வடக்கு சபையில் நிறைவேற்றப்பட்ட 337 பிரேரணைகளுக்கும் இதுவரை நடந்தது என்ன?

269

 

வடக்கு மாகாண சபையினால் இதுவரை நிறைவேற்றப்பட்ட 337 பிரேரணைகளுக்கும் என்ன நடை பெற்றது என்பது தொடர்பான மீளாய்வு செய்யப்படல் வேண்டும் என வலியுறுத்தியுள்ள வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன், பிரேரணைகளை நிறைவேற்றி விட்டு அவற்றை நடை முறைப்படுத்தாமல் இருப்பது என்பது சபையை அவமதிக்கும் செயலாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதே போன்று ஏனைய சில உறுப்பினர்களும் இது தொடர்பில் வலியுறுத்தி கூறியுள்ளனர்.
வடக்கு மாகாண சபையின் இந்த வருடத்திற்கான இறுதி அமர்வு நேற்றைய தினம் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இதன்போது விவசாய அமைச்சருடைய பிரேரணை தொட ர்பில் கருத்து தெரிவிக்கும் போதே உறுப்பினர் அனந்தி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாண சபையின் கடந்த மூன்று ஆண்டு காலத்தில் 337 பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவ்வாறு நிறை வேற்றப்பட்ட பிரேரணைகளில் எத்தனை பிரேரணை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது? எத்தனை நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது என்பது தொடர்பில் யாருக்கும் தெரியாது.
எனவே இந்த அனைத்து பிரேரணைகளும் மீளாய்வு செய்யப்பட வேண்டும்  என வலியுறுத்தி இருந்தார். இதன் பின்னர் கருத்து தெரிவித்த உறுப்பினர் சர்வேஸ்வரன், கடந்த ஆண்டுகளில் நாம் கொண்டுவந்த தீர் மானங்கள் பெருமளவு நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளன. அவற்றை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கு உறுப்பினர்களை கொண்ட ஒரு விசேட குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும். தனியே பிரேரணைகளை நிறைவேற்றிவிட்டு போவதாக இருக்கக் கூடாது.
அது இந்த உயரிய சபையை அவமதிக்கும் செயலாகும் எனவும் கூறினார். எம்மால் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளுக்கு என்ன நடைபெற்றது? எந்த நிலையில் தற்போது உள்ளது? என்பது தொடர்பில் அவைத் தலைவர் தெளிவுபடுத்த வேண்டும். என உறுப்பினர் சிவயோகமும் கூறியிருந்தனர். எனினும் இதற்கு அவைத்தலைவர் நேற்றைய தினம் எந்த பதிலையும் உடனடியாக வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
SHARE