தங்களுக்கான நிரந்தர நியமனம் வழங்க கோரி வவுனியா சுகாதார தொண்டர்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் இன்று(06) 3 ஆவது நாளாகவும் தொடர்ந்துள்ளது.
போராட்டத்தை முன்னெடுத்து வரும் சுகாதார தொண்டர்கள் தங்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் வரையில் தாம் தொடர்ந்து போராட்டம் மேற்கொள்ளவுள்ளதாகவும் தங்களது நியாயமான போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவினை வழங்குமாறு தெரிவித்துள்ளனர்.
அத்துடன், 15 வருடத்திற்கு மேலாக தங்களுக்கு நியமனம் வழங்கப்படவில்லை, சுகாதார தொண்டராக பணியாற்றிவரும் தங்களுக்கு வடமாகாண சுகாதார அமைச்சர் நியமனம் வழங்குவதாக வாக்குறுதியளித்துள்ளதாகவும் அதற்கு அவர் இன்று வரை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.
கடந்த வாரம் அவருடன் மேற்கொண்ட கலந்துரையாடலையடுத்தே தங்களது போராட்டத்தினை மேற்கொள்ளத் தீர்மானித்திருப்பதாகவும் கடந்த யுத்த காலத்தில் தங்களது பங்களிப்பு பெருமளவு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
ஆனால் எதுவித கொடுப்பனவும் பெற்றுக்கொள்ளாமல் தாம் தொடர்ந்து சுகாதார தொண்டராக பணியாற்றி வருவதாகவும் தங்களது போராட்டம் நியமனத்தினை மையமாக வைத்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இன்றைய போராட்டத்தில் 30 வரையான சுகாதார தொண்டர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.