சினிமாவில் காலடி எடுத்து வைப்பவர்கள் பலரும் என்றாவது நமக்கு வெற்றி வந்துவிடாதா என்று தான் போராடி வருகிறார்கள். ஒரு சிலருக்கு எளிதில் கிடைக்கும், ஒரு சிலருக்கு அது எட்டா கனியாகவே இருக்கும்.
அந்த வகையில் திரைத்துரைக்கு பின்னால், அப்பாஸ், அஜித் ஏன் ஜுனியர் ஆர்டிஸ்ட் முதற்கொண்டு குரல் கொடுத்து வந்தவர் விக்ரம்.
தொடர் 20 படங்கள் தோல்வி, சினிமாவில் இதன் பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் இவர் பார்க்காத வேலைகளே இல்லை.
மனதில் பலம் இருந்தாலும், ஒரு பெரிய விபத்து உடலில் உள்ள பலத்தை விக்ரமிடம் இருந்து குறைத்தது. காலில் ஏற்பட்ட விபத்தால் விக்ரம் 3 வருடம் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத தருணம்.
அப்போது தான் அவர் வீட்டு காலிங் பெல்லை பாலா அடித்தார், விக்ரமை சேதுவாக மாற்ற, விக்ரமும் இதற்கு மேல் என்னிடம் ஏதும் இல்லை என்பது போல் அத்தனை அர்பணிப்புடன் நடித்துக்கொடுத்தார்.
இந்த படத்தில் விக்ரம் மெலிந்து, கருத்த தேகத்துடன் இருக்க வேண்டும் என பாலா கூற, அதனால் தினமும் படப்பிடிப்பு தளத்திற்கு 5 கிலோமீட்டருக்கு மேல் நடந்தே வருவராம்.
இதை பாலாவே ஒரு பேட்டியில் கூறியுள்ளார், சேது வெளிவந்து விக்ரமை ஒரு நடிகனாக மக்கள் ஏற்றுக்கொள்ள, அதன் பிறகும் காசி, பிதாமகன், அந்நியன், ராவணன், தெய்வத்திருமகள், ஐ என படத்திற்காக தன்னை உருமாற்றி, உருமாற்றி அர்ப்பணித்து வருகின்றார்.
இவரின் அர்ப்பணிப்பிற்கு தான் தமிழ் சினிமா ரசிகர்களில் ஒருவர் கூட எனக்கு விக்ரமை பிடிக்காது என்று கூறமாட்டார்கள்.
விஜய், அஜித், ரஜினி, கமல் என அனைத்து தரப்பு நடிகர்களின் ரசிகர்களுக்கும் இவர் பேவரட் தான், சீயானின் உழைப்பும், உயர்வும் இன்று போல் என்றும் உயர சினி உலகம் இவரின் பிறந்தநாளான இன்று தன் வாழ்த்துக்களை கூறுகின்றது.