மான்செஸ்டரில் குண்டுவெடிப்பு இடம்பெற்றதை தொடர்ந்து எனது மனைவியையும் மகளையும் இறந்து கிடந்தவர்களின் மத்தியில் தேடினேன் என சம்பவம் இடம்பெற்ற பகுதியில் காணப்பட்ட ஓருவர் தெரிவித்துள்ளார்.
மான்செஸ்டரில் இசைநிகழ்ச்சிக்கு சென்றிருந்த தனது மனைவியையும் மகளையும் அழைத்துவரச்சென்ற அன்டி கோலி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நான் அவர்களிற்காக காத்திருந்தவேளை குண்டுவெடிப்பொன்று இடம்பெற்றது நான் தூக்கியெறியப்பட்டேன். நான் எழுந்து பார்த்தவேளை உடல்கள் நிலத்தில் வீழ்ந்து கிடப்பதை பார்த்தேன். நான் உடனடியாக எனது குடும்பத்தவர்களை பார்ப்பதற்காக சென்றேன்.
அவர்களை அங்கு காணவில்லை அதனை தொடர்ந்து நான் அங்கு காணப்பட்ட உடல்களிற்குள் அவர்களை தேடினேன் அங்கும் அவர்களை காணவில்லை. எனினும் பின்னர் அவர்களை கண்டுபிடித்தேன் அவர்கள் நலமாக இருக்கின்றனர் என அன்டி கோலி குறிப்பிட்டுள்ளார்.
இது நிச்சயமாக ஓரு குண்டுவெடிப்பு தான் மிகவும் சக்திவாய்ந்ததாக இது காணப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நிகழ்வு நடைபெற்ற அரங்கிற்கான வாயிலில் குண்டுவெடிப்பு இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
லீட்ஸை சேர்ந்த கரி வோக்கர் குண்டுவெடிப்பு சிதறல்களால் தனது காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் மனைவிற்கு வயிற்றில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் இசைநிகழ்ச்சிக்கு சென்றிருந்த மகள்களை அழைத்துச்செல்வதற்காக காத்திருந்த வேளையே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இறுதிப்பாடலை நாங்கள் கேட்டோம் அதன் பின்னர் பாரிய வெளிச்சம்போன்ற ஏதோ தோன்றியது பின்னர் சத்தம் கேட்டது புகைமண்டலம் தோன்றியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இசைநிகழ்விலிருந்து வெளியேறிக்கொண்டிருந்த வேளை பாரிய சத்தத்தை கேட்டதாக மற்றுமொரு பெண் தெரிவித்துள்ளார். நாங்கள் வெளியே வந்துகொண்டிருந்தோம் வாசல் கதவிற்கு அருகில் வந்தவேளை பாரிய சத்தம் கேட்டது அனைவரும் கதறத்தொடங்கினர். பாரிய வெடிகுண்டே வெடித்துள்ளது. அதன் தாக்கத்தை நான் நெஞ்சில் உணர்ந்தேன். அங்கு பெரும் குழப்பம் நிலவியது அனைவரும் அங்கிருந்து வெளியேற முயன்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இசைநிகழ்ச்சியை பார்வையிட சென்றிருந்த தனது சகோதாரியை அழைத்துவரச்சென்ற 22 மஜீத்கான் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சத்தம் கேட்ட பக்கத்திலிருந்தவர்கள் அனைவரும் உடனடியாக எங்கள் பகுதியை நோக்கி ஓடிவரத்தொடங்கினர். அவர்கள் மூடப்பட்டடிருந்த பாதை வழியாக வெளியேற முயன்றனர் அது முடியாததால் எந்த பக்கத்தால் தப்பி ஓட முடியுமோ அந்த பக்கங்களால் வெளியேற முயன்றனர் அங்கிருந்தவர்கள் அனைவரும் மிகவும் பதட்டத்துடன் காணப்பட்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அப்பகுதியில் காணப்பட்ட ஸ்னுர்க்கர் விடுதியின் மதுபானசாலை பணியாளர் இரத்தத்தில் தோய்ந்தபடி பலர் வீழ்ந்து கிடப்பதை பார்த்தேன் என தெரிவித்தார். இங்கு நபர் ஓருவர் வீழ்ந்து கிடந்தார் அவரது காலில் இருந்து குருதிவெளியேறிக்கொண்டிருந்தது இன்னொரு பெண்மணி முகத்தின் ஒரு பகுதியிலிருந்து இரத்தம் வழிந்த நிலையில் காணப்பட்டார் என அவர் தெரிவித்துள்ளார்.
பலர் இங்கு பதட்டம் அச்சம் ஆகியவற்றின் பிடியில் சிக்கியுள்ளனர். ஒரு யுவதி அச்சத்தில் உறைந்துபோயுள்ளார். இன்னொரு யுவதி அழுதவண்ணம் காணப்படுகின்றார். ஓரு பெண்மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.