பாரிஸில் மிருகக்காட்சி சாலையில் இருந்த காண்டமிருகத்தின் கொம்பை வேட்டையர்கள் அறுத்து எடுத்து சென்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் தொய்ரி என்ற மிருகக்காட்சி சாலை உள்ளது. இங்கு 4 வயதான வின்ஸ் என்ற காண்டமிருகம் வாழ்ந்து வந்துள்ளது. நெதெர்லந்தின் ஒரு மிருகக்காட்சி சாலையில் பிறந்த வின்ஸ் சில ஆண்டுகளுக்கு முன்னர் பாரிஸுக்குக் கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த மிருகக்காட்சி சாலையில் நள்ளிரவில் திடீரென்று புகுந்த கொள்ளையர்கள் வின்ஸின் நெற்றியில் மூன்று முறை சுட்டு அதைக் கொன்றிருக்கின்றனர்.
அதன் பின்பு காண்டாமிருகத்தின் ஒரு கொம்பை அறுத்து எடுத்துள்ளனர். அடுத்தக் கொம்பை அறுப்பதற்குள் காவலரின் சத்தம் கேட்கவே, அதைப் பாதி அறுத்த நிலையிலேயே விடுவிட்டு சென்றுவிட்டனர்.
ஆப்ரிக்காவில் மாதம் 100 காண்டாமிருகங்கள் வரை வேட்டையாடப்படுவதாகவும், ஆனால் ஐரோப்பாவில் அதுவும் மிருக்கக்காட்சி சாலையில் காண்டா மிருகம் ஒன்று வேட்டையாடப்பட்டிருப்பது இது தான் முதன் முறை என்று கூறப்படுகிறது .
காண்டாமிருகத்தின் கொம்பு கள்ளச் சந்தையில் தங்கத்தைவிட மதிப்புமிக்கது என்பது குறிப்பிடத்தக்கது.