கான போராட்டத்தைத் தமிழ் மக்களின் போராட்டம் என்ற வட்டத்துக்கு வெளியே எடுத்துச் சென்று தமிழ், சிங்கள மக்களின் கூட்டுப் போராட்டமாக்கும் பட்சத்தில் நிரந்தரத் தீர்வு சாத்தியமாகும்.

SHARE