காணாமல்போனவர்கள் தொடர்பில் எந்தவொரு தகவலையும் இலங்கையில் தேட முடியாது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர் என்று பிரதமர் ரணில்

292

 

காணாமல்போனவர்கள் தொடர்பில்  எந்தவொரு தகவலையும் இலங்கையில் தேட முடியாது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
காணாமல்போனவர்கள் தொடர்பில் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூதெரிவித்தவை வருமாறு:-
“காணாமல்போனவர்களின் உறவினர்கள் முன்னெடுத்துவரும் நடவடிக்கை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நேற்று (நேற்றுமுன்தினம்) எம்முடன் பேச்சு நடத்தினார்.
இந்த விடயம் தொடர்பாக தெரிந்த தகவல்களை வழங்குவதாக பொலிஸ்மா அதிபர் கூறியுள்ளார். அமைச்சர் சுவாமிநாதனும் நாளை (இன்று) வவுனியா செல்கிறார் எனக் கூறப்படுகின்றது.
காணாமல்போனவர்கள் தொடர்பில் எந்தவொரு தகவல்களையும் இங்கு தேடிக்கொள்ள முடியாமல் இருக்கின்றது எனப் பொலிஸார் அறிவித்துள்ளனர். இருப்பவர்கள் பற்றிய தகவல்களைத் தருவதாகக் கூறினர். ஏனையவர்கள் தொடர்பில் இலங்கையில் எந்தவொரு தகவலும் இல்லை.
அவர்கள் வெளிநாடு சென்றுள்ளார்களா என்பதற்குரிய எந்தவொரு ஆதாரமும் சட்டரீதியாக  கிடையாது. சட்டவிரோதமாகவும் அல்லது வேறு வழியாகவும் இவர்கள் சென்றார்களா என்று  தெரியவில்லை. எனினும், முடிந்தவரையான தகவல்களை வழங்குவதற்கு  நடவடிக்கை  எடுக்கப்படும் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
அதேவேளை, சிலர் உயிருடன் இல்லை என்றே நான் நினைக்கின்றேன். எனவே, சாட்சியம் எதுவும் இல்லாதவர்களுக்கு வழங்க  வேண்டிய நட்டஈடு, அது  குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பில் ஆராயவேண்டும். இது தொடர்பில் கொள்கை ரீதியான  முடிவொன்றை எடுக்க வேண்டியுள்ளது.
இவர்கள் (காணாமல்போனவர்கள்) இலங்கையில் இல்லாத அதேநேரம், சட்ட ரீதியான வழியில் நாட்டை விட்டுச் சென்றிருக்கவில்லை என்று எம்மால் கூற முடியும். அதைத்தான் பொலிஸாரும் கூறுகின்றனர். காணாமல்போனவர்கள் தொடர்பில் எந்தவொரு  தகவலையும் இலங்கையில் தேட முடியாது எனப் பொலிஸார் தெரிவித்தனர்”
SHARE