ஒரு பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றுமொரு பிரதேசத்தின் அபிவிருத்தியை சிதைத்துவிடக்கூடாது

283

ஒரு பிரதேசத்தின் அபிவிருத்தி இன்னுமொரு பிரதேசத்தின் அபிவிருத்தியை மழுங்கடித்து விடக்கூடாது.

காரைத்தீவு எல்லைக்குள் இடம்பெறும் எந்த அபிவிருத்தியானாலும் பிரதேச செயலகத்திற்கோ பிரதேசசபைக்கோ தெரியாமல் செய்யமுடியாது என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

காரைத்தீவு பிரதேசத்திற்குள் உள்ள வயற்காணிகள் இன்னுமொரு கமநல சேவைப்பிரிவிற்குள் வருவதையிட்டும், வயற்காணிகள் மண்போட்டு நிரப்பி வருவதையிட்டும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இவ்விடயம் தொடர்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். வயற்காணியை எக்காரணம் கொண்டும் நிரப்பமுடியாது. இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதியும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அண்மையில் கொழும்பில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் பின்னர் அவர் அந்தக்கருத்தை வெளியிட்டிருந்தார். எனவே அவ்வாறு யாராவது செயற்படுவார்களாயின் உரிய அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.

சம்மாந்துறைப் பொலிஸார் காரைத்தீவுப் பிரதேசத்துள் நடக்கும் சட்டரீதியற்ற செயற்பாடுகளை உடனுக்குடன் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இதேவேளை இக்கூட்டத்திற்கு வருகைதராத திணைக்கள தலைவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவுள்ளேன். கல்வித்திணைக்களம், மீன்பிடித்திணைக்களம் போன்ற இலாகாக்களின் உத்தியோகத்தர்கள் மீதும் ஆய்வொன்றினை மேற்கொள்ளவுள்ளேன்.

வீதி அபிவிருத்தி வேலைகள் உரிய காலத்திற்குள் செய்யப்படவேண்டும். வீட்டு தண்ணீர் குழாய் பொருத்துவதற்காக வெட்டப்படும் கிடங்குகளை அதற்கென பணம் அறவிடும் பிரதேசசபை வீதி அபிவிருத்தித் திணைக்களம் உடனுக்குடன் செய்துகொடுக்கவேண்டும்.

காரைத்தீவு பிரதேச வைத்தியசாலை தரமுயர்த்தப்படவேண்டும் எனவும் அங்கு மேற்கொள்ளப்படவேண்டிய தேவைகள் பற்றியும் வைத்திய அதிகாரி டாக்டர் றிஸ்பின் வேண்டுகோள்விடுத்தார்.

அதேவேளை வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவை ஒரு மாதத்திற்குள் கூட்டவேண்டும். அத்துடன் காரைத்தீவு மைதானத்திற்கு மின்சாரமும் தண்ணீரும் வழங்க ஏற்பாடு செய்யப்படவேண்டும். எனமேலும் தெரிவித்தார்.

SHARE