பிரித்தானிய நாட்டில் குறிப்பிட்ட வேகத்தை கடந்து வாகனங்களை இயக்கும் ஓட்டுனர்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரித்தானியாவில் சாலை விதிகளை மீறி வாகனங்களை ஓட்டுவதால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, வரையறுக்கப்பட்ட வேகத்தை தாண்டி வாகனங்களை இயக்கும் ஓட்டுனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது போக்குவரத்து அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்து கடந்தாண்டு அரசு நடத்திய ஆலோசனைக்கு பிறகு அதிவேகமாக வாகனங்களை இயக்கும் ஓட்டுனர்களுக்கு 1,000 பவுண்ட் வரை அபராதம் விதிக்கப்பட்டது.
எனினும், இந்த விதிமுறைகளை வாகன ஓட்டுனர்கள் மீறுவதால் அபராத தொகையை அதிகரிக்க அரசு பரிசீலனை செய்து வந்துள்ளது.
இந்நிலையில், நீதிமன்றத்தின் ஒப்புதலின் அடிப்படையில் தற்போது அதிவேகமாக வாகனங்களை இயக்கும் ஓட்டுனர்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகை தற்போது இரண்டு மடங்கிற்கும் அதிகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், அரசு வரையறை செய்துள்ள வேகத்தை தாண்டி வாகனங்கள் ஓட்டும் ஒவ்வொரு ஓட்டுனர்களுக்கும் 2,500 பவுண்ட் வரை அபராதம் விதிக்கப்படும்.
இந்த புதிய போக்குவரத்து விதிமுறையானது எதிர்வரும் ஏப்ரல் 24-ம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.