பிலிப்பைன்ஸ் தலைநகரில் தடுத்து நிறுத்தப்பட்ட சவுதி அரேபியா இளம்பெண் ஒருவர் உயிர் பிச்சை கேட்டு கோரிக்கை விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சவுதி அரேபியாவில் இருந்து இளம்பெண் ஒருவர் அங்குள்ள அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த இளம்பெண் ரியாத் நகரில் இருந்து அவுஸ்திரேலியா செல்லும் வழியில் பிலிப்பைன்ஸ் தலைநகரில் அங்குள்ள அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
இஸ்லாமிய சட்டங்களை கடுமையாக பின்பற்றும் சவுதி அரேபியாவில் ஆண்கள் துணையின்றி பெண்கள் வாகனம் செலுத்தவோ, தனியாக வெளிநாடு செல்லவோ, தனியாக கடவுச்சீட்டு பெறவோ, ஏன் சிறையில் இருக்கும் கைதிகள் வெளிவரவோ சாத்தியமில்லை.
இந்த நிலையில் சுதந்திரமாக வாழ விரும்பிய 24 வயது நிரம்பிய தினா அலி லஸ்லூம் சவுதி அரேபியாவில் உள்ள தமது குடும்பத்தில் இருந்து வெளியேறி அவுஸ்திரேலியாவில் அடைக்கலம் கோரியுள்ளார்.
தினா அலி வெளியேறிய விவகாரம் குடும்பத்தினருக்கு தெரிய வந்ததும் அவர்கள் உரிய அதிகாரிகளிடம் முறையிட்டு மணிலாவில் தரையிறங்கிய தினா அலியின் கடவுச்சீட்டு மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்ய வைத்துள்ளனர்.
இதனால் கடும் அதிர்ச்சிக்குள்ளான தினா அலி, உதவி கோரி முறையிட்டுள்ளார். சவுதியில் தம்மை திரும்ப அழைத்து செல்வது என்பது கொலை செய்ய மட்டுமே எனவும், தமது உயிருக்கு உத்தரவாதம் இனி இல்லை எனவும் அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
மணிலா விமான நிலையத்தில் தம்மை ஒரு கைதி எனவே நடத்துவதாகவும் என்னால் எதுவும் இங்கிருந்து மேற்கொண்டு முடிவெடுக்க முடியவில்லை எனவும் அவர் முறையிட்டுள்ளார்.
இதனைடையே சவுதியில் இருந்து மணிலா வந்த தினா அலியின் உறவினர்கள் இருவர் கடும்போராட்டத்திற்கு பின்னர் அவரை விமானத்தில் ஏற்றி சென்றுள்ளதாக சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த விவகாரம் பல்வேறு ஊடகங்கலில் வெளியாகியுள்ளதால் தினா அலியை பெண்கள் காப்பகத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆண் துணையின்றி இனிமேல் தினா அலியால் அந்த காப்பகத்தில் இருந்து வெளியேற முடியாது எனவும், அதிகாரிகளும் அவரது உறவினர்களும் மட்டுமே இனி அவரை தொடர்பு கொள்ள முடியும் எனவும் சவுதி அரேபியாவில் உள்ள பெண்கள் உரிமை ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவில் இருந்து பெண்கள் ரகசியமாக வெளியேறுவது என்பது இது ஒன்றும் முதன்முறை அல்ல.
அங்குள்ள கடுமையான சட்டங்களை பின்பற்றும் மன நிலையில் தற்போதைய தலைமுறை இல்லை எனவும், சமயங்களில் குடும்ப பெண்களே தங்களின் குழந்தைகளுடன் வெளியேறும் சம்பவமும் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் இவை எதற்கும் அதிகாரப்பூர்வமான ஆதாரங்கள் இல்லை என கூறப்படுகிறது.