பக்கவாதம்: இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்

206

இதயத்தில் ஏற்படும் மாரடைப்பை போல மூளைக்கு தேவையான சத்துக்களை எடுத்து செல்லும் ரத்தக் குழாயின் நாளத்தில் அடைப்பு ஏற்படும் போது மூளை மற்றும் உடலின் சில பாகங்கள் செயலிழந்து விடுவதை பக்கவாதம் என்கிறோம்.

பக்கவாதத்தில் தற்காலிக பக்கவாதம், தொடர் பக்கவாதம், முற்றுப்பெற்ற பக்கவாதம் என்று மூன்று வகைகள் உள்ளது.

உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய்கள், அதிக கொழுப்புச்சத்து, ரத்தக் குழாயில் கொழுப்பு படிதல், அதிக உடல் எடை, புகைத்தல், மது அருந்துதல், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், மன அழுத்தம், உடற்பயிற்சியின்மை மற்றும் நாட்பட்ட தொற்று கிருமி பாதிப்பு இது போன்ற காரணங்களினால் பக்கவாதம் ஏற்படுகிறது.

பக்கவாத நோயின் அறிகுறிகள் என்ன?
  • வாய் ஒரு பக்கம் கோணுதல்
  • பேச்சு குழறல் அல்லது பிறர் பேசுவது புரியாமல் இருத்தல்
  • உடலின் ஒரு பக்கம் கை, கால் செயல் இழத்தல் அல்லது மரத்துப் போதல்
  • ஒரு பக்கம் பார்வை மங்குதல்
  • திடீரென தலை சுற்றுதல் அல்லது தடுமாற்றம்
  • சாப்பிடும்போது அல்லது தண்ணீர் குடிக்கும்போது பொரை ஏறுதல்
  • திடீர் மறதி, குழப்பமான மன நிலை
பக்கவாத நோயின் அறிகுறி இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

பக்கவாதத்தின் அறிகுறி தெரிந்த மூன்று மணி நேரத்திற்குள், சி.டி.ஸ்கேன் எடுத்து, மூளை அடைப்பை உறுதி செய்ய வேண்டும்.

பின் மூன்று மணிநேரத்திற்குள், ரத்த அடைப்பு நீக்கும் மருந்து செலுத்தினால் பக்கவாதத்தின் தாக்கத்தைக் குறைத்து முற்றிலும் குணப்படுத்தலாம்.

இதனை அனைவருக்கும் செய்ய முடியாது, முக்கிய பரிசோதனைகள் செய்த பின்னர் தகுதியான நபர்களுக்கு மட்டுமே ரத்த அடைப்பு நீக்கும் மருந்தை செலுத்த இயலும்.

நோயை தடுப்பதற்கான வழிமுறைகள் காரணங்கள்
  • உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோயை கட்டுப்படுத்த வேண்டும்.
  • கொழுப்புச்சத்தை கட்டுப்படுத்துதல்
  • உடல் எடை அதிகரிக்க கூடாது, சீரான உடற்பயிற்சி அவசியம்.
  • புகையிலை பழக்கம் மற்றும் மது அருந்துதலை கைவிட வேண்டும்.

வருடத்திற்கு ஒருமுறையேனும் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

SHARE