GSAT-9 செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை படைத்த இஸ்ரோ

249

தெற்கு ஆசிய செயற்கைக்கோள் என அழைக்கப்படும் ஜி-சாட் (GSAT-9) செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ளது இஸ்ரோ.

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிக்கோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி ரக எஃப்-09 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் ஏவப்பட்டுள்ளது.50 மீட்டர் உயரமும், 2,230 கிலோ எடையும் கொண்ட இந்த செயற்கைக்கோளின் ஆயுள்காலம் மொத்தம் 12 ஆண்டுகள் என்றும் கூறப்பட்டுள்ளது.

தகவல்தொடர்பு தொழில்நுட்பம், டி.டி.எச் சேவை, பேரிடர் கால மேலாண்மை, கல்வி, அண்டை நாடுகளுடனான தொடர்புகளை வளர்த்துக்கொள்ள இந்த செயற்கைக்கோள் அனுப்பப்பட்டுள்ளது. சார்க் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள மொத்த எட்டு நாடுகளில், பாகிஸ்தான் தவிர்த்து ஏனைய நாடுகள் இந்த செயற்கைக்கோளைப் பயன்படுத்த உள்ளன.

235 கோடி ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோளை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ மூன்று ஆண்டு காலத்தில் தயாரித்துள்ளது. 450 கோடி ரூபாய் மதிப்பிலான சேவைகளை வழங்க உள்ள இந்த செயற்கைக்கோள், இந்தியாவின் சார்பாக சார்க் நாடுகளுக்குப் பரிசாக வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இது குறித்து பாகிஸ்தான் செய்தி தொடர்பாளர், நஃபீஸ் கூறுகையில், பாகிஸ்தானுக்கு, சொந்தமான விண்வெளி மையம் உள்ளது. தொழில் நுட்ப ரீதியில் மிகவும் மேம்பட்ட வகையில் அது செயல்பட்டு வருகிறது. தெற்காசிய செயற்கைக் கோள் சார்க் நாடுகளுக்கானது என்று இந்தியா சொன்னாலும், இதன் மூலம் கூட்டுறவு திட்டத்தை செயல்பட முடியாது. எனவே, இதை பாகிஸ்தானால் ஆதரிக்க முடியாது.இது இந்தியாவிற்கான திட்டம்தான். பிராந்தியத்துக்கான முயற்சி இல்லை” என்றார்.

SHARE