ஐக்கிய அமீரகத்தின் அரச குடும்பத்தை சார்ந்த 8 இளவரசிகள் பெல்ஜியம் பயணத்தின் போது கூடவே அழைத்து சென்றிருந்த பணிப்பெண்களை மனிதத்தன்மையற்ற முறையில் நடத்தியதாக கூறி அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பெல்ஜியம் பொலிசார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
ஐக்கிய அமீரகத்தின் இளவரசி Sheikha al-Nahyan மற்றும் அவரது 7 மகள்கள் பெல்ஜியம் நாட்டுக்கு அடிக்கடி பயணம் மேற்கொள்வதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு இளவரசி Sheikha al-Nahyan மற்றும் அவரது 7 மகள்களுடன் அவர்களின் பணிவிடைக்காக 20 பணிப்பெண்களையும் அழைத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் ஒரே ஒரு பணிப்பெண் மட்டும் அவர்கள் தங்கியிருந்த Conrad ஹொட்டலில் இருந்து தப்பிச் சென்று பொலிசாரிடம் முறையிட்டுள்ளார்.
அதில் தாமும் அவருடன் பணிவிடைக்கு அழைக்கப்பட்டு வந்த அனைத்து பணிப்பெண்களும் நீண்ட பல மணி நேரம் ஓய்வின்றி வேலை வாங்கப்படுவதாகவும், சமயங்களில் போதிய உணவு வழங்காமலும், ஓய்வெடுக்க படுக்கையே வழங்க மறுப்பதாகவும், பணிப்பெண்களாக அழைத்து வரப்பட்ட பெண்களுக்கு உரிய ஆவணங்கள் இல்லை எனவும் அந்த பணிப்பெண் புகார் தெரிவித்துள்ளார்.
இந்த புகாரையடுத்து பெல்ஜியம் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் குறித்த பணிப்பெண் அளித்த புகார் உண்மை எனவும், மனிதத்தன்மையற்ற நிலையில் குறித்த பணிப்பெண்களை இளவரசிகள் நடத்துவதும் தெரிய வந்தது.
இதனையடுத்து குறித்த 8 இளவரசிகள் மீதும் ஆள்கடத்தல் மற்றும் தொழிலாளர்களுக்கான சட்டங்களை மீறுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர்.
ஆனால் ஐக்கிய அமீரகத்தின் அரச குடும்பங்களில் ஒன்றின் இளவரசிகள் மீது பாய்ந்துள்ள இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இருக்காப்போவதில்லை எனவும் இதுவெறும் கண் துடைப்பு நாடகம் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
சிக்கலில் சிக்கிய குறித்த இளவரசிகளின் தந்தையான Sheikh Mansour bin Zayed al-Nahyan என்பவர் ஆளும் அரச குடும்பத்தின் உறுப்பினர் மட்டுமின்றி மிக பிரபலமான Manchester City உதைப்பந்து அணியின் உரிமையாளரும் கூட.
அதனால் இந்த வழக்கு தொடர்பாக இரு நாடுகளும் ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும் என பெல்ஜியத்தின் மனித உரிமைகள் அமைப்பின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.