ரயிலில் குழந்தையை விட்டுவிட்டு சிகரெட் பிடிக்க சென்ற தாய்: நிகழ்ந்த விபரீதம்

265

பிரான்ஸ் நாட்டில் அதிவேக ரயில் ஒன்றில் குழந்தையை விட்டுவிட்டு தாயார் சிகரெட் பிடிக்க சென்றபோது நிகழ்ந்த விபரீதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு பிரான்ஸில் உள்ள Angers நகருக்கு TGV என்ற அதிவேக ரயில் கடந்த திங்கள் கிழமை இரவு புறப்பட்டுள்ளது.

இந்த ரயிலில் 18 வயதான தாயார் தனது 7 மாத ஆண் குழந்தையுடன் பயணம் செய்துள்ளார்.

சில மணி நேரத்திற்கு பிறகு ரயில் Le Mans என்ற நகரில் நின்றுள்ளது. இதனை கவனித்த தாயார் ‘வெளியே சென்று சிகரெட் பிடிக்கலாம்’ என எண்ணியவாறு குழந்தையை விட்டுவிட்டு கீழே இறங்கியுள்ளார்.

நடைமேடையில் சிகரெட்டை பற்ற வைத்த அதே வினாடியில் ரயிலின் கதவு மூடப்பட்டு உடனடியாக புறப்பட்டுள்ளது.

ரயில் புறப்படுவதை கண்டு அதிர்ச்சி அடைந்த தாயார் ரயிலின் பின்னால் சிறிது தூரம் அலறியவாறு ஓடியுள்ளார். ஆனால், ரயில் நிற்கவில்லை.

இந்நிலையில், ரயிலில் டிக்கெட்டுகளை பரிசோதனை செய்யும் அதிகாரி பெட்டி ஒன்றில் குழந்தை தனியாக இருப்பதைக் கண்டு பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

பின்னர், உடனடியாக தாயாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் அவர் மற்றொரு ரயிலில் அடுத்த ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு, குழந்தையை வைத்திருந்த பொலிசார் தாயாரை நன்றாக விசாரணை செய்துவிட்டு குழந்தையை ஒப்படைத்துள்ளனர்.

மேலும், வெளியூர்களுக்கு பயணம் செய்யும்போது குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்துமாறு தாயாரை பொலிசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

SHARE