பிப்.18-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும்

318

 

தமிழக சட்டப்பேரவையை சுற்றி போலீஸார் குவிப்பு | படம்: எல்.சீனிவாசன்.

தமிழக சட்டப்பேரவையை சுற்றி போலீஸார் குவிப்பு | படம்: எல்.சீனிவாசன்.

நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க காங்கிரஸ் முடிவு: திருநாவுக்கரசர் அறிவிப்பு

*

அதிர்ந்துவரும் தமிழக அரசியல் இன்று மேலும் ஒரு அதிரடி திருப்பத்தை எதிர்கொள்ளும் சூழலில் இருக்கிறது. இன்னும் சற்று நேரத்தில், தமிழக முதல்வராகியுள்ள எடப்பாடி பழனிசாமியின் அமைச்சரவை பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான பலப்பரீட்சை சட்டப்பேரவையில் நடக்கிறது.

117 பேர் ஆதரித்தால் மட்டுமே ஆட்சி பிழைக்கும் என்ற சூழலில் எடப்பாடி பலப்பரீட்சையை எதிர்கொள்கிறார். இந்தச் சூழலில் இன்று (சனிக்கிழமை) காலை கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. அருண்குமார் நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார்.

இதனால், எடப்பாடி பழனிசாமியை சட்டப்பேரவையில் ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 122-ஆக குறைந்துள்ளது. இது இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பின் மீதான எதிர்பார்ப்பை பலமடங்கு அதிகரித்துள்ளது.

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் திமுக தலைவர் கருணாநிதி இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

பரபரப்புடன் தொடங்கியுள்ள இன்றைய தினத்தின் நிகழ்வுகளின் தொகுப்பு:

11.15 am: சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதால் கதவுகள் அடைக்கப்பட்டன.

11.10 am: ரகசிய வாக்கெடுப்பு நடத்தக் கோரி பேரவையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

11.05 am: தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் தொடங்கியது. நம்பிக்கை தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

10.50 am: “எண்ணம் இருந்தும் ஆண்டவரால் காப்பாற்ற முடியவில்லை; எண்ணிக்கை இருந்ததால் ஆளுநரால் காப்பாற்ற முடியவில்லை. தமிழகத்தை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்” என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். | தமிழகத்தை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்: தமிழிசை கருத்து |

10.30 am: கூவத்தூரில் இருந்து புறப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தலைமைச் செயலகம் வரத் தொடங்கினர்.

10.15 am: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவரது ஆதரவாளர்கள் தலைமைச் செயலகம் வந்தடைந்தனர்.

10.00 am: சட்டப்பேரவைக்கு வந்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினின் வாகனம் வாயிலில் நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ.க்கள் சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், வாயிற்பகுதியிலிருந்து ஸ்டாலின் தலைமைச் செயலகத்துக்குள் நடந்தே சென்றார். இதனால் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.

போர் நினைவிடத்திலிருந்து தனது சக எம்.எல்.ஏ.க்களுடன் நடந்து செல்லும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் | படம்:வி.கணேசன்.

9.45 am: தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்மொழியும் நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியினர் கூடி எடுத்துள்ள ஒருமித்த முடிவு இது என அவர் தெரிவித்தார். | நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க காங்கிரஸ் முடிவு |

9.40 am: நம்பிக்கை வாக்கெடுப்பு இன்னும் சற்று நேரத்தில் நடைபெறவிருக்கும் நிலையில், போயஸ் கார்டன் பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.

9.30 am: “தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடுக்கும் இன்றைய தினம் தர்ம யுத்தத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள் இது. மனசாட்சியின் குரலும், அம்மாவின் ஆன்மாவும் இன்றைய வாக்கெடுப்பில் ஓங்கி ஒலிக்கும் என நம்புகிறேன்” என முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

9.25 am: நம்பிக்கை வாக்கெடுப்பு ஓபிஎஸ் அணிக்கு சாதகமாக அமையும் என முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

9.20 am: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று காலை 10 மணியளவில் ராஜ்பவனில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்கிறார்.

9.15 am: சென்னை சத்யா ஸ்டுடியோஸ் பகுதியில் ஓபிஎஸ். ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்வதற்காக கூவத்தூரில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கும் நிலையில், எம்.எல்.ஏ.க்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.

9.10 am: தலைமைச் செயலகத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை ஆணையர் ஜார்ஜ் நேரில் ஆய்வு செய்தார்.

9.05 am: தலைமைச் செயலகத்தைச் சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகத்தில் பாதுகாப்புப் பணியில் போலீஸார் | படம்: எல்.சீனிவாசன்.

9.00 am: திமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவைக்கு வரத் தொடங்கியுள்ளனர்.

8.55 am: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகம் வந்தடைந்தார்.

தலைமைச் செயலகத்துக்கு வருகை தந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வாகனம்.

8.50 am: அதிமுகவில் குடும்ப ஆதிக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தே நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிப்பதாக எம்.எல்.ஏ. அருண்குமார் தெரிவித்துள்ளார். மேலும், எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கவில்லை. அதிமுகவில் அணிகளுக்கு இடமில்லை. கட்சியும், சின்னமுமே பிரதானம். மக்கள் விருப்பப்படி இந்த முடிவை எடுத்திருக்கிறேன் என்றார். | குடும்ப ஆதிக்கத்தை எதிர்த்து வாக்கெடுப்பை புறக்கணித்தேன்: எம்எல்ஏ அருண்குமார்|

கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எம்.எல்.ஏ. அருண்குமார்.

8.45 am: சென்னை மெரினாவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

8.40 am: கூவத்தூரில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் சென்னை புறப்பட்டனர். வடக்கு மண்டல ஐ.ஜி. செந்தாமரைக்கண்ணன் தலைமையில் பாதுகாப்புடன் வாகனங்கள் புறப்பட்டன.

8.30 am: கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. அருண்குமார் இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்து ஊர் திரும்பினார். மாவட்ட செயலாளர் பதவியையும் ராஜினாமா செய்தார்.

8.00 am: நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து, “இன்று காண்போம் நரி பரியாகும் விந்தை. வெல்வது நல்ல மக்களின் மந்திரமா அந்தச் சொக்கனின் தந்திரமா பார்ப்போம்” என்று தெரிவித்துள்ளார்

SHARE