இந்தியா முதலிடத்தில் – வெளியான ஆய்வறிக்கை

187

இந்தியாவில் ஊழலை தடுக்க சிறப்பு ஊழல் தடுப்புச் சட்டம் அமுலில் இருந்தும் 41 சதவிகிதம் பேர் லஞ்சம் கொடுக்கின்றனர் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் ஊழலைத் தடுக்க 1988 ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின்படி, லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றமாகும். ஆனால், இந்த சட்டம் ஏட்டளவில் மட்டுமே இருந்து வருகிறது.

இந்நிலையில், லஞ்சம் வாங்குவதில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் 41 சதவிகித பேர் தங்களுடைய தேவைகளுக்காக லஞ்சம் கொடுக்கின்றனர் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஆசியா பசிபிக் நாடுகளில் ஊழல் குறித்து நடத்தப்பட்ட அறிக்கையை சர்வதேச வெளிப்படை நிறுவனம் பெர்லினில் நேற்று வெளியிட்டது.

இந்த ஆய்வில் 16 நாடுகளை சேர்ந்த சுமார் 20,000-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். அரசின் பொது சேவைகளைப் பெறுவதற்காக பத்தில் ஏழு போ் கையூட்டு கொடுக்கிறார்கள்.

இந்தியாவில் கடந்த 12 மாதங்களில் லஞ்சம் அதிகரித்துள்ளதாகவும் 40 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். 63 சதவிகிதம் பேர் இந்த ஊழலுக்கு எதிராக தனிப்பட்ட முறையில் போராடி வருகின்றனர்.

இந்தியாவில் லஞ்சம் கொடுப்பவர்களில் 73 சதவீதம் பேர் ஏழைகள் என தெரிய வந்துள்ளது.

அரசின் முக்கிய சேவைகளான பள்ளி கல்வி, மருத்துவமனை, சான்றிதழ்கள், காவல்துறை, பொதுச் சேவை, நீதிமன்றம் உள்ளிட்டவற்றில், சேவைகள் விரைவில் கிடைக்கவேண்டும் என்பதற்காக 38 சதவீத ஏழை மக்கள் லஞ்சம் கொடுப்பதாக தெரிவித்தனர்.

கல்விக்காக 58 சதவிகித பேரும், அரசின் மருத்துவ சேவைகளை பெறவும், அடையாளச் சான்றிதழ்களைப் பெறவும் 59 சதவிகித பேரும் லஞ்சம் கொடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்தியாவைத் தொடர்ந்து வியட்நாமில் 65 சதவீதம் பேர் லஞ்சம் கொடுப்பதாக தெரிவித்துள்ளனர். ஆய்வு நடத்தப்பட்ட 16 நாடுகளில் ஜப்பானில் 0.2 சதவிகித்தினர் மட்டுமே லஞ்சம் கொடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

SHARE