லண்டனில் அடுக்குமாடி குடியிருப்பில் பற்றி எரியும் தீ

179

பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் அமைந்திருக்கும் 27 மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள்.

மேற்கு லண்டனில் Grenfell Tower என்ற 27 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் அமைந்துள்ளது.

இந்த கட்டிடத்தில் ஒரு பகுதியில் நள்ளிரவு 1.15 மணிக்கு பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தீயானது மளமளவென 27 மாடிகளுக்கும் பரவியுள்ளது.

பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த 200 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகிறார்கள்.

அடுக்குமாடி கட்டிடத்தின் உள்ளே இருக்கும் மக்கள் தங்கள் உயிரை காப்பாற்றுமாறு கதறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Grenfell கட்டிடத்தின் அருகில் இருக்கும் சிலர் கட்டிடம் தீப்பற்றி எரிவதை வீடியோ எடுத்து டுவிட்டரில் பதிவேற்றியுள்ளனர்.

லண்டன் தீயணைப்பு துறையும் இது சம்மந்தமான புகைப்படத்தை டுவிட்டரில் பதிவேற்றியுள்ளது.

சம்பவ இடத்தில் நின்று கொண்டே Fabio Bebber என்ற நபர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், கட்டிடத்தின் உள்ளே இருக்கும் ஜன்னல் பகுதியில் நின்று கொண்டு மக்கள் பலர் தங்கள் உயிரை காப்பாற்றுமாறு கதறி கொண்டிருக்கிறார்கள்.

அவர்களால் வெளியேற முடியவில்லை எனவும் அவர்கள் கூறுவதாக தெரிவித்துள்ளார்.

இன்னொரு நபர் கூறுகையில், கட்டிடத்தின் இன்னொரு பகுதியிலும் தீ பரவி வருகிறது. அதனால் உள்ளிருக்கும் நபர்கள் பயத்தில் கத்தி கொண்டு இருக்கிறார்கள் என கூறியுள்ளார்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், அதிக புகையை உள்ளிழுத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

லண்டன் ஆம்புலன்ஸ் சேவையும், தீயணைப்பு சேவையும் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கட்டிடத்தில் பரவி வரும் தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

SHARE