சுவிஸ் விமான நிறுவனம் அதிரடி அறிவிப்பு

203

சர்வதேச சுவிஸ் விமானங்களில் எந்நேரமும் இரண்டு விமானிகள் இருக்க வேண்டும் என்ற புதிய சட்டத்தை சுவிஸ் விமான நிறுவனம் நிராகரித்துள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் ஜேர்மன் நாட்டை சேர்ந்த ஜேர்மன்விங்க்ஸ் என்ற விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 155 பேரும் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணையின்போது விமானி கழிவறைக்கு சென்ற நேரத்தில் கதவை அடைத்துக்கொண்ட துணை விமானி விமானத்தை மலையில் மோதவிட்டு விபத்து ஏற்படுத்தியது நிரூபிக்கப்பட்டது.

இவ்விசாரணையின் முடிவில் ஐரோப்பிய நாடுகளில் இயங்கும் விமானங்களில் எந்நேரத்திலும் இரண்டு விமானிகள் பணியில் இருக்க வேண்டும் எனக் கூறி புதிய சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டது.

அதாவது, இரண்டு விமானிகளில் ஒருவர் கழிவறைக்கு சென்றுவிட்டால் கூட மற்றொரு விமானி அவரது இருக்கையில் அமர்ந்திருக்க வேண்டும் என்பது சட்டமாகும்.

ஆனால், இச்சட்டத்தை சுவிஸ் விமான நிறுவனம் நிராகரித்துள்ளது.

இது குறித்து சுவிஸ் விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘விமானிகளின் அறையில் எப்போது இரண்டு விமானிகள் இருந்தால் மட்டும் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது.

மாறாக, இம்முறை விமானத்திற்கு ஆபத்தைக் கூட ஏற்படுத்தும்.

உதாரணத்திற்கு, விமானிகள் தேவையான எண்ணிக்கையில் உள்ளனர் என்ற எண்ணம் ஏற்பட்டால் விமானிகள் அடிக்கடி கதவை திறந்துக்கொண்டு வெளியே செல்ல நேரிடும்.

இது விமானத்தின் பாதுகாப்பை சீர்குலைக்கவும் வாய்ப்புள்ளது’ என விளக்கம் அளித்துள்ள சுவிஸ் விமான நிறுவனம் இந்த புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்த மறுத்துள்ளது.

SHARE