பொருத்து வீடுகள் தமிழ் ஈழத்திற்குப் பொருந்துமா?

332

 


steel-house-400-seithy

மனித வாழ்வில் வீடு மிகவும் அடிப்படையானது. மனிதர்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான உறையுள் என்பது அதில் வசிக்கும் மனிதருக்குள் பல தாக்கங்களை உருவாக்கிறது. மனித நாகரரீக வளர்ச்சியில் அடையாளங்களாக உறையுள் எனப்படும் வீடுகள் மிகவும் முக்கிய இடத்தை வகிக்கின்றன. எல்லா இனங்களுக்கும் தனித்துவமான வீட்டு அடையாளம் என்ற ஒன்று இருக்கிறது. ஈழத் தமிழர்களுக்கும் அத்தகைய வீட்டு அடையாளங்கள் இருக்கின்றன. அதுவே அவர்களின் பண்பாடு, பாரம்பரியம், தனித்துவத்தை விளம்புகின்றன.

ஒரு தேசத்தை ஆக்கிரமிப்பவர்கள் ஏன் வீடுகளை அழிக்கிறார்கள் தெரியுமா? அவர்களின் ஆக்கிரமிப்பு எண்ணத்தை முழுமைப்படுத்தவே. அதாவது தாம் ஆக்கிரமித்த மண்ணில் நிலைபெற்றிருந்த அடையாளங்களை அழிகக்கவும் அங்கு தமது அடையாளங்களை நிலை நிறுத்தும் புதிய ஆக்கிரமிப்பு அடையாளங்களை திணிக்கவுமே. இதற்காகவே சிங்கள இராணுவத்தினர் தமிழ் ஈழ மண்ணை கைப்பற்றியவுடன் வீடுகளை அழிக்கின்றனர்.

தமிழ் ஈழத்தில் நடந்த போரில் எண்ணற்ற வீடுகளை சிங்களப் படைகள் சிதைத்துள்ளன. ஒரு பிரதேசத்தை ஆக்கிரமித்த பின்னர் அப் பகுதியில் உள்ள வீடுகளை அழிப்பதை தனியொரு இராணுவ நடவடிக்கையாகச் செய்துள்ளனர். 2009 முள்ளிவாய்க்கால் யுத்தத்தின்போது கிளிநொச்சிப் பகுதியில் பெருமளவில் சண்டைகள் நடைபெறவில்லை. ஆனால் அனைத்து வீடுகளும் புல்டோசர் போட்டு அழிக்கப்பட்டிருந்தன. சண்டை நடக்காத பகுதியில் எவ்வாறு வீடுகள் அழிக்கப்பட்டன? ஏன் அழிக்கப்பட்டன.

ஈழத் தமிழர்களின் பண்பாட்டில், பாரம்பரியத்தில் யாழ்ப்பாணம் முக்கியத்துவம் மிக்க பிரதேசம். ஆனால் அங்குள்ள வீடுகள் தமிழர்களின் அடையாளமல்ல என்று அண்மையில் யாழ்ப்பபாணப் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் கூறினார். அவை டச்சுக்காரர்களின் வீடுகள் என்றும் அவை தமிழர்களின் வீடுகள் என சிலர் புரிந்துகொண்டிருப்பது தவறும் என்றும் சொன்னார். அத்துடன் வன்னியிலும் கிழக்கிலும் உள்ள வீடுகளே தமிழ் மக்களின் அடையாளத்தைக் கொண்டிருக்கும் பாரம்பரிய வீடுகள் என்றும் சொன்னார்.

யாழ்ப்பாணத்தில் ஆட்சி புரிந்த அந்நியர்கள் தமது அடையாளத்தை பரப்பி நிலைபெற்ச் செய்யும் விதமாக அந்த வீடுகளை அறிமுகப்படுத்தினர். இப்படித்தான் சில இனங்கள் அந்நியர்கள் திணித்த அடையாளங்களை தமது அடையாளங்களாக கருதுகின்றனர். காலப் போக்கத்தில் தாக்கத்திற்கு உள்ளான அந்த இனத்தின் தனித்துவ அடையாளம் இப்படித்தான் இல்லாமல் செய்யப்படுகின்றது. இவ்வாறான ஒரு சூழ்நிலையிலேயே பொருத்து வீடுகள் தொடர்பான சிக்கலை நாம் அணுகவேண்டும்.

முதலில் வீடற்றவர்களுக்கு பொருத்துவீடுகள் சொர்க்கமாக இருக்கும் என்ற கருத்தை ஸ்ரீலங்கா அரசு தரப்பு சொல்லி வருகிறது. தமிழ் ஈழ மக்களை வீடற்றவர்களாக்கிவிட்டு அவர்களிடம் எந்த வீடுகளை வேண்டுமானாலும் கொடுப்பதா? அவர்களின் வீடற்ற துயர நிலையைப் பயன்படுத்தி தமது வீடுகளைத் திணிப்பதா? அந்த மக்கள் இழந்த அவர்களின் வீடுகளைப் பெற்றுக்கொடுப்பதுதானே உரிய செயல்.

பொருத்துவீடு மிகவும் விலை உயர்ந்த வீடு என்றும் இதனை மக்கள் பெறுவது அவர்களுக்கே நன்மை என்றும் ஸ்ரீலங்கா அரச தரப்பு சொல்கிறது. ஆனால் பொருத்துவீடுகள் நமது நிலத்தின் காலநிலைக்கு பொருத்தமற்றது அதனால் உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படலாம் என்று எச்சரிக்கப்படுகிறது. உஷ்ணமான பிரதேசங்களுக்கு இரும்புகளாலான பொருத்துவீடுகள் பொருத்தமற்றவை என்றும் குளிர் பகுதிகளிலும் தற்காலிகமாக வசிக்கவே உகந்தவை என்றும் கூறப்படுகிறது.

அதுமாத்திரமின்றி பெரும் பணச் செலவில் ஸ்ரீலங்கா அரசு இந்த வீடுகளை தமிழ் பகுதியில் அமைப்பதற்கு என்ன காரணம்? இந்த வீடுகள் வடகிழக்கில் அமைத்து பரீட்சிக்கப்படுவதாகவும் இதற்காக அரசுக்கு பெரும் பணத்தை குறித்த வீடுகளை உருவாக்கிய கம்பனிகள் வழங்கியிருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் கசிந்துள்ளன. ஆனால் அப்படி ஏதுவும் இல்லை என்றும் தமிழ் மக்கள்மீது கொண்ட அன்பினால் இதை வழங்குவதாகவும் ஸ்ரீலங்கா அரசு சொல்கிறது.

உலகில் போர், இயற்கை அனர்த்தங்களினால் அழிவுகளை சந்தித் மக்களின் பகுதியில் அவர்களின் கையறு நிலையைப் பயன்படுத்தி, அவர்களின் அழிந்த பிரதேச நிலையைப் பயன்படுத்தி சில நாடுகளின் உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திகளை கொடுத்து பரிசோதிப்பதுண்டு. இதற்காக அவர்கள் தமது உற்பத்திகளை இலவசமாக வழங்குவார்கள். அது எப்படி வெற்றியளிக்கிறது என்பதை வைத்து அடுத்தகட்ட வியாபாரத்தை முன்னெடுப்பார்கள்.

தமிழ் ஈழத்திலும் அப்படி ஒரு முயற்சி நடக்கிறதா? பொருத்துவீடுகள் அப்படியான முதலீடா எ்னற சந்தேகம் அனைவரிடத்திலும் உண்டு. எவ்வாறெனினும் பொருத்துவீடுகள் எட்டு வருட ஆயுளைக் கொண்டது என்கிறார்கள். அப்படி எனில் எட்டு வருடத்தின் பின்னர் அந்தக் குடும்பம் நடுத்தெருவுக்கு வருவதா? அத்துடன் தன் பாகங்கள் பழுதடைந்தால் அவற்றை எப்படி மாற்றுவது? அதனை எப்படிப் பெறுவது? அதனை யார் பொருத்துவது? இதற்கு அக் குடும்பத்திடம் வசதி இருக்குமா?

2.1 ஒரு மில்லியன் ரூபாவில் பொருத்துவீடுகளை அமைக்கும் பணத்தில் எத்தனை ஓட்டு வீடுகளைக் கட்டலாம். ஓட்டு வீடுகளில் நாற்பது ஐம்பது வருடத்திற்கு வாழலாம். அப்படி இருக்க ஏன் இந்தப் பொருத்துவீடுகளை அமைக்கிறார்கள்? இலவசம் என்பதற்காக எதையும் வாங்குவதா? ஒரு கூரை வீட்டில் வாழ்வதில், ஒரு ஓட்டு வீட்டில் வாழ்வதில் எவ்வளவு ஆரோக்கியம் இருக்கிறது? உலகில் வெப்பமயமாதல் அதிகரித்துச் செல்லும் இக் காலத்தில், அனைவரும் இயற்கை வீடுகளை நோக்கி நகரும் காலத்தில் இதுபோன்ற இரும்புப் – பொருத்துவீடுகள் மனிதர்களுக்கு உகந்தவையா?

முக்கியமாக தமிழ் ஈழத்திற்கு பொருத்தமானவையா? பண்பாட்டு ரீதியாக மாத்திரமின்றி, சூழலியல் ரீதியாகவும் சுகாதார ரீதியாகவும் சிந்திக்கவும் ஆராயவும் வேண்டிய விடயம் இதுவாகும்.

SHARE