வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் 2016 ஆம் ஆண்டுக்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடையின் கீழ் எமது மரபுரிமை சார்ந்த அழிந்து வரும் கலை மரபுகளை பேணிப் பாதுகாக்கும் செயற்திட்டத்தின் ஓர் அங்கமாக மன்னார் மாதோட்டத்தில் ஏட்டுருவில் அமைந்திருந்ததும் மேடையேற்றப்பட்டு வருகின்றதுமான நாடகங்கள் ஆவணப்படுத்தப்பட்டு நூலுருவாகி வெளியீடு செய்யும் நிகழ்வு 26.02.6017 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் நானாட்டான் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வை வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தலைமைதாங்கினார். பிரதம விருந்தினராக மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக பரிபாலகர் மேதகு கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களும், சிறப்பு விருந்தினராக மீன்பிடி, போக்குவரத்து, வர்தகவாணிபம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வின் வரவேற்புரையினை பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் திருமதி வனஜா செல்வரட்ணம் அவர்களும், அறிமுக உரையினை வடமாகாண பிரதம செயலாளர் திரு அ.பத்திநாதன் அவர்களும், வெளியீட்டு உரையினை கலையருவி இயக்குநரும் மன்னா பத்திரிகையின் ஆசிரியருமான அருட்பணி தமிழ்நேசன் அடிகளாரும் நிகழ்த்தினர்.
இந்நிகழ்வில் ஏட்டுருவில் காணப்படும் புனித சந்தியோகுமையோர் நாடகம், இம்மானுவேல் நாடகம், என்டிறீக்கு என்பரதோர் நாடகம் என்பன நூல்வடிவில் வெளியிடப்பட்டதுடன், கலைஞர்களும் கௌரவிக்கப்பட்டு, நாடகங்களின் சில காட்சிகளும் நடித்துக்காட்டப்பட்டன. மேலும் இந்நிகழ்வில் அரங்கம் நிறைந்த முதியவர்கள் கலந்துகொண்டு மாகாண சபையின் இப்புதிய முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தனர்.