சமீர சேனாரத்ன மீதான துப்பாக்கிச்சூடு போலியாக திட்டமிடப்பட்ட நாடகம் – பொலிஸ் தலைமையகம்

296

மாலபே தனியார் மருத்துவ கல்லூரியின் பிரதம நிறைவேற்றதிகாரி டொக்டர் சமீர சேனாரத்ன மீதான துப்பாக்கிப் பிரயோகம் போலியாக திட்டமிடப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளில் இருந்து இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருக்கின்றது என காண்பிப்பதற்காகவே குறித்த சம்பத்தை திட்டமிட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக எம்பிலிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஆயுதங்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம், மார்ச் 13 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் கைதுசெய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் 2 கைத் துப்பாக்கிகளும், அவற்றுக்கான 5 ரவைகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பிரிதொரு குற்றத்திற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.

சம்பவத்தை போலியாக திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரையும், உள்ளூராட்சிமன்ற வாகன சாரதி ஒருவரையும் கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த பிரதேச சபை உறுப்பினருக்கும், டொக்டர் சமீர சேனாரத்னவுக்கும் இடையில் தொடர்புகள் காணப்படுகின்றமை விசாரணைகளின் போது கண்டறியப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில், மேலதிக விசாரணைகளை, கொழும்பு திட்டமிட்ட குற்ற விசாரணை பிரிவு மற்றும் நுகேகொட விசேட குற்ற விசாரணை பிரிவு ஆகியன இணைந்து மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.

SHARE