வளைகுடா நெருக்கடி பாரிய யுத்தமாக மாறும் அபாயம்

184

வளைகுடாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை சர்வதேச ரீதியாக அதிகம் பேசப்பட்டு வரும் விடயமாக மாறியுள்ளது.

இந்நிலையில் கட்டார் மற்றும் ஏனைய வளைகுடா நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை யுத்தமாக மாற்றமடையும் ஆபத்து உள்ளதாக ஜேர்மன் எச்சரித்துள்ளது.

வளைகுடா நாடுகள் ஒன்றுடன் ஒன்று கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் முறை மிகவும் கடினமான மற்றும் கசப்பான நிலையை அடைந்துள்ளதாக ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் சிக்மார் கேப்ரியல் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

வளைகுடா நெருக்கடி தொடர்பில் பல நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர் ஜேர்மன் அமைச்சர் கருத்து வெளியிட்டுள்ளார்.

இதேவேளை ஈரானிலிருந்து ஐந்து விமானங்கள் கட்டாருக்கு சென்றுள்ளன. இவற்றில் உணவுப்பொருட்கள் அடங்கியுள்ளதாக தெரிய வருகிறது.

சவூதி அரேபியாவின் எல்லை நிலப்பரப்பில் இருந்து கட்டாருக்கு உணவுப் பொருட்கள் வரும் பாதைககள் மூடப்பட்டுள்ளன. இதன்காரணமாக கட்டாருக்கான கணிசமான உணவு தேவை தடைப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஈரானிலிருந்து உணவுப்பொருட்கள் அடங்கிய விமானங்கள் கட்டாருக்கு சென்றுள்ளன.

ஈரான் மற்றும் பயங்கரவாத குழுக்களுக்களுக்கு கட்டார் உதவி செய்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து வளைகுடா நாடுகள் பல கட்டாருடனான உறவுகளை துண்டித்துள்ளன.

சவூதி அரேபியா, பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கட்டாருக்கான தங்களின் வான்வழிகளை மூடியுள்ளன. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஈரான் தன்னுடைய வான்பரப்பை கட்டார் வரை விரிவுபடுத்தியுள்ளது.

இதேவேளை அண்மையில் இடம்பெற்ற கால்பந்து போட்டியின் போது லண்டனில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக மௌன அஞ்சலியில் இணைந்து கொள்ள சவூதி அரேபிய அணி மறுப்பு தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய அணி மௌன அஞ்சலியில் இணைந்து கொண்ட போது சவூதி வீரர்கள் மாத்திரம் அதில் இணைந்து கொள்ளாமை, சர்வதேச ரீதியாக சர்ச்சையான நிலைமை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் வளைகுடாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில், சர்வதேச நாடுகளுடனான ராஜதந்திர உறவுகளை பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வளைகுடா பிராந்தியத்தில் எழுந்துள்ள பதற்றத்தை தணிப்பதற்கு, குவைத் மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், ஈரான் கட்டாரிற்கு பாதுகாப்பு உதவிகளையும் செய்வதற்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளமை வளைகுடா பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE