நியூசிலாந்து நாட்டில் ஓடுபாதையில் குறுக்கும் நெடுக்குமாக ஓடி 16 விமானங்களை தாமதப்படுத்திய வெறி நாயை பாதுகாப்பு அதிகாரிகள் வேறு வழியின்றி சுட்டுக்கொன்றுள்ளனர்.
நியூசிலாந்து நாட்டில் பரபரப்பு மிகுந்த ஆக்லாந்து சர்வதேச விமான நிலயத்தில் உள்ள ஓடுபாதைக்குள் நுழைந்த ஒரு நாய் வெறித்தனமாக குறுக்கும் நெடுக்குமாக ஓடி அமளியில் ஈடுபட்டது.
இதனால், அந்த விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்ல வேண்டிய மற்றும் தரையிறங்க வேண்டிய 16 உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்கள் பாதிக்கப்பட்டன.
வெறி பிடித்தது போன்று ஓடித் திரியும் அந்த நாயை பிடிக்க முயன்ற சிலரது முயற்சி பலனளிக்கவில்லை. மேலும், அடர்த்தியான இருட்டில் தன்னை பிடிக்க முயன்றவர்கள் மீது பாய்வதற்கும் அந்த நாய் தயாராக இருந்தது.
நிலைமை மேலும் விபரீதம் ஆவதை தவிர்க்கும் வகையில் ஆக்லாந்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் வேறு வழியின்றி அந்த நாயை சுட்டுக்கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ள மிருக வதை தடுப்பு அமைப்பு, நாயை மயக்க மருந்து துப்பாக்கியால் சுட்டு அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளது.
Grizz எனப்படும் இந்த நாயானது ஆக்லாந்து விமான நிலையத்தில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வந்துள்ளனர். சம்பவத்தின்போது குறித்த நாய் பாதுகாப்பு ஊழியரிடம் இருந்து தப்பியுள்ளதாக கூறப்படுகிறது.