சிங்களவரும் முஸ்லிங்களும் கைகோத்து திறந்துவைக்கப்பட்ட வவுனியா பஸ்தரிப்பு நிலையம் கூட்டமைப்பு தலமைகள் புறக்கணிப்பு

298

 

இணைந்தநேர அட்டவணை அமுல்படுத்தப்படல் வேண்டும் மத்திய, மாகாண அமைச்சர்கள் வலியுறுத்தல்.

195 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்டுள்ள வவுனியா பொது பேருந்து நிலையம் இன்று 16.01.2017 திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் மத்திய போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா அவர்களினால் மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது.


குறித்த நிகழ்வில் மத்திய போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா, மத்திய வர்த்தகம் மற்றும் கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியுதீன், மத்திய போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக் அபயசிங்க, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சிவமோகன் மற்றும் காதர் மஸ்தான், வடமாகாண ஆளுநர் ரெஜிநோல்ட் குரே, வடமாகாண போக்குவரத்து, வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் க.வ.கமலேஷ்வரன், வடமாகாண சபை உறுப்பினர்களான ஜீ.ரி.லிங்கநாதன் மற்றும் தர்மபால செனவிரத்தின,  வடமாகாண போக்குவரத்து, வர்த்தக வாணிப அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர், வடமாகாண போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர், வடஇலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களின் சம்மேளன தலைவர், ஐந்து மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

அதன்போது பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டதுடன் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகள் உத்தியோகபூர்வமாக அவ்விடத்திலிருந்து சேவையினை ஆரம்பித்தன.

அங்கு உரையாற்றிய வடமாகாண போக்குவரத்து அமைச்சர் விபத்துக்களை குறைப்பதற்கு இணைந்தநேர அட்டவணை அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும் அதற்க்கு ஒரே இடத்தில் இருந்து பயணிப்பதே சிறந்த முறைஎனவும் தெரிவித்ததோடு பேருந்து நிலைய திட்டத்தினை அமுல்படுத்திய அமைச்சருக்கு நன்றிதெரிவித்தார். மேலும் மத்திய போக்குவரத்து அமைச்சர் இணைந்தநேர அட்டவணையினை அமுல்படுத்த ஆதரவு வழங்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

அக்கோரிக்கைக்கு தனது உரையில் மத்திய போக்குவரத்து அமைச்சர் வடமாகாணத்தினுள் போக்குவரத்து சம்பந்தமான அனைத்து அதிகாரங்களும் வடக்கு போக்குவரத்து அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தான் பூரண ஆதரவு வழங்குவதாகவும் இணைந்த நேர அட்டவணை கட்டாயமாக அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியதோடு எவ்வித உதவியாக இருந்தாலும் தான் வடமாகாண போக்குவரத்து அமைச்சருக்கு செய்வதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

SHARE