ஈழப்போராட்டத்தை சிதைத்த இந்திய அரசும் தலைவர் பிரபாகரனின் பதிலடியம் -இரணியன்

367

 

1987ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் திகதி. விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியா தனது இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்த தினம். ஒரு மோசமான வரலாற்றை இரத்தத்தால் எழுதுவதற்கு பாரத தேசம் தேர்ந்தெடுத்த தினம் அது.

இந்தியா தனது வரலாற்றில் எடுத்த மிகவும் மோசமான ஒரு முடிவு என்று பின்நாட்களில் அரசியல் ஆய்வாளர்களினாலும், போரியல் வல்லுனர்களினாலும் குறிப்பிடப்பட்ட அந்த இராணுவ நடவடிக்கையை இந்தியா ஆரம்பித்த தினம்.

அன்று ஆரம்பிக்கப்பட்ட அந்த இராணுவ நடவடிக்கை சுமார் 22 வருடங்களையும் கடந்து முள்ளிவாய்க்கால் வரை தொடரப் போகின்றது என்று இந்தியாவின் தலைவர்களோ அல்லது விடுதலைப் புலிகளின் தலைவர்களோ கனவு கூடக் கண்டிருக்கமாட்டார்கள்.

அன்று காலை யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்தியப்படை முகாம்களில் இருந்து இடைக்கிடை துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டபடி இருந்தன.

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்த்திகள் வானில் பறந்தபடி யாழ்குடாவை நோட்டமிட்டு அலைந்தன.

அதைவிட, தாளப்பறந்து பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்தியப் படைகளின் மிராஜ் 2000 சண்டை விமானங்களின் இரைச்சல்கள் யாழ் மக்களுக்கு மிகுந்த அச்சமூட்டுவதாக இருந்தது.

வீதிகள் மனித ஆரவாரங்கள் எதுவும் இல்லாது வெறிச்சோடிக் காணப்பட்டன. ஆங்காங்கே விடுதலைப் புலிகளின் வாகன நடமாட்டங்களையும், துவிச்சக்கரவண்டிகளில் நடமாடிய ஒரு சில விடுதலைப் புலிகளையும் தவிர, வீதிகள் அனைத்தும் ஆள் அரவமற்றே காணப்பட்டன.

யாழ்ப்பாண மக்கள் மறுபடியும் ஒரு யுத்த சூழலை உணர்ந்தார்கள். கடந்த சில நாட்களாக வடக்கு கிழக்கில் இடம்பெற்று வந்த நிகழ்வுகள், நிலைமையை அவர்களுக்கு தெளிவாகவே உணர்த்தியிருந்தன.

ஒவ்வொரு வீடுகளிலும் ஏற்கனவே அமைக்கப்பட்டு சில மாதங்களாக பாவிக்கப்படாமல் இருந்த பதுங்கு குழிகளை மறுபடியும் தூசு தட்டி, செப்பனிட்டு, உணவுப் பொருட்களைச் சேமித்துவைக்கும் நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்ள ஆரம்பித்திருந்தார்கள். யுத்த சூழ்நிலைக்குள் பல வருடங்களாக வாழ்க்கை நடாத்திப் பழக்கப்பட்டுவிட்ட அந்த மக்களுக்கு, நிலைமையை எதிர்கொள்ளும் பக்குவம் இயல்பாகவே ஏற்பட்டிருந்தது.

தலைவரின் தலைக்கு விலை:

முன்னைய நாள் (9ம் திகதி) இரவு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மாலைச் செய்தியறிக்கை நிலைமையின் தீவிரத்தை யாழ்ப்பாண மக்களுக்கு நன்றாகவே விளக்கியிருந்தது.
புலிகளுக்கு எதிராக இந்தியப்படைகள் போர் பிரகடனம் செய்திருக்கும் விடயம் செய்தியறிக்கையில் வெளியிடப்பட்டிருந்தது.

புலிகளை நிராயுதபாணிகளாக்கும் நோக்கத்துடன் இந்திய அமைதிகாக்கும் படையினர் களமிறக்கப்பட்டிருப்பதாக லங்காப் புவத்தை மேற்கோள் காண்பித்து அந்தச் செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதைவிட அதிர்ச்சிகரமான மற்றொரு விடயமும் அந்தச் செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடைய தலைக்கு ஒரு மில்லியன் ரூபாய் விலை அறிவிக்கப்பட்டிருந்தது.

புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை உயிருடனோ, அல்லது பிணமாகவோ பிடிக்கும் ஒருவருக்கு ஒரு மில்லியன் ரூபாய் பணம் பரிசாக வழங்கப்படும் என்று ஜே.ஆர். அறிவித்திருந்தார்.
நிலைமையின் தீவிரத்தை இந்த அறிவிப்பு யாழ்மக்களுக்கு தெள்ளெனப் புரிய வைத்திருந்தது.

தலைவரைக் குறிவைத்து நகர்வு:

அத்தோடு, 9ம் திகதி இரவு இந்தியப் படைகளின் சீக்கிய அதிரடிப்படைப் பிரிவினர் மேற்கொண்ட ஒரு நடவடிக்கை பற்றிய செய்தியும் மக்கள் மத்தியில் வேகமாகப் பரவியிருந்தது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களைப் பிடிப்பதற்கான அதிரடி நடவடிக்கை ஒன்றை 9ம் திகதி இரவு இந்தியப் படையினர் இரகசியமாக மேற்கொண்டிருந்ததாக அந்த செய்தி மக்கள் மத்தியில் பரவி, அதிக கலவரத்தை தோற்றுவித்திருந்தது.

யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து சுமார் அரை மைல் தொலைவில் உள்ள பிரம்படி வீதியில் அமைந்திருந்த புலிகளின் முகாமிலேயே, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அவர்கள் தங்கியிருந்ததாகப் பேசப்பட்டது. 9ம் திகதி இரவு 9 மணியளவில் சுமார் 25 சீக்கிய அதிரடிப்படையினர் இந்தப் பிரம்படி முகாமைக் குறிவைத்து நகர்வொன்றை மேற்கொண்டிருந்தார்கள்.

பிரபாகரன் அவர்கள் தங்கியிருந்ததாகக் கூறப்படும் பிரம்படி வீதிக்கு சுமார் அரை கி.மீ. தொலைவில் உள்ள பிரவுண் வீதியில் வசித்துவந்த ஒருவரின் வீட்டுக்கதவு நள்ளிரவில் தட்டப்பட்டது. அவர் கதவைத் திறக்க வந்தபோது, வாசலில் உள்ள விளக்கை அணைத்துவிட்டு வெளியில் வருமாறு உத்தரவிடப்பட்டது. அவ் உத்தரவுக்கமைய செய்துவிட்டு வெளியில் வந்தவருக்கு பலத்த அதிர்ச்சி ஏற்பட்டது. அவரது வீட்டைச் சூழ இராணுவ சீருடையில் ஆயுதம் தரித்த சுமார் 25 சீக்கியப் படை வீரர்கள் காணப்பட்டார்கள். அவர்கள் அனைவரினதும் முகங்களிலும் பதட்டம் காணப்பட்டது.

யாழ் கோட்டைக்கு எப்படிச் செல்லவேண்டும் என்று அவர்கள் கேட்டார்கள். அந்த நபர் வழியைக் காண்பித்ததும், மதில்களைத் தாண்டிக் குதித்தபடி அவர்கள் அந்த திசையை நோக்கி புறப்பட்டார்கள். சிறிது நேரத்தில் காணாமல் போனார்கள்.

புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் தங்கியிருந்த பிரம்படி வீதி முகாம் மீது அதிரடித் தாக்குதல் ஒன்றை மேற்கொண்டு, தலைவரைக் கைது செய்தும் திட்டத்துடன் அவர்கள் முயற்சி ஒன்றை மேற்கொண்டதாகவும், ஏதோ காரணத்தினால் அது கைகூடவில்லை என்றும் மக்கள் மத்தியில் மறு நாள் செய்தி பரவியிருந்தது.

நாங்கள் சாகத் துணிந்து விட்டோம்

விடுதலைப் புலிகள் மீதான யுத்தத்தை இந்தியா திணிப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பாக, புலிகளுக்கு எதிரான இந்தியாவின் இராணுவ நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்கான இறுதி முயற்சி ஒன்று சில இந்திய இராணுவ அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டன.

இலங்கையில்; நிலைகொண்டிருந்த இந்தியப் படைகளின் கட்டளையிடும் அதிகாரி லெப்.ஜெனரல் திபீந்தர் சிங்கும், இந்தியப் படைகளின் 54வது படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரியான மேஜர்.ஜெனரல் ஹரிக்கிரத் சிங்கும், புலிகளின் தலைவரைச் சந்திக்கச் சென்றிருந்தார்கள்.

அவர்கள் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டரில் யாழ் பல்கலைக்கழக மைதானத்தில் வந்திறங்கினார்கள்.

விடுதலைப் புலிகள் தங்களிடமுள்ள ஆயுதங்களை இந்தியப் படையினரிடம் ஒப்படைக்கவேண்டும் என்ற வேண்டுகோளை விடுப்பதே அந்த அதிகாரிகளின் நோக்கமாக இருந்தது.

இந்தியப் படையினரின் இராணுவ பலம் பற்றி விபரித்து, பலவந்தமாக புலிகளிடம் இருந்து ஆயுதங்களைக் களைவதற்கு தாம் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் விடயத்தை விளக்கி, இந்தியப் படையினரிடம் புலிகளை ஆயுதங்களை ஒப்படைக்கும்படி வற்புறுத்துவதே அவர்களின் திட்டமாக இருந்தது.

புலிகள் தமது ஆயுதங்களை ஒப்படைக்கத் தவறும் பட்சத்தில் இந்தியப் படையினருடன் அவர்கள் மோத வேண்டி ஏற்படும் என்பதுடன், அதன் காரணமாக புலிகள் அமைப்பு முற்றாகவே அழிக்கப்பட்டு விடவும் சந்தர்ப்பங்கள் உள்ளன என்பதையும் அவர்கள் புலிகளின் தலைவரிடம் தெளிவுபடுத்த விரும்பினார்கள்.

யாழ் பல்கலைக்கழக மைதானத்தில் இந்தியப் படை அதிகாரிகள் பயணம் செய்த ஹெலிகாப்டர் வந்திறங்கியது. அதில் இருந்து இறங்கிய இந்தியப்படை அதிகாரிகளால் அங்கு காணப்பட்ட சில மாற்றங்களை அவதானிக்க முடிந்தது.

மைதானம் முழுவது ஆயுதம் தாங்கிய விடுதலைப் புலிகள் காவல் கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த விடுதலைப் புலி உறுப்பினர்களின் முகங்கள் இறுக்கமடைந்து, கடுமையாக காணப்பட்டதை அந்த இந்திய அதிகாரிகள் அவதானித்தார்கள்.

ஹரிக்கிரத் சிங், திபீந்தர் சிங் போன்ற இந்தியப்படை அதிகாரிகள் கடந்த இரண்டு மாதங்களாக விடுதலைப் புலிகளுடன் அன்னியோன்யமாகப் பழகியவர்கள். விடுதலைப் புலிகளின் திருமணச் சடங்குகள் உட்பட பல குடும்ப நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு புலிகளுடன் நெருக்கமான நட்பைப் பேணிவந்தவர்கள்.

அந்த அதிகாரிகளை புலிகளின் பிரதித்தலைவர் மாத்தையா ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்று, முல்லைத்தீவிலுள்ள தமது தளங்களையும், காடுகளையும் சுற்றிக்காண்பிக்கும் அளவிற்கு புலிகளுடன் அன்னியோன்யமாகப் பழக்கத்தையும், நெருக்கத்தையும் கொண்டிருந்தவர்கள்.

புலி உறுப்பினர்களும் அந்த இந்தியப்படை அதிகாரிகளை மிகவும் மதித்ததுடன், அவர்களைக் காணும் சந்தர்ப்பங்களில் கைகளை அசைத்து தமது அன்பைப் பரிமாறும் வழக்கத்தை கொண்டிருந்தார்கள்.

ஆனால் அன்றைய தினம் அந்த இந்திய அதிகாரிகள் பல்கலைக்கழக மைதானத்தில் வந்திறங்கியபோது, புலி உறுப்பினர்கள் எவருமே முன்னர் போன்று இந்திய அதிகாரிகளுடனான தமது நட்பை வெளிக்காண்பிக்க முன்வரவில்லை.

காவல் கடமைகளில் ஈடுபட்டிருந்த புலி வீரர்களின் முகங்கள் மிகவும் இறுக்கமாக காணப்பட்டன. நிலைத்த பார்வைகளுடன், ஆயுதங்களை ஊறுதியாகக் கரம்பற்றி தமது காவல் கடமைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள்.

சிறிய புன்முறுவல் கூடச் செய்யாத அந்த இளைஞர்களைப் பார்த்ததும் இந்தியப்படை அதிகாரிகளுக்கு மிகுந்த ஆச்சரியமாகப் போய்விட்டது.

புலிகளுடனான தமது நட்பைப் பயன்படுத்தியும், சிறிது பயமுறுத்தல்களைப் பிரயோகித்தும் புலிகளைப் பணிய வைத்துவிடலாம் என்ற எண்ணத்துடன் அங்கு சென்றிருந்த இந்தியப்படை அதிகாரிகள் இருவருக்கும், புலிகளின் முகங்களில் ஏற்பட்டிருந்த அந்தப் புதிய மாற்றம், தாம் நினைத்து வந்தது போன்று நிலமை அவ்வளவு இலகுவாக இருக்கப் போவதில்லை என்று தெளிவாகப் புரிந்தது.

விடுதலைப் புலிகள் சூழ்நிலைகளுக்கேற்ப தமது உணர்வுகளையும், தங்களையும் மாற்றி விடும் பக்குவத்தைப்; பெற்றிருந்தது மறுபடியும் அன்று அவர்களுக்குப் புரிந்தது.

புலிகளின் தலைவர் பிரபாகரைச் சந்திப்பதற்கென்றே அந்த அதிகாரிகள் அங்கு வருகைதந்தார்கள். பல்கலைக்கழக மைதானத்தில் வந்திறங்கிய இந்தியப்படை அதிகாரிகளை புலிகளின் உள்ளூர் தலைவர் ஒருவர் புலிகளின் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார்.

அங்கு அவர்களைச் சந்தித்த புலிகளின் பிரதித்தலைவர் மாத்தையா, தலைவர் பிரபாகரன் அங்கு இல்லை என்பதைத் தெரிவித்து, இந்திய அதிகாரிகள் தலைவரைத் தேடி வந்ததன் காரணத்தை விசாரித்தார்.

இந்தியப் படை அதிகாரிகள் தாம் அங்கு வந்த நோக்கத்தை விளக்கினார்கள். புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்கத் தவறும் பட்சத்தில் இந்தியப்படைகள் அவற்றைப் பலவந்தமாகக் களைய நேரிடும் என்பதையும், அவ்வாறு ஒரு சந்தர்ப்பம் ஏற்படும் பட்சத்தில் புலிகள் அதிக இழப்புக்களைச் சந்திக்க வேண்டி ஏற்படும் என்றும் தெரிவித்தார்கள்.

புலிகள் அமைப்பின் அரசியல் எதிர்காலம் இதனால் பாதிக்கப்பட்டுவிடும் என்று விளக்கிய அதிகாரிகள், இந்த முறுகல் நிலையைத் தவிர்த்து புலிகள் அரசியல் ரீதியாக எவ்வாறு நகர்வுகளை மேற்கொண்டு வெற்றிபெறலாம் என்றும் ஆலோசனைகள் வழங்கினார்கள்.

அனைத்தையும் பொறுமையாகச் செவிமடுத்த மாத்தையா, முகத்தில் எந்தவித உணர்வுகளையும் வெளிப்படுத்தாமல், புலிகளின் நிலைப்பாட்டை இந்தியப்படை அதிகாரிகளிடம் உறுதியாகத் தெரிவித்தார்.

நாங்கள் சாகத் துணிந்து விட்டோம். மரியாதையை இழந்து வாழ்வதைவிட சாவை அணைத்துக் கொள்வது மேல் என்று மாத்தையா தெரிவித்தார்.

தொடர்ந்து பேசுவதற்கு அங்கு எதுவுமே இருக்கவில்லை. இரண்டு தரப்பினரும் கைகுலுக்கி விடைபெற்றார்கள்.

புலிகளின் உணர்வுகளையும், அதில் காணப்பட்ட நியாயப்பாட்டையும் இந்தியப் படை அதிகாரிகளால் நன்றாகவே புரிந்துகொள்ளமுடிந்தது. தமது கொள்கையிலும், தமது மக்களின் விடுதலை தொடர்பாகவும், புலிகள் காண்பித்த உறுதியைக் கண்ட இந்திய அதிகாரிகளுக்கு, புலிகள் அமைப்பு தொடர்பாக பாரிய ஒரு பிரமிப்பு ஏற்பட்டது. அதிக மரியாதையும் ஏற்பட்டது. (பின்நாட்களில் இந்த இரண்டு அதிகாரிகளும் புலிகள் பற்றியும், அவர்களுடனான யுத்தம் பற்றியும் தமது சுயசரிதைகளிலும், செவ்விகளிலும் குறிப்பிடும் போது, தமது இந்த உணர்வுகளை பிரமிப்புடன் வெளிப்படுத்தியிருந்தார்கள்.)

ஆனால் ஒரு இராணுவ அதிகாரி என்ற ரீதியில் இந்திய அரசியல் தலைமை எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்பட்டு நடந்தேயாகவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருந்தது. அதனால், புலிகளுக்கு எதிரான அடுத்த நடவடிக்கைகளை எவ்வாறு ஆரம்பிப்பது என்ற யோசனைகளுடன், மீண்டும் பலாலி விமானத் தளத்தை வந்தடைந்தார்கள்.

கேவலமான நடவடிக்கை:

அக்டோபர் 10ம் நாள், ஊரடங்கு உத்தரவுடனும், முன்னைய நாள் இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்தியப் படையினரின் இரகசிய நடவடிக்கைகள் பற்றிய செய்திகளுடனும் உதயமானது.

அன்று காலை யாழ் கோட்டையில் நிலைகொண்டிருந்த இந்தியப் படைகளின் மராத்திய காலாட்படையின் முதலாவது பட்டாலியன் ( First Battalion of Maharatta Light Infantry )  நகர்வொன்றை மேற்கொள்ள ஆரம்பித்தது.

இந்தியாவின் ஜனநாயக முகமூடியை கிழித்த ஒரு நகர்வென்று இந்தியப் படையின் அந்த நகர்வைக் குறிப்பிடலாம்.

யாழ் குடாவில் இயங்கி வந்த பத்திரிகைக் காரியாலயங்களையும், அச்சகங்களையும் முடக்கிவிடும் நோக்கத்துடன் இந்தியப் படையின் அந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் இயங்கிவந்த ஈழமுரசு, முரசொலி மற்றும் ஈழநாடு போன்ற பத்திரிகைக் காரியாலயங்களைச் சுற்றிவளைத்த இந்தியப் படையினர் அந்த பத்திரிகை அலுவலகங்களை குண்டு வைத்துத் தகர்த்தார்கள்.

உலகின் மிகச் சிறந்த ஜனநாயக் கட்டமைப் கொண்ட நாடு என்று பெருமையாகத் தன்னைக் குறிப்பிட்டுக் கொள்ளும் இந்தியா, 1987ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் திகதி யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட இந்த இழி செயலை, சரித்திரம் என்றுமே மன்னிக்க மாட்டாது.

எந்த ஒரு நாடுமே யுத்த காலங்களில் கூட நடுநிலையான பத்திரிகைகளின் மீது கைவைத்தது கிடையாது. அதுவும் பகிரங்கமாகச் சென்று பத்திரிகைக் காரியாலயங்களை குண்டுவைத்து தகர்ப்பதென்பது, எந்த ஒரு ஜனநாயகவாதியினாலும் ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒரு நடவடிக்கை என்றுதான் கூறவேண்டும்.

பத்திரிகை தர்மம் பற்றியும், ஜனநாயகம் பற்றியும், மனித உரிமைகள் பற்றியும் பேசிக்கொள்ளும் தார்மீக உரிமையை இந்தியா முற்றாகவே இழந்துவிட்ட ஒரு சந்தர்ப்பம் என்று அதனைக் குறிப்பிட முடியும்.

அதனைத் தொடர்ந்து இந்தியப் படையினர் உதயன் பத்திரிகை காரியாலயத்தையும் சுற்றிவளைத்து சீல் வைத்தார்கள்.

பின்னர் கொக்குவில் பிரதேசத்தில் இயங்கிவந்த புலிகளின் நிதர்சனம் தொலைக்காட்சி நிலையத்தையும் கைப்பற்றி நிலை கொண்டார்கள்.

யாழ் நிலவரம் தொடர்பாக நடுநிலையான செய்திகள் வெளிவர வேண்டும் என்பதற்காகவே தாம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டதாக, தமது இந்த நடவடிக்கைகளுக்கு இந்தியா பின்னர் நியாயம் கற்பித்திருந்தது.

ஆனால் உண்மையிலேயே, அடுத்த சில நாட்களில் யாழ் குடாவில் இந்தியப் படைகள் ஆட இருந்த கோர தாண்டவம் பற்றிய உண்மையான செய்திகள் வெளிவராமல் தடுக்கவே இந்தியா இப்படியான கீழத்தரமான செயல்களை மேற்கொண்டிருந்தது.

இதே தினத்தில் சென்னையில் புலிகளின் அலுவலகங்கள் சிலவற்றைச் சுற்றி வழைத்த இந்தியப் பொலிஸார், புலிகளுக்கு சொந்தமான ஆறு தொலைத் தொடர்பு கருவிகளையும் கைப்பற்றி இருந்தார்கள்.

இதே தினத்தில் யாழ்பாணத்தில் இருந்த விடுதலைப் புலிகளின் சில முகாம்களும் இந்தியப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டன. சில விடுதலைப்புலி உறுப்பினர்களும், அப்பாவித் தமிழ் இளைஞர்களும் இந்தியப் படையினரால் கைதுசெய்யப்பட்டார்கள். இதுபற்றி அன்றைய ஆல் இந்திய ரேடியோ மாலைச் செய்தியில் 131 விடுதலைப்புலி உறுப்பினர்கள் இந்தியப் படையினரால் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களிடம் இருந்து 27 ஆயுதங்களையும் இந்தியப் படையினர் கைப்பற்றியுள்ளதாகவும்|| தெரிவிக்கப்பட்டிருந்தது.

ராஜீவ் மேற்கொண்ட யுத்தப் பிரகடனம்:

1987ம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ம் திகதி: விடுதலைப் புலிகளுக்கு எதிரான தனது யுத்தத்தை இந்தியா உத்தியோகபூர்வமாகப் பிரகடனப்படுத்தியது.

இந்தியா தனது வரலாற்றில் எடுத்த மிகவும் மோசமான ஒரு முடிவு என்று பின்நாட்களில் அரசியல் ஆய்வாளர்களினாலும், போரியல் வல்லுனர்களினாலும் குறிப்பிடப்படும் இந்த முடிவை மேற்கொண்டதில் முழுப்பங்கும் அன்றை இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியையே சாரும்.

இந்தியாவின் படைவீரர்களுக்கும், அதன் படைத்துறை அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும், ஏன் இந்தியாவின் ஒவ்வொரு பிரஜைக்கும் கூட வரலாற்றில் பாரிய ஒரு தலை குனிவை ஏற்படுத்தக் கூடிய ஒரு முடிவாக, அன்று ராஜீவ் காந்தி எடுத்த அந்த முடிவு அமைந்திருந்தது.

இந்தியாவை முழுமையாகவே நம்பியிருந்த ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக இந்தியத் தலைவர் செய்திருந்த துரோகத்தின் விழைவு எத்தனை வேதனை நிறைந்ததும், கொடூரமுமானதும் என்பதை, அவர் அப்பொழுது உணர்ந்து கொள்ளவேயில்லை.

 பாகம் 02

தமிழ் நாடு முதலமைச்சருக்கு தலைவர் பிரபாகரன் எழுதிய கடிதம்!

இதை வாசித்த பின்னும் உன் குருதி கொதிக்கவில்லை என்றால் நீ தமிழனே கிடையாது…

இந்தியாவிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் ஆரம்பமானது. அந்த யுத்தத்தை இந்தியாவே ஆரம்பித்தும் வைத்தது. இந்தியா ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான தனது யுத்தத்தை ஆரம்பித்து விட்டது என்று தெரிவித்து, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜீ.ஆருக்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்தார்.

அக்டோபர் 10 இல், புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா ஆரம்பித்திருந்த மறுநாள், அதாவது 1987 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ம் திகதி, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழ் நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் இந்தியா தமிழ் மக்களுக்கு எதிரான தனது யுத்தத்தை எவ்வாறு ஆரம்பித்திருந்தது என்று விபரித்திருந்தார்.

பிரபாகரன் அவர்கள் அந்தக் கடிதத்தில் இந்தியாவின் நகர்வுகள் பற்றி பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:

‘எமது தளபதிகளும் போராளிகளும் அநியாயமாகக் கொலையுண்ட சம்பவத்தின் எதிரொலியாக தமிழீழம் எங்கும் வன்முறைச் சம்பவங்கள் தலைதூக்கின. இன மோதல்கள் வெடித்தன. இந்த வன்முறை முயற்சிகளுக்கு நாம் தான் காரணம் என்றும் நாம் ஒப்பந்தத்தை முறிக்க முயன்றதாகவும் இந்தியா எம்மீது அபாண்டமான பழிகளைச் சுமத்தியது.

இதனைத் தொடர்ந்து கொழும்பில் இந்தியப் பாதுகாப்பு மந்திரி திரு. பந்த், இந்திய தூதுவர் திரு. தீட்சித் இந்திய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சுந்தர்ஜி ஆகியோர் ஒருபுறமும், சிறீலங்கா ஜனாதிபதி ஜெயவர்த்தனா, தேசிய பாதுகாப்பு அமைச்சர் அத்துலத் முதலி மறுபுறமும் விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டும் ஒரு சதித்திட்டத்தை உருவாக்கினர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்வது என்றும், எமது போராளிகளுக்குப் பொது மன்னிப்பு இல்லையென்றும் ஜெயவர்த்தனா அறிவித்தார். விடுதலைப் புலிகளுக்கு எதிராகக் கடும் இராணுவ நடவடிக்கை எடுக்க இந்தியா முடிவு செய்திருப்பதாக திரு. பந்த் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இந்தியச் சமாதானப் படை விடுதலைப் புலிகள் மீது ஒரு விசமத்தனமான தாக்குதலைத் தொடங்கியது.

1987 ஐப்பசி 10ம் நாள் காலை அமைதிப்படையினர் யாழ்ப்பாண நகரிலுள்ள இரு தமிழ் தினசரிப் பத்திரிகை (ஈழமுரசு, முரசொலி) காரியாலயங்களுக்குள் புகுந்தனர். பின்னர் பத்திரிகை அச்சு இயந்திரத்திற்குள் வெடிகுண்டுகளை வைத்து அவற்றைத் தகர்த்தனர். அதன்பின் நண்பகல் விடுதலைப்புலிகளை வேட்டையாடி அழிக்கும் நோக்குடன் கோட்டை இராணுவ முகாமில் இருந்த இந்திய அமைதிப்படையினர் யாழ் நகருக்குள் பிரவேசிக்க முயன்றனர். அவர்களை நாம் தடுக்க முயன்றோம். அவர்கள் எம்மை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். நாம் எமது தற்பாதுகாப்புக்காக திருப்பிச் சுட்டோம்.

போர் மூண்டது.

இந்திய இராணுவம் பீரங்கி, டாங்கி போன்ற கனரக ஆயுதங்கள் சகிதம் குடியிருப்புக்கள் நிறைந்த பகுதிகள் மீது மணிக்கணக்கான தாக்குதல்களை நடத்தினர். தொடர்ந்தும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனால் எமது போராளிகள் மட்டுமன்றி பொதுமக்கள் பலரும் பெருமளவில் மடிந்து கொண்டிருக்கிறார்கள். பொது மக்கள் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை விடுதலைப் புலிகளை அழித்து விடவேண்டும் என்று கங்கணம் கட்டி நிற்கிறது இந்திய இராணுவம்.

நாலாபக்கமும் முற்றுகையிடப்பட்ட நிலையில் நாம் எமது தற்பாதுகாப்பிற்காகப் போராடி வருகிறோம். உயிருடன் கைதாகி அவமானப்பட்டுச் சாவதைவிடப் போராடி இறப்பதே மேலானது என்ற இலட்சியத்துடன் நாம் துப்பாக்கி ஏந்தியுள்ளோம்.

இவ்வாறு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் எம்.ஜி.ஆருக்கு அனுப்பிவைத்த அவசரக் கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

ஈழ தேசம் அதிர்ச்சிக்குள்ளானது.

இதேபோன்று, இந்தியாவிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் யுத்தம் ஆரம்பமானதைத் தொடர்ந்து, சென்னையில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறை ஒரு புத்தகத்தை வெளியிட்டது.

You too India? (இந்தியா.. நீ கூடவா?)  என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அந்தப் புத்தகத்திலும், புலிகளுக்கு எதிரான யுத்தத்தை இந்தியா எப்படி ஆரம்பித்திருந்தது என்பது பற்றி தெரிவிக்கப்பட்டிருந்தது:

விடுதலைப் புலிகளும், தமிழீழ மக்களும் மறைந்த தமது மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கையில், இந்திய அரசோ, தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு பாரிய அழித்தொழிப்பு யுத்தத்தை மேற்கொள்ளுவதற்கு தனது அமைதிகாக்கும் படையை ஏவியிருந்தது. இந்தியப் படையினருக்கு எதிரான யுத்தம்| என்பது பற்றி தமிழீழ விடுதலைப் புலிகளும் தமிழ் மக்களும் தமது கனவில்கூட நினைத்துப் பார்த்திருக்கவில்லை.

ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் இந்தியா அவர்களது உற்ற நன்பன். அவர்களது ஒரே பாதுகாவலன். ஈழ மண்ணில் இந்தியப் படைகளின் பிரசன்னம் என்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அன்பினதும், சமாதானத்தினதும் சின்னமாகவே நோக்கப்பட்டு வந்தது.

அதேவேளை, விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையிலும் இந்தியாவை அவர்களது ஊக்கு சக்தியாகவே அவர்கள் நோக்கி வந்தார்கள். விடுதலைப் புலிகளுக்கான பாதுகாப்பையும், ஆயுத உதவிகளையும் வழங்கக்கூடிய ஒரு நட்பு சக்தியாகவே அவர்கள் இந்தியாவை நோக்கி வந்தார்கள்.

இப்படி இருக்கையில், விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியா யுத்தம் புரிய ஆரம்பித்த போது ஈழ தேசமே அதிர்ச்சிக்குள்ளானது.

இவ்வாறு அந்தப் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

திபிந்தர் சிங் தீட்டிய திட்டம்.

விடுதலைப் புலிகளை அழித்தொழிக்கும் நடவடிக்கைகளின் இறுதி திட்டங்களை இந்தியப் படைகளின் தென் பிராந்தியத் தளபதி லெப்.ஜெனரல் திபீந்தர் சிங் நெறிப்படுத்திக்கொண்டிருந்தார்.

பலாலி விமானப்படைத் தளத்தில், இந்தியப்படை உயரதிகாரிகள் மத்தியில் இந்தியப்படைகளின் நகர்வுகள் எவ்வாறு இருக்கவேண்டும் என்று தமது திட்டங்களுக்கு அவர் இறுதி வடிவம் வழங்கிக்கொண்டிருந்தார்.

கண்களில் ஆர்வம் பொங்கவும், வெற்றி உறுதியாகிவிட்ட மகிழ்ச்சியிலும் இந்தியப்படை அதிகாரிகள் தளபதியின் திட்டங்களைச் செவிமடுத்தபடி நின்றார்கள்.

புலிகளின் தலைவரையும், யாழ்ப்பாணத்தையும் கைப்பற்றுவதற்கு இந்தியப் படையணிகள் தயார் நிலையில் நின்றன.

யாழ் நடவடிக்கைகளுக்கான பொறுப்புக்கள், இந்திய இராணுவத்தின் 54வது டிவிஷன் படையணிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

கள நடவடிக்கைகளுக்காக இந்திய இராணுவத்தின் பின்வரும் படையணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன:

18வது காலாட் படைப்பிரிவு.

41வது காலாட் படைப்பிரிவு.

72வது காலாட் படைப்பிரிவு.

91வது காலாட் படைப்பிரிவு.

115வது காலாட் படைப்பிரிவு.

65வது கவச வாகனப் பிரிவு.

831வது இலகு மோட்டார் படைப்பிரிவு.

25வது படைப்பிரிவு

10வது பரா கொமாண்டோ படைப்பிரிவு

என்பன புலிகளுடனான யுத்தத்திற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

இவற்றிற்கு மேலதிகமாக, 13வது சீக்கிய கொமாண்டோ அணியினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தார்கள். குவிக்கப்பட்டிருந்த இந்திய ஜவான்கள் முன்னிலையில் தமது தாக்குதல் திட்டத்தை விபரித்த திபீந்தர் சிங், இரண்டு நாட்களுக்குள் இந்தியப் படை தமது பிரதான நோக்கத்தை நிறைவு செய்துவிட வேண்டும் என்று தெரிவித்தார்.

அங்கு திரண்டிருந்த இந்தியப்படை வீரர்களும், புலிகளுடனான தமது யுத்தம் இரண்டு நாட்களுக்குள் முடிவடைந்துவிடும் என்று உறுதியாகவே நம்பினார்கள். ஜெய்ஹிந் என்று வெற்றிக் கோஷமிட்டார்கள். அவர்களின் கோஷம் வானை எட்டும்படியாக இருந்தது.

ஆனால், இவ்வாறு வெற்றிக் கோஷம் இட்ட இந்திய ஜவான்களில்; பலர் அடுத்த இரண்டு நாட்களில் அநியாயமாக தமது உயிர்களை இழக்க இருந்தது, பாவம் அவர்களுக்கு அப்பொழுது தெரிந்திருக்கவில்லை.

தமது தளபதி கூறியது போன்று இரண்டு நாட்களில் மட்டுமல்ல இரண்டு வருடங்கள் கடந்தும் புலிகளை வெற்றிகொள்ள முடியாது என்ற உண்மையும் அவர்களுக்கு அப்பொழுது புரிந்திருக்கவில்லை.

அந்த உண்மையை அவர்கள் உணர்ந்துகொண்டபோது காலம் கடந்துவிட்டிருந்தது.

தலைவரைக் கைதுசெய்யும் திட்டம்:

இந்தியப் படை அதிகாரிகளைப் பொறுத்தவரையில், விடுதலைப் புலிகளை வெற்றிகொள்வதற்கென அவர்கள் வகுத்திருந்த திட்டம் யதார்த்தமானது. மிகுந்த புத்திசாலித்தனமானதுடன், நடைமுறைச் சாத்தியம் மிக்கதாகவும் அமைந்திருந்தது. அனைத்து இந்தியப்படை அதிகாரிகளும் இந்த திட்டத்தை இட்டுத் திருப்தி தெரிவித்திருந்தார்கள். விடுதலைப் புலிகளை வெற்றிகொள்ளவென இந்திய இராணுவத் தலைமை வகுத்திருந்த திட்டத்தை ஆராய்ந்த இந்தியப்படை அதிகாரிகளுக்கு, அத்திட்டத்தில் எந்தவித தவறும் இருப்பதாக தெரியவில்லை. எந்தவிதச் சந்தேகமும் இன்றி இந்திய இராணுவ நடவடிக்கை வெற்றி அளிக்கும் என்றே அவர்கள் நம்பினார்கள்.

முதலில் திடீர் அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களைக் கைது செய்துவிடுவது, அல்லது அவரை கொலை செய்துவிடுவதே இந்தியப்படையினரது பிரதான திட்டமாக இருந்தது.

யாழ் பல்கலைக்கழகத்திற்கு அருகில் கொக்குவில் பிரதேசத்தில் பிரம்படி வீதியில் அமைந்திருந்த புலிகளின் தலைவரது இருப்பிடத்தின் மீது திடீர் முற்றுகை ஒன்றை மேற்கொண்டு தலைவரைக் கைப்பற்றி, மற்றைய போராளிகளிடம் இருந்து அவரை அகற்றிவிட்டால், புலிகள் அமைப்பே முற்றாகச் செயலிழந்துவிடும் என்பதை இந்தியப்படை அதிகாரிகள் திடமாக நம்பினார்கள். அத்தோடு, புலிகளின் தலைமைக் காரியாலயத்தின் மீது தாக்குதல் நடத்தி தலைமையகத்தையும், புலிகளின் தலைவரையும் கைப்பற்றிவிடும் பட்சத்தில், மற்றைய போராளிகளின் மனஉறுதி குலைந்து, அவர்களின் போரிடும் ஆற்றல் குன்றிவிடும் என்று கணித்திருந்தார்கள்.

முதலாவது தாக்குதலை வெற்றிகரமாக முடித்துவிட்டால், பின்னர் புலிகள் அமைப்பை மிக இலகுவாக வெற்றிகொண்டுவிடலாம் என்றே அவர்கள் நினைத்தார்கள்.

இந்திய இராணுவத்தில் அதிஉச்ச பயிற்சியைப் பெற்ற பராக் கொமாண்டோக்கள் 103 பேரை, யாழ் பல்கலைக்கழக மைதானத்தில் திடீரென்று தரையிறக்கி, புலிகளின் தலைவர் தங்கியிருந்த பிரம்படி வீட்டை முற்றுகையிட்டு தலைவரைக் கைது செய்வதே இந்தியப்படையினரின் பிரதான திட்டமாக இருந்தது. அதேவேளை, சீக்கிய மெதுரகக் காலாட்படையினர் 100 பேர், பரா துருப்பினர் தரையிறங்கிய பிரதேசத்திற்கு விரைந்து அந்தப் பகுதியைத் தளப்பிரதேசமாக தக்கவைத்திருப்பது அவர்கள் வகுத்திருந்த திட்டத்தின் அடுத்த கட்டமாக இருந்தது.

புலிகளின் தலைவர் தங்கியிருந்ததாகக் கூறப்படும்; கொக்குவில் பிரதேசத்தில் உள்ள பிரம்படி வீதி இல்லத்தை, இந்தியப்படையினர் ஏற்கனவே மோப்பம் பிடித்திருந்தார்கள். இந்தியப்படை உயரதிகாரிகள் அந்த இடத்தில் பல சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தார்கள். அந்த இருப்பிடம் பற்றிய வரைபடத் தகவல்களை மாற்றுக்குழு உறுப்பினர்களிடம் இருந்து பெற்றிருந்தார்கள்.

போதாததற்கு, கடந்த 9ம் திகதி நள்ளிரவு கால்நடையாக ஒரு நகர்வினை மேற்கொண்டிருந்த சீக்கிய காலட்படையினரும், பரா கொமாண்டோப் படைப்பிரிவில் சிலரும், திருநெல்வேலியில் இருந்து செல்லும் பாதை வழியாக நகர்வினை மேற்கொண்டு, பின்னர் பிரம்படி வீதியில் இருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் அமைந்திருந்த இரயில் பாதை வழியாக திரும்பிச் சென்றிருந்தார்கள். பொதுமக்களது வளவுகளுக்குள்ளாகவும் இந்த நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. பிரம்படி வீதியைப் பரிட்சயப்படுத்திக்கொள்ள மேற்கொள்ளப்பட்ட நகர்வென்றே இந்த இரகசிய நகர்வு பற்றிக் கூறப்படுகின்றது. அதேவேளை, சந்தர்ப்பம் கிடைத்தால் புலிகளின் தலைவரை கைப்பற்றிவிடும் நகர்வாகவும் அந்த 9ம் திகதிய நகர்வு அமைந்திருந்தது.

இவ்வாறு பிரம்படி சுற்றாடல் பற்றிய அறிவினைக் கொண்டிருந்த இந்தியப்படை பரா கொமாண்டோக்கள் முன்நகர, தலைவரது இல்லத்தை நெருங்கி நடவடிக்கை மேற்கொள்ளுவதே இந்தியப்படையினரின் பிரதான திட்டமாக இருந்தது.

அடிப்படைத் திட்டங்கள்:

அதேவேளை, இந்தப் பிரதான திட்டத்திற்குச் சமாந்தரமாக, மேலும் ஐந்து அடிப்படைத் திட்டங்களையும் இந்தியப்படை உயரதிகாரிகள் வகுத்திருந்தார்கள்.

1. ஒரே நேரத்தில் தரை, கடல், மற்றும் ஆகாய மார்;க்கமாக தரையிறக்கங்களை மேற்கொண்டு யாழ் குடாவை மிக விரைவாகக் கைப்பற்றிவிடுவது.

2. குறைந்தது ஒரு விநியோக பாதையையாவது திறந்து, யாழ் நகருக்குள் நகர்வினை மேற்கொள்ளும் துருப்பினருக்கு வினியோகங்களை மேற்கொள்ளுவது.

3. பாதுகாப்பான வினியோகப் பாதையை அமைத்துக்கொள்ளும்வரை, யாழ் நகருக்குள் நுழைந்துள்ள படையினருக்கு வான் வழியாக வழங்கல்களை மேற்கொள்ளுவது.

4. நகருக்குள் நுளையும் துருப்பினருக்கு உதவும் முகமாக, அவர்களால் குறிப்பிடப்படும் இடங்களுக்கு, விமானங்களில் இருந்தும், கப்பல்களில் இருந்தும், ஆட்டிலறிகள் மூலமும் சூட்டாதரவை வழங்குவது.

5. யாழ் குடாவிற்கான அனைத்து கடல்வழிப் பாதைகளையும் முற்றுகையிடுவது.

இவையே, யாழ் குடாவைக் கைப்பற்றுவதற்காக இந்தியப்படையினர் வகுத்திருந்த அடிப்படைத் திட்டங்களாக இருந்தன.

ஈழத் தமிழர்களின் கலாச்சாரத் தலைநகர் என்று கூறப்படுகின்ற யாழ்பாணத்தைக் கைப்பற்றி நிலைகொண்டுவிட்டால், மற்றைய பிரதேசங்களை இலகுவாக கைப்பற்றிவிடமுடியும் என்பது இந்தியப்படை அதிகாரிகளினது அசைக்கமுடியாத நம்பிக்கை.

உண்மையிலேயே இது நல்லதொரு திட்டமும் கூட.

இந்தியப் படையினரது ஆட்பலம், ஆயுத மேலான்மை, போர் அணுபவம், கேந்திர அனுகூலம் போன்றனவற்றை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது, இந்தியாவைப் பொறுத்தவரையில் இது சாத்தியமான ஒரு திட்டம் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை.

கவனத்தில் எடுக்கமறந்த விடயம்:

உண்மையிலேயே புலிகளை ஒழிக்கவென வகுக்கப்பட்டிருந்த திட்டம் சிறந்த ஒரு திட்டம் என்றே தற்பொழுதும் போரியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றார்கள். எந்த ஒரு போரியல் வல்லுனராலும், அதைவிடச் சிறந்த ஒரு நகர்வுத் திட்டத்தை வகுத்திருக்கமுடியாது என்றே அவர்கள் தமது ஆய்வுகளின் போது தெரிவிக்கின்றார்கள்.

ஆனாலும், புலிகளை மடக்கவென மிகவும் கவனமாகவும், நுணுக்கத்துடனும் அந்தத் தாக்குதல் திட்டத்தை வகுத்திருந்த இந்தியப்படை உயரதிகாரிகள், அந்தத் திட்டத்தில் ஒரு முக்கிய விடயத்தைக் கவனத்தில் எடுக்காது விட்டிருந்ததுதான் இந்தியப் படையினரின் மிகப் பெரிய தோல்விக்குக் காரணமாக அமைந்திருந்தது.

அதாவது, தமது பலம் பற்றியும், தமது நகர்வுகள் பற்றியும் சிந்தித்து திட்டம் வகுத்திருந்த இந்தியப்படை உயரதிகாரிகள், தாம் இம்முறை மோத இருப்பது விடுதலைப் புலிகளுடன் என்ற விடயத்தை மறந்துவிட்டிருந்ததுதான் அவர்களது திட்டம் படுதோல்வியடையக் காரணமாக இருந்தது.

தமது உயிரைத் துச்சமென மதித்து களமாடும் வழக்கத்தைக் கொண்ட ஒரு அமைப்பை களமுனையில் தாம் சந்திக்கவேண்டி வரும் என்ற உண்மையை இந்தியப்படை அதிகாரிகள் உணர்ந்து கொண்டிருக்கவில்லை. ஒரு நிதர்சனத் தலைவனையும், அவனால் வளர்த்தெடுக்கப்பட்டு, வழிநடத்தப்படும் ஆயிரக்கணக்கான இளைஞர்களையும் தாம் களத்தில் சந்திக்கவேண்டி வரும் என்பதையும் இந்தியப்படை அதிகாரிகள் மறந்துவிட்டிருந்தார்கள். தாம் வகுந்தெடுத்த எதிரிக்குப் பக்கபலமாக, அரசியல்மயப்படுத்தப்பட்ட ஒரு மக்கள் கூட்டமும் களமிறங்கிவிடும் என்ற யதார்த்தத்தையும் இந்தியப்படையினர் உணர்ந்துகொள்ளத் தலைப்படவில்லை.

இவ்வாறு சில அடிப்படைகளைக் கவனத்தில் கொள்ளாது, புலிகளுக்கு எதிராக திட்டங்களை இந்தியப்படையினர் வகுத்திருந்த காரணத்தினாலே, ஈழ மண்ணில்; பல வரலாற்றுத் தோல்விகளையும், அவலங்களையும் அவர்கள் தொடர்ச்சியாகச் சந்திக்கவேண்டி ஏற்பட்டது.

 பாகம் 03

குருவி சுடுவதைப்போல் உலங்கு வானூர்திகளில் இருந்து இறங்கிய அரக்க ஹிந்திய இராணுவத்தை சுட்டு தள்ளிய விடுதலைப்புலிகளின் வரலாறு.

1987ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 12ம் திகதி, நேரம்: அதிகாலை 1 மணி, திட்டமிட்டபடி இந்தியப் படைகள் விடுதலைப் புலிகளின் தலைவரை குறிவைத்து தமது நகர்வினை ஆரம்பித்திருந்தன.

விடுதலைப் புலிகளின் தலைவரைக் குறிவைத்த அந்த அதிரடி இராணுவ நடவடிக்கையில் இந்திய இராணுவத்தின் இரண்டு முக்கிய படை அணிகள் ஈடுபடுத்தப்பட்டன.

1. இந்தியப் படையின் முக்கியமான படை அணியான பராக் கொமாண்டோக்கள் (Para Commandos)

2. 13வது சீக்கிய மெது காலாட் படையணி (13 – Sikh Light Infantry)

நான்கு எம்.ஐ.-8 (MI8) ஹெலிக்காப்டர்கள் பராக் கொமாண்டோக்களையும், விஷேட பயிற்சி பெற்ற சீக்கியக் காலாட்படையினரையும் தரையிறக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டன.

ஸ்ரீலங்கா வான் படையினரின் வழிகாட்டல்களிலேயே இந்த தரையிறக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தலைவர் பிரபாகரன் அவர்கள் தங்கிருந்ததாகக் கூறப்படும் இல்லத்தை முற்றுகையிட்டு அவரைக் கைப்பற்றும் பணி, 100 பராக் கொமாண்டோக்களிடம் (Para Commandos) ஒப்படைக்கப்பட்டிருந்தது.

புலிகளின் தலைவரைக் கைப்பற்றிக் கொண்டு திரும்பும் பராக் கொமாண்டோக்களை ஹெலிக்காப்டர்களில் பத்திரமாக திருப்பி அனுப்பி வைப்பதற்காக யாழ் பல்கலைக்கழக மைதானத்தை கைப்பற்றி, தளமாக்கி, கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பணி 13வது சீக்கிய மெது காலாட் படையினரிடம் (13 – Sikh Light Infantry) ஒப்படைக்கப்பட்டிருந்தது.

திருநெல்வேலி வீதியும், பிறவுன் வீதியும் இணையும் சந்திக்கு அருகே உள்ள கொக்குவில் கிராமசபைக்கு முன்பாக உள்ள வெட்டவெளியில் பராக் கொமாண்டோக்கள் தரையிறக்கப்பட்டார்கள். ஆனால், இந்தியப் படைத்துறை அதிகாரிகள் நினைத்தபடி தரையிறக்கம் அத்தனை இலகுவானதாக இருக்கவில்லை.

இந்தியப் படையினர் சற்றும் எதிர்பார்க்காத அளவிற்கு புலிகள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்த ஆரம்பித்திருந்தார்கள். தரையிறக்கம் இடம்பெற்ற இடத்தினை வெகுவிரைவில் சூழ்ந்து கொண்ட விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள ஆரம்பித்தார்கள். எங்கிருந்து துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்படுகின்றன என்று தெரிந்து கொள்ள முடியாத அளவிற்கு பல முனைகளில் இருந்தும் தரையிறங்கிய ஹெலிகளைக் குறிவைத்து துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டபடியே இருந்தன.

ஐந்து தரையிறக்கங்களை மட்டுமே இந்தியப் படையினரால் அங்கு மேற்கொள்ள முடிந்தது. புலிகளின் எதிர்ப்பு அத்தனை கடுமையானதாக இருந்தது. இந்தியப்படையினரின் மூன்று ஹெலிகள் புலிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி தரையிறக்கத்தை கைவிட்டு தளம் திரும்பவேண்டி ஏற்பட்டது.

பரசூட்டில் குதித்த சீக்கியர்கள்:

இதேவேளை, இந்தியப் படையினர் தமது முற்றுகைத் தாக்குதல் திட்டத்தின் அடுத்த கட்டத்தை நடைமுறைப்படுத்த ஆரம்பித்தார்கள்.
யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடத்தை அண்டிய பகுதியில் 13வது சீக்கியப் படையணியினரைப் பரசூட்டுக்களின் மூலம் தரையிறக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள எத்தனித்தார்கள். முன்னைய தரையிறக்க நடவடிக்கையைப் போலல்லாமல், இந்த தரையிறக்க நடவடிக்கையை மிகவும் இரகசியமாக மேற்கொள்ளுவதே இந்தியப் படையினரின் திட்டமாக இருந்தது.

கொக்குவில் பிரதேசத்தில் பராக் கொமாண்டோக்களை ஆரவாரத்துடன் தரையிறக்கி புலிகளின் கவனத்தை அங்கு முற்றாகத் திருப்பிவிட்டு, பல்கலைக்கழக மருத்துவபீட பிரதேசத்தில் சீக்கியத் துருப்பினரை பரசூட்டுக்கள் மூலம் இரகசியமாக தரையிறக்கி நிலை கொள்ள வைப்பதே இந்தியப்படையினரின் திட்டமாக இருந்தது. இவ்வாறு இரகசியமாக தரையிறங்கும் சீக்கியப்படையினர், யாழ் மருத்துவபீட வளாகத்தைத் தமது தளமாக ஆக்கிக் கொள்ளுவதுடன், தேவை ஏற்பட்டால் கொக்குவில் பிரதேசத்தில் தரையிறங்கிய பராக் கொமாண்டோக்களுடன் சண்டைகளில் ஈடுபட்டிருக்கொண்டிருக்கும் விடுதலைப் புலிப் போராளிகளுக்கு பின்புறம் இருந்து தாக்குதல்களைத் தொடுத்து, ஒரு அதிர்ச்சி நடவடிக்கையை மேற்கொள்ளுவதும் அவர்களது திட்டமாக இருந்தது.

உண்மையிலேயே இது நல்லதொரு திட்டம்தான். ஆனால் எதிர்காலத்தையும், எதிரியின் எந்த ஒரு நகர்வினையும் கச்சிதமாகக் கணிப்பிடவல்ல தலைவர் என்று அவரது எதிரிகளால் கூட பாராட்டப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர், இந்தியத் துருப்புக்கள் இவ்வாறுதான் தமது நகர்வினை மேற்கொள்ளக்கூடும் என்று தமது போராளிகளுக்கு ஏற்கனவே எச்சரித்திருந்தார். அப்படி ஒரு நகர்வு மேற்கொள்ளப்படும் பொழுது அதனை எவ்வாறு எதிர்கொள்ளுவது என்றும் அவர் திட்டமிட்டிருந்தார்.

அதன்படி, யாழ் மருத்துவ பீட கட்டிடத்தின் மாடிகளிலும், அருகில் இருந்த மரங்களிலும் விடுதலைப் புலிப் போராளிகள் நிலை எடுத்திருந்தார்கள். பின்நாட்களில் விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளராக இருந்த பொட்டு அம்மானின் தலைமையிலேயே இந்த தற்காப்புத் தாக்குதல் திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்தியப் படை வீரர்கள் பரசூட்டுக்களில் குதிக்க ஆரம்பித்ததும் ஏற்கனவே நிலையெடுத்து பதுங்கியிருந்த விடுதலைப் புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள ஆரம்பித்திருந்தார்கள்.

நள்ளிரவு காரிருளில் பரசூட்டுக்களில் தொடர்ச்சியாகக் குதித்துக்கொண்டிருந்த இந்திய படையின் சீக்கிய காலாட் படைப்பிரிவினருக்கு எங்கிருந்து துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்படுகின்றன என்று புரியவில்லை. திரும்பிய பக்கமெல்லாம் இருந்து துப்பாக்கிச் சன்னங்களின் ஒளிகள் தம்மை நோக்கி வந்து கொண்டிருப்பதை அவர்கள் அவதானித்தார்கள். பரசூட்டுக்களில் தரையிறங்கிக்கொண்டிருந்த பல இந்திய வீரர்கள் தரையைத் தொடும் முன்னதாகவே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி அநியாயமாக இறந்து விட்டிருந்தார்கள்.

இதில் தரையிறங்கிய இந்தியப் படைப்பிரிவிற்கு பொறுப்பான அதிகாரி மேஜர் பீரேந்திர சிங்கும் ஒருவர். அத்தோடு தரையிறங்கிய இந்தியப் படைப்பிரிவின் தொலைத்தொடர்பு இயக்குனரும் கொல்லப்பட்டிருந்தார்.

இந்திய ஜவான்களுக்கு ஏற்பட்ட தடுமாற்றம்:

தரையிறங்கிக்கொண்டிருந்த சீக்கிப் படைவீரர்களுக்கும்சரி, தரையிறக்கத்தை பலாலி இராணுவத் தளத்தில் இருந்து நெறிப்படுத்திக்கொண்டிருந்த இந்தியப் படை அதிகாரிகளுக்கும் சரி, களமுனையில் என்ன நடக்கின்றது என்று ஒன்றுமே புரியவில்லை.

சீக்கிய காலாட் படையினரை தரையிறக்கவெனச் சென்ற ஹெலிக்கப்டர்கள் சுமார் 30 படையினரை மட்டுமே தரையிறக்கிவிட்டு, துப்பாக்கிச் சூடு அதிகமாக இருப்பதாகவும், மற்றவர்களை தரையிறக்க முடியாது என்றும் கூறிவிட்டு தளம் திரும்பிவிட்டன. தரையிறங்கியவர்களின் கதி என்னவென்று அறிவதற்கும் தளத்தில் இருந்த படி தாக்குதல் நடவடிக்கைகளை நெறிப்படுத்திக்கொண்டிருந்த அதிகாரிகளால் முடியவில்லை. தொலைத் தொடர்பு முற்றாகவே துண்டிக்கப்பட்டிருந்தது.

தரையிறக்கத்தை மேற்கொண்டிருந்த படையினர் கதி அதைவிட மோசமானதாக இருந்தது. திரும்பிய பக்கமிருந்தெல்லாம் துப்பாக்கி வேட்டுக்கள் தம்மை நோக்கி வந்த வண்ணம் இருந்தன. கடும் இருளில் தமது சகாக்கள் எங்கிருக்கின்றார்கள், தாம் எங்கு நிலை எடுக்கவேண்டும், அடுத்து என்ன செய்யவேண்டும் என்று எதுவுமே அவர்களுக்குப் புரியவில்லை. தமது அணிக்கு தலைமை தாங்கி வந்த அதிகாரியிடம் இருந்தும் எந்த வித உத்தரவும் வந்தபாடில்லை. தளத்துடனும் எந்த வித தொடர்பும் இல்லை. தமது தரப்பில் எத்தனை பேர் தப்பி இருக்கின்றார்கள்? யார் யார் உயிருடன் இருக்கின்றார்கள்? யார் யார் இறந்திருக்கின்றார்கள்? அவர்கள் எங்கெங்கு நிலை எடுத்திருக்கின்றார்கள்? தமது தற்போதைய பலம் என்ன? தமக்கு வெளியில் இருந்து எதாவது உதவிகள் கிடைக்குமா? – எதுவுமே அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. காரிருள் அவர்களுக்கு எதனையும் தொடர்ந்து செய்வதற்கு அனுமதியளிக்கவும் இல்லை.

இரகசியமான நகர்வினை மேற்கொள்ளவென வந்த அவர்களது நடவடிக்கைகள் பகிரங்கமானது அவர்கள் சற்றும் எதிர்பார்க்காதது. இரகசியமாகத் தரையிறங்கி, அங்கு பாதுகாப்பு அரன்களை உருவாக்கி நிலையெடுப்பதற்கு ஏதுவாக இந்தியப் படையினர் தம்முடன் சிறிய சவள்களும், சாக்குப் பைகளும் கொண்டு வந்திருந்தார்கள். தரையில் படுத்திருந்தபடி தாம் உடன் கொண்டுவந்திருந்த சவள்கள் மூலம் மண்ணைத் தோண்டிய சீக்கியப் படை வீரர்களுக்கு பலத்த ஏமாற்றமே கிடைத்தது. அந்தப் பிரதேசம் கடினமான தரையமைப்பைக் கொண்ட பிரதேசம் என்பதால், அவர்களுக்கு அதுவும் முடியவில்லை.

நிலத்தில் படுத்திருந்து நிலை எடுத்தபடி அனைத்து திசைகளை நோக்கியும் சுட்டுக்கொண்டிருந்தார்கள். இரண்டு இந்திய ஜவான்கள் தமது துப்பாக்கி ரவைகள் தீர்ந்துவிட்ட நிலையில் தம்மைப் பாதுகாக்கவெனத் தமது துப்பாக்கி முனைகளில் பொருத்தப்பட்டிருந்த பையனைட் கத்திகள் (Bayonet) கொண்டு புலிகளை தாக்க ஆரம்பித்திருந்தார்கள்.

விடிய ஆரம்பித்ததும், விடுதலைப் புலிகள் தமது இலக்குகளை இனங்கண்டு துல்லியமாகத் தாக்குதல்களை மேற்கொண்டார்கள். யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட வளாகத்தினுள் தரையிறங்கிய 30 இந்திய சீக்கியப் படைவீரர்களுள் 29 வீரர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். ஒரு ஜவான் புலிகளால் உயிருடன் பிடிக்கப்பட்டார்.

இதேவேளை, கொக்குவில் பிரதேசத்தில் ஏற்கனவே தரையிறக்கப்பட்டிருந்த 100 பாராக் கொமாண்டோக்களும், அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் தடுமாறிக்கொண்டிருந்தார்கள்

SHARE